தொடர்ச்சி 3 : சாபமும் போரும் முடிவும்
பாஸ்கரோ அதிர்ச்சியில் விழுந்து உறங்கியவன்தான் எழவே இல்லை. ரேஸ்மியும் தான். ஆனால் வீராயியாக அவ்வப்போது விழித்தாள்.
மணித்துளிகள் சூறாவளியாய் கடந்தன. வீராயி விழிக்க நினைத்தாலும் ரேஸ்மியின் உடலும் கண்களும் ஒத்துழைக்க வேண்டுமே அதனால் தன்னையறியாமல் மீண்டும் உறக்கத்திற்கு சென்றாள்.
பாஸ்கரை அழைப்பது போல் அவனுக்கொரு உணர்வு மெதுவாக விழிக்க, நேற்று நடந்தது எல்லாம் கனவா என்று நினைத்துக்கொண்டு எழுந்தபோது அரசன் மறுபடியும் அவன் முன் "உறங்கும் நேரமில்லை இனி, காலம் கரைந்து கொண்டிருக்கிறது என்று கூறிவிட்டு மறைந்தான்"..
"இவன் யார்ரா மறுபடியும்" என்று நினைத்தவன் சயநினைவு வந்தவனாக பார்த்தபோது
அவன் இருந்த இடம் பாழடைந்த வீடாக காட்சியளித்தது. தன்னைச்சுற்றி போடப்பட்டிருந்த மந்திர வரைபடங்களும் அவனுக்கு ஏதோ உணர்த்தின.
எழுந்தவன் நேராக டீ கடைகாரரைக் காண அவனது அறைக்கு செல்கையில் அவனும் அவனது மனைவியும் நாயும் இவனுக்காகவே காத்திருந்தது போல் தயாராக இருந்தனர். அவர்களை அருவமாக பார்த்ததும் பாஸ்கர் திரும்பி ஓட முற்பட.
டீகடைகாரனோ "நில்லுங்கள் "என்றான்.
"எங்களுக்கு இடப்பட்ட கட்டளை உங்களிடம் ஒன்றை காட்டுவதே எங்கள் பணி, அதோ அங்கு" என்று கை காட்டிய இடத்தில் ஒன்றும் தெரியவில்லை பாஸ்கர் கண்களுக்கு.
"இனி உங்கள் கையில் "என்று பணிவுடன் வணக்கம் தெரிவித்துவிட்டு விடை பெற்றான்.
ஓவியங்களும் பனை ஓலையும் :
__________________________________
பாஸ்கருக்கு அனைத்தும் கனவு மாதிரியே தெரிந்தது. ரேஸ்மியை திரும்பி பார்த்தான் .அவள் இன்னும் உறக்கத்தில்.
ஏதோ ஒன்றை முடிவு செய்தவனாக முன் சென்றான் பயத்துடன் அவர்கள் காட்டிய இடத்துக்கு.
சிறிது தூரம் செல்கையில் ரேஸ்மி அழைக்க "என்னங்க எங்க போரீக" என்று கேட்க!
எதிர்பாராத அந்த அழைப்பால் தடுமாறி அங்கிருந்த வேர் போன்ற ஒன்றை மிதிக்க! திடீரென்று கீழிருந்த நிலம் சுரங்கக் குழி போல் திறக்க ! அதனுள் தட தட வென்று உருண்டு விழுகையில், கையில் ஒன்றை பற்றி அதை இழுத்து எழுந்து நிற்கையில் ! ஒரு பெரிய பாறாங்கல் உருண்டு விழுந்த சத்தம் கேட்டது. விழுந்த இடமும் சமதளமாக இருந்ததை உணர்ந்தான்.
இருட்டிலும் கண்களை விரித்து விரித்து பார்வையை கூர்மையாக்கி பார்த்தான் காரிருளாகவே இருந்தது.
"டீ கடை காரன் நம்ம சோளிய முடிக்க இங்க வரச்சொன்னானோ
என்ன இதுவே ஒரு மாளிகை மாதிரி இருக்கு, இந்த இடத்தில் இப்டி ஒரு இடமா. யாருக்குமே தெரியாது போல" முன் பின் திரும்பியவன் ஒன்றை கவனித்தான்.
"ஏதோ ஒரு உருவம் நம்மளையே பார்க்குற மாதிரி இருக்கு பின்னாடி. மெதுவா திரும்புவோம், லைட்டர் எங்க இருக்கு " என்று தேடினான் தனது உடையில்.
மெதுவாக திரும்ப நினைக்க ஆனால் வேகமாக திரும்பிவிட்டான் பயத்தில். லைட்டரின் வெளிச்சத்தில் ஒரு வெள்ளைத் திரைச்சீலைக்குள் ஒரு உருவம் இருப்பது போல் உணர்ந்தான்.
அதே சமயம் தன் தலைக்கு பின்புறம் ஏதோ உணர்ந்தவனாக திரும்ப ஒரு உருவம் கத்தியால் பாய நெஞ்சை கிழித்து சென்றது..
"ஆஆஆ" என்று கத்தியவன் பிறகு உணர்ந்தான் "தனக்கு ஏதும் அல்ல " அது பின்னால் இருந்த வெள்ளை உருவத்தின் நெஞ்சில் பாய்ந்தது அது. அது ஒரு வெற்று பிம்ப காட்சி" என்று பிறகு உணர்ந்தான்.
திடீர் திடீரென்று ஏதேதோ காட்சிகள் கண்முன் நடப்பது போல் உணர்ந்தான். சில உரையாடல்களும் கேட்டான். அது பழைய தமிழில் இருந்தது.
"வெட்டுங்கள் அவன் தலையை, கை கால்களை உடையுங்கள், எரித்துவிடுங்கள், ஒருவரையும் விடாதீர்கள்" என்ற அவன் காதுகளில் விழுந்தவாறு இருந்தன குரல்கள், மிகப்பெரிய போர்கள காட்சி கண்ணில் படுகிறது, பெண்கள் பலாத்காரம் செய்யப்படும் காட்சிகளும், குழந்தைகள் தூக்கி எறியப்பட்டு நசுக்கப்படுவது போல காட்சிகளும், ஒரு பெண் வாளால் சண்டையிடுவது போலவும் கண்டான். வியர்த்தது அவனுக்கு! அந்த " இரவு மரிக்கப்போகும்" தருணத்திலும்.
லைட்டரை மெதுவாக மேலே உயர்த்தியவன் சில ஓவியங்களை கண்டான்.. அதில் மூதாதையர்அரச குடும்பத்தார்கள் ஓவியங்கள், அரசர்கள் ராணிகள், மந்திரிகள் புரவிகள் மாளிகைகள் அதனைசுற்றிய அகலி மற்றும் ஒரு நில வரைபடம் அதில் மன்னர் சாம்ராஜ்யம் என்று ஒரு முழுமையற்ற தமிழ் எழுத்துகளால் எழுதப்பட்டிருந்தன.
அதற்கடுத்த ஓவியங்களில் அரசன் முன் ஒருவன் மண்டியிட்டு தலை வணங்குவதை போலவும்! அவனை அரசன் ஆசீர்வதிப்பது போலவும் இருந்தது.
அதற்கடுத்து இளவரசன், தன் ராணி மற்றும் சிறிய மகளுடன் ஒரு ஓவியம்.
பிறகு போர்க்கள காட்சியும், பிணக்குவியல்களும், பிணங்கள் கொண்டு செல்லப்படுவதும், குழிகள் வெட்டப்பட்டு அங்கு பிணங்கள் குவிக்கப்பட்டு மண்ணால் மூடப்பட்டு சமமாக்கப்படுவதும் அதில் ஆலமரக்கன்றுகள் நடப்படுவதுமாக எதையோ விவரித்தது அவனுக்கு.
பிறகு அதன் தொடர்ச்சியாக அரண்மனைக்கு முன் நுழைவு வாயிலில் முக்கிய தலைவர்களின் தலையில்லா உடம்புகள் கோட்டை வாயில்புறத்தில் தொங்கவிடப்பட்ட ஓவியங்களும் அவனுக்கு கிலியை உண்டாக்கின.
"இவ்வளவு கொடுமையான ஒரு போரா" என்று நினைத்தான்.
அதற்கடுத்து தனியாக சில ஓவியங்கள் மிக்க வேலைப்பாடுடன் வீரியமாக வரையப்பட்டிருந்தன. இப்போது வரைந்தது போலவே அந்த ஓவியம் இருந்தது. அது திடகாத்திரமான ஆணழகனாக முகத்தில் வெட்டுக்காய தழும்புடன் வாளுடனும் மறுகையில் தலையுடனும் திமிறி நின்றது ஓர் ஆணின் ஓவியம்.
ஆனால் அவன் உற்று பார்த்தபோது அந்த ஓவியம் போர்க்களத்தில் உள்ள அரசனை வெளிப்படுத்தியது. உடல் முழுவதும் ரத்தக்கறையாகவும், எதிரே பல உடல்கள் தலைகள் துண்டிக்கப்பட்டு கிடந்தன.
இன்னொரு ஓவியம் அவனை திகைக்க வைத்தது அது மக்கள் எலும்பும் தோலுமாகவும், மாடுகள் ஆடுகள் என வகைதொகையில்லாமல் வீழ்ந்து கிடந்தன. பிறகு ஒரு பெண்ணும் அதே உக்கிரத்திடன் ஆனால் அருகில் ஒரு விதமான உருவம். ஆம் அவன் கண்ட அதே அகோரம். பிரமித்து நின்றான்.
அப்போது அவனை
இடைமறித்தது ஒரு குரல், "உள்ளே வாருங்கள் "என்று அழைத்தது. இது அந்த அரசனின் குரல் போன்றே இருந்தது.
திடுக்கிட்டவனாக திரும்பி பார்க்க அதே அரசன் !ஆலமரத்தில் எச்சரிக்கை செய்தவன்.
இந்தக் குகையில் இந்த அரசனா! என்று தடுமாறியவன், தயங்கி தயங்கி அவனால் திறக்கப்பட்ட குறுகிய சுரங்கவழியில் சென்றான்.
அப்போது ரேஸ்மியின் நியாபகம் வர " ரேஸ்மி" என்று பாஸ்கர் அழைக்க , அரசனோ "அமைதி அமைதி. இது அதற்கான நேரம் அல்ல " என்றான்
"நில்லுங்கள் நீங்கள் யார்?" என்று கேட்டான் பாஸ்கர்.
"அதற்காகத்தான் உங்களை இங்கு தங்கவைத்தேன். வாருங்கள் எல்லாம் தெரியவரும்" என்றான் அரசன்.
அவன் லைட்டரும் அணைந்த நேரத்தில் தானாக எரிந்தன தீப்பந்தங்கள். தங்ககலரில் ஜொலித்தது அந்த அறை. ஆயுதங்களும் கேடையங்களும் ஈட்டிகளும் வாற்களுமாக ஒரு புறம் நிறைந்து கிடக்க , அதை பார்த்தாவாரே வியப்பில் நகர்ந்து கொண்டிருந்தான்.
இறுதியில் அந்த அறை வந்தது. முழுவதும் மந்திர பொருட்களால் பாதுகாப்பாக அடைக்கப்பட்டு இருந்தது அந்த அறை. மஞ்சளும் குங்குமமும் மஞ்சள் கயிறுகளும் ஒரு பாறையில் பூசப்பட்டும் கட்டப்பட்டும் இருந்தன. சில செடிகளும் சில ஜந்துக்ளும் அந்த இடத்தில் காட்சியளித்தன.
அரசனோ " இதோ உங்கள் கேள்விக்கான பதில் என்று ஒரு பாறையை காண்பித்தான்" .
பாஸ்கரோ " என்ன அது என்று கேட்க".
அரசனோ " உள்ளே அகோரனை அடக்க தேவையான ஆயுதம் என்றான்"
"ஆமா அத ஏன்ட்ட ஏன்யா சொல்ற. நீ சொல்றத பார்த்தா
நானா " என்று வியப்பில் கேட்க.
ஏன் நான் என்று வினவினான்? பாஸ்கர்.
உங்களுக்காகத்தான் பல வருடங்களாக இதை பாதுகாத்தோம். "காலம் வரும் வரை காத்திருந்தோம்" என்று கூறினான்.
அதே நேரத்தில் ரேஸ்மியோ " அய்யய்யோ என்னங்க என்னங்க" என்று கத்தினாள். பாஸ்கரின் குரல் மட்டும் பதிலளித்தது "அங்கயே இரு வந்துடுறேன் "என்று. அது பாஸ்கரல்ல. அரசன் ! அவனின் குரலில் பதிலளித்தான்.
அரசன் விவரிக்க தொடங்கினான் பாஸ்கருக்கு..
மன்னர் பேரரசு:
________________
மன்னர் சாம்ராஜ்யம். ஆம் இயற்கையின் அத்துனை அழகும் ஒரு சேர படைக்கப்பட்ட சாம்ராஜ்யம் அது. ஒரு பேரரசர் அவதரிக்கும் முன் ஆட்சிபுரிந்த மன்னர்கள் மன்னரை குறு நில அரசாக ஆட்சிபுரிந்தனர். அன்று பௌர்ணமி நாள். நிலவு முழுவதுமாக தன்னழகை காட்ட, அனைத்து நட்சத்திரங்களும் சந்தோசத்தில் சிரிப்பது போல் ஜொலிக்க சுபதினத்தில் களப்பிரான் , அரசன் முதலாம் வர்மனுக்கும் குந்தள தேவி க்கும் பிறந்தார். அன்று முதல் மன்னர் உச்சானியின் புகழுக்கே சென்றது. அதன் பிறகு களப்பிரானுக்கு தமையனாக இளவரசர் உதிரன் பிறந்தார்.
வருடங்கள் கடக்க களப்பிரரும் உதிரனும் பல போர்கள் அண்டை நாட்டின் மீது தொடுத்து வெற்றிகண்டு தன் நாட்டுடன் இணைத்து யாரையும் கொடுமைபடுத்தாமல் தோற்ற அரசனையே அரசனாக நியமித்து கப்பம் மட்டும் செலுத்த சொன்னார்கள். மற்ற அடிபணிந்த அரசுகளும் செல்வங்களை அள்ளி கொடுக்க ஜொலித்தது மன்னர் சாம்ராஜ்யம். சிற்றரசு பேரரசாக மாறியது.
இவ்வளவு இருந்தும் மன்னர் சாம்ராஜ்யம் தனக்கு அருகில் இருக்கும் கோசலை சிற்றரசின் மீது படையெடுக்கவில்லை. ஏனோ களப்பிரானுக்கு ஒரு பிரியம் கோசலை சிற்றரசு மீது. அவ்வளவு பச்சப்பசேல் என்று பசுமையாக காட்சியளிக்கும் இயற்கை தேவதை அது.
தன் அரண்மனைக்கருகில் உள்ள பிரான்மலை உச்சியில் இருந்து பார்க்கையில் அவ்வளவு அழகு கோசலை. இதனாலயே பிரான்மலை உச்சியில் சிறு மாளிகை எழுப்பி அமைதி தருணங்களில் வந்து ரசிப்பதுண்டு.
ஒரு நாள் தமையன் உதிரன் களப்பிரானிடம் " அரசே உங்கள் ஆசையை நிறைவேற்ற எனக்கொரு வாய்ப்பு தாருங்கள். எங்களுக்கு தேவையானதை எல்லாம் நாங்கள் கேட்காமலயே நீங்கள் அருளும்போது, நாங்களும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளோம்" ஆகவே உத்தரவிட்டால் கோசலை சிற்றரசிடம் பேசி அங்கே கடம்பவன காட்டுக்குள் ஒரு மாளிகையை எழுப்புகிறோம். நீங்களும் ஓய்வுகாலங்களில் அங்க அமைதியாக இளைப்பாரலாம்" என்றான்.
களப்பிரானோ "சற்று தூரத்தில் இருந்து பார்த்தால் அதுஅழகாத்தானே இருக்கிறது. அதனால்தான் கோசலையின் மீது போர் தொடுக்க விருப்பமில்லை. களப்பிரானுக்கும் மனதின் ஓரத்தில் ஒரு ஆசை துளிர்த்தது தந்தையின் எச்சரிக்கையையும் மீறி. ஆகட்டும் உங்கள் விருப்பம் என்றான்.ஆனால் அன்பின் வழியில்" என்றான்.
முன்பிருந்தே கோசலை அரசு மோதல் போக்கைத்தான் கடைபிடித்தது வர்மன் காலத்திலேயே. தந்தை வர்மனும் களப்பிரானிடம் "அந்த தேசத்தை தொடவேண்டாம். அது நமக்கு நல்லதல்ல என்று நம் மூதாதையர்களே சொல்லிச் சென்றுள்ளனர்.ஆதலால்தான் நாம் அந்த தேசத்தை ஏதும் செய்யவில்லை. நீயும் அவ்வாறே நடப்பாய் என்று நம்புகிறேன் "என்றார்.
ஆதலால்தான் களப்பிரான் பிரான்மலையில் சிறு மாளிகை அமைத்து அழகை ரசித்தார். தமையனுக்கு மணமுடித்து வைத்தவர் தனக்கு மணமுடிப்பதில் நாட்டமில்லை என்பதால் தனிமையாகவே வாழ்ந்தார். ஆனால் தன் தமையனின் மகள் தான் அவரது பொழுதுபோக்கு. இருவரும் பிரான்மலையின் உச்சியில் நேரம் போவதே தெரியாமல் பொழுதை கழித்தனர். அவள் பெயர் பார்கவி. பார்கவிதான் அவர் உலகம். அவளுக்கு சிலை செய்வது, எழுதுவது, வில் பயிற்சி என சகலத்தையும் கற்று கொடுப்பார் களப்பிரான். இதனால் திருமணத்தின் மீது ஒரு நாட்டம் இல்லாமல் போனது.
கோசலையும் ,காதலும் :
_________________________
உதிரனும் தன்னுடன் சிறு படையை அழைத்து சென்றான் ,கோசலை சிற்றரசனை சந்திப்பதற்கு. எல்லைக்கு சிறிது தூரத்திலேயே படையை நிறுத்திவிட்டு, உதிரனும் பாதுகாப்புக்கு மூவருமாக கோட்டைக்குள் சென்றனர். கோசலையின் அரசன் முத்தாரனுக்கு தகவல் வர ,சந்திக்க சம்மதம் தெரிவித்தான்.
படைவீரர்களோ அனைவயரும் ஆஜானுபாகு போல காட்சியளிந்தனர்.வாட்களும் விற்களும் வித்தியாசமாக இருந்தன. இதுவரை கண்டிராதவை. நிச்சயம் இழப்புகளை ஏற்படுத்தும் வல்லமை அந்த ஆயுதங்களுக்கு. அவர்களும் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. ஆனால் மீறினால் மரணமே பரிசாக கொடுத்தனர். மந்திர தந்திரங்களுக்கு பெயர்பெற்றவர்கள் என்ற பெயரும் உண்டு இவர்களுக்கு.
அதையெல்லாம் பார்த்து கொண்டே சென்றவன் கோட்டையை நெருங்கியதும் அமைதியாக நின்றவன், கோட்டையின் அமைப்பை பார்த்தான் பலமான கோட்டை அது.எதிரி வெல்வது என்பது மிககடினம். அந்த கோட்டை வெளியே தெரிய வாய்ப்பே இல்லை. முழுவதும் பாதாள கோட்டையாகவே இருந்தது.
உள்ளே சென்றவன் அரசன் முத்தாரன் வருகைக்காக நெடுநேரம் காத்திருந்தான். உதிரனுக்கோ கோவம் தலைக்கேறியது. "ஒரு சிற்றரசன் என்னை அவமதிக்கிறானா" என்று.
முத்தாரன் அங்கே வர, உதிரனோ "நீ தான அந்த அரசன் "என மனதுக்குள் பொங்க,
முத்தாரனோ "ம்ம் சொல்லுங்கள் என்ன வேண்டும் " என அதட்டும் தோனியில் கேட்க
அவனோ கோவம் வந்ததை அடக்கி, "எங்கள் பேரரசருக்கு உங்கள் கடம்பவன காட்டில் ஒரு சிறு மாளிகை இங்கு எழுப்ப உங்களிடம் அனுமதி பெற வந்தோம்" என்றான்.
முத்தாரனோ"ஏன் உங்கள் நாட்டில் இடமில்லையோ" என நக்கலாக கேட்க,
உதிரனோ " விருந்தாளியாக வந்ததனால் அமைதி காக்கிறேன் இல்லையேல் " என்று உரும.
முத்தாரனோ " ம்ம் யாரிடத்தில் வந்து கூச்சலிடுகிறாய் என்று அதட்டினான்".
உதிரனோ " உனக்கு அவகாசம் கொடுக்கிறேன். நல்ல பதிலாக அனுப்பு " என்று கூறிவிட்டு நகர முற்பட.
முத்தாரனோ " இதோ முடிவு. முடியாது! தாமதிக்காதே ! சென்றுவிடு. இல்லையேல் உன் சிரத்தை உன் கைகளுக்கு பரிசாக அளிப்பேன்" என்றான்.
களப்பிரானுக்கு "அமைதிகாப்பேன்" என்று வாக்குறுதி கொடுத்ததால் உதிரன் உக்கிரத்தை அடக்கி கொண்டு கோவத்துடன் ஒங்கி ஒரு காலை தரையில் மிதிக்க கோட்டையே ஆடியது போல் இருந்தது.
அப்போது முத்தாரனின் இளைய மகள் தன்னை பார்த்துக் கொண்டே இருப்பதை உணர்ந்தான்.
ஏனென்றால் முத்தாரனின் முன் இவ்வளவு தைரியமாக யாரும் பேசியதில்லை இதுவரை. அவன் கம்பீர அழகில் மயங்கினான் செல்லாயி.
அவன் கோட்டையை விட்டு வெளியேறும் வரை பார்த்துக் கொண்டே இருந்தாள்.
உதிரனுக்கு கோவத்திலும் அவள் அழகில் மயங்கியதால் அமைதியாக மன்னருக்கு வந்து சேர்ந்தான்.
களப்பிரானிடம் அமைதியாக நடந்ததை கூறினான். களப்பிரானுக்கு இது அவமானமாக தோன்றியது. ஒரு "சிற்றரசனுக்கு இவ்வளவு அகம்பாவமா" என்று மனதிற்குள் நினைத்து கொண்டான்.
"உதிரா , விடு பரவாயில்லை. போர் தற்போது வேண்டாம். அமைதிகொள்" என்றான் களப்பிரான்.
ஆனால் மனதிற்குள் தன்னையும் தன் அரசையும் தமையனையும் அவமானப்படுத்தியதை வெறுத்தான்.
"அமைதியாக கேட்டால் எதுவும் கிடைக்காது போல " என்று நினைத்து கொண்டான் களப்பிரான்.
கோசலை தாக்குதலும் - உதிரன் செல்லாயி காதலும்:
__________________________
உதிரனுக்கும் மனம் அமைதி பெறவில்லை. முடிவெடுத்தான் கோசலைக்கு முடிவுகட்ட. அதே தருணம் உள்நாட்டிலும் களப்பிரான் ஆட்சிக்கும் ஊறு விளைவிக்கும் ஒரு எதிரி கும்பல் சமயம் பார்த்து இருந்தது. இருவரையும் கொன்று ஆட்சியை கைப்பற்ற.
உதிரன் ஒற்றர்களை அனுப்பி கோசலையை வேவு பார்த்தான். அதே "தருணத்தில் செல்லாயியை காண துடித்தான்.
இடையில் உதிரனே வேவு பார்க்க சென்று செல்லாயியையும் காண விரும்பினான்.
கோட்டைச்சுவற்றின் அருகிலிருந்த மதிலில் ஏறி பார்த்தவனுக்கு வியப்பு " தனி ஆளாக ஒரு பெண் பத்து ஆண்களை புரட்டி எடுப்பதை. எந்த ஆணும் அவளுக்கு ஈடுகட்ட முடியவில்லை. வாள் வீச்சிலும் வேகம். அம்பெய்தலிலும் வேகம். சாகசக்காரியாக இருந்தாள்".
முத்தாரன் சிறு பெண்கள் படையொன்றும் வைத்திருந்தான். ஒவ்வொரு பெண்ணும் இரு ஆண்களுக்கு சமம் போல வீரத்தில் காட்சியளித்தனர். இப்போது உணர்ந்தான் உதிரன் ,முத்தாரனின் பிரம்மாஸ்த்திரம் எது என்று.
அந்த பெண்கள் மறைமுகமாக தாக்கும் கொரில்லா படையை போல் பயிற்சி பெற்றவர்கள் என்பதை கண்டுணர்ந்தான்.
அப்போது செல்லாயி அழகிய பதுமையாக தோழிகளுடன் காட்டுக்குள் வருவதை பார்த்தான். ஆகா இதான் தருணம் என்று முடிவு செய்து ஒரு தந்திரம் செய்தான். அந்த தந்திரமும் பலித்து அதுவே முதல் தனிமை சந்திப்பை உருவாக்கி காதலை வலுக்கச் செய்தது. இப்படியே காதல் தொடர்ந்தது. மறுபுறம் திட்டத்தையும் தீட்டினான் உதிரன்.
ஒரு நாள் ! கோசலை கோட்டைக்கு வெளியே குழுக்களாக தங்கிருக்கும் அவன் படைவீரர்களை தாக்கி கோட்டையை முற்றுகையிட முடிவு செய்தான் உதிரன். ஆம் அவர்கள்தான் தோற்றத்தில் விவசாயிகள் போல் மாறி விவசாயம் செய்துவந்தனர். குடும்பமாக வசித்தனர். இவர்களை அழித்தால் கோட்டை நம் வசம் என்று முடிவு செய்தான் ஒரு நாளை. அதே திட்டத்தில் அவன் கூட இருந்த எதிரியும் ஒரு திட்டம் தீட்டியது உதிரனை தீர்க்க.
செல்லாயி தன் அக்காள் வீராயிடம் தனது காதலை பற்றி சொல்ல, அவளோ திடுக்கிட்டவளாக சுதாரித்தவள் பிறகு சொன்னாள் " நீ ஒரு குழந்தை செல்லாயி. காதல் கண்ணை மறைக்கும் வயது உனக்கு. அவன் வேற்று நாட்டவன். அவன் திட்டம் தெரியாது நமக்கு.புரிந்து கொள்" என்றாள்
சில நாட்கள் கடந்தன. செல்லாயி யின் பிடிவாதத்தை உணர்ந்த வீராயி "சரி பார்ப்போம். ஆனால் தந்தையை எவ்வாறு சமாதானம் செய்வது என்று தெரியவில்லை" என்றாள்.
செல்லாயி யும் "அக்கா என்றாள் அக்காதான் " என்று தனது அம்மா இல்லாத குறையை வீராயியிடம் போக்கி கொண்டாள்.
புறாவின் மூலம் தூது அனுப்பினாள் சந்திப்பதாக அதே நாளில். ஆம் நாளை. அவர்கள திட்டம் தீட்டிய நாளும் அதுவே.
உதிரனோ காதல் மயக்கத்தில் போரை தடுக்க முயல ! ஆனால் கைமீறிப் போயிருந்தது அனைத்தும். சரி ஆகட்டும் பார்ப்போம் என்று முடிவு செய்தான்.
திட்டப்படி நாளை அதிகாலை தாக்குதல் முடிவு செய்யப்பட்டது. படைகளை நள்ளிரவே தயார் செய்து முதலில் இவர்களை குடும்பமாக முற்றுகையிட திட்டம். அப்போதுதான் இரத்தம் சிந்தாமல் சரண் அடைவார்கள் என்பது உதிரன் திட்டம்.
அதிகாலையும் வந்ததது. சத்தமே இல்லாமல , கோட்டைக்கு வெளியில் காட்டுக்குள்! தூரத்தில் இருந்த குடும்பங்கள் அனைத்தும் முற்றுகையிடப்பட்டன.அனைத்து குடும்பங்களும் சரண் அடைய வற்புறுத்தப்பட்டனர்.
ஆனால் சிலர் எதிர் தாக்குதல் நடத்த முற்பட வலுக்கட்டாயமாக பணிய வைக்கப்பட்டனர். உதிரனின் சொந்த பகையாளி தன் சக படைவீரனை தானே கொன்று அவர்கள் மீது பழியை போட. மறுபடியும் பகையாளியே ஒரு கூடாரத்திற்குள் நுழைந்து எதிரியை கொன்று அவன் மனைவியை பலாத்காரம் செய்து கொன்றான்.
இதனால் முத்தாரன் படைவீரர்களும் உயிரே துச்சமென சண்டையிட முயல போர் உக்கிரமானது.அநேக வீரர்களின் தலைகள் உருண்டு விழுந்தன. செய்தி கோட்டைக்குள் பரவ! முத்தாரன் வீரர்களும் மறைந்து இருந்து தாக்க! அம்புகளை எய்ய உதிரனின் படையும் இழப்புகளை சந்தித்தது.
கோவமடைந்த உதிரனின் வீரர்கள் கண்ணாபிண்ணா வென்று வெறித்தனமாக போரிட்டனர். கண்ணில் பட்டவர்களை கொன்று குவித்தனர். பெண்களையும் தூக்கி சென்றனர். பலர் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். அழுது கொண்டு பயந்து ஓடிய குழந்தைகளின் தலையும் துண்டாகின.
உதிரன் குதிரையில் பலமாக போரிட்டு கொண்டிருந்தான். இரு கைகளில் வாள் வைத்துகொண்டு அநாயசமாக பலர் நெஞ்சில் சொருகினான். முத்தாரன் வீரர்களின் தலைகள் பல உருண்டன இவன் கையால். இதனால் இரண்டு கோட்டைகளின் வாயிற்கதவுகள் இவனது ஆளுகைக்கு வந்தன. ஆனால் உள்ளே செல்ல முற்படவில்லை.
கோசலையின் கொரில்லா பெண்கள் படை மாறுவேடத்தில் காட்டுக்குள் போது சபலத்தை உருவாக்குவது போல் நடித்து, உதிரனின் வீரர்களை கொன்றனர். ஆங்காங்கே வேல்களுடன் பலமாக குத்தி தள்ளினர். குறுகிய இடமாதலால் கதிரனின் படை பலத்த இழப்புகளை சந்தித்தது. இதையெல்லாம் அறியாத செல்லாயி வழக்கமான இடத்தில் காட்டின் நடுவில் காத்துகொண்டிருந்தாள் உதிரனுக்காக.
உதிரனோ போரின் முகம் மாறிவிட்டதே என்று அவனும் உக்கிரமாகி இரத்த வெறியானது. கோசலையின் படைதளபதிகளில் ஒருவன் உதிரனையே திகைக்க வைத்தான். ஏதோ மந்திர சக்தி உள்ளதுபோல் பலபேரை துவம்சம் பண்ணினான். இவனிடத்தில் உதிரனே தடுமாறினான். அவன் கைதான் பலம் என்று உணர்ந்தவனாக மொத்த பலத்தையும் திரட்டி தன் வாளால் அவன் கேடயத்தை ஓங்கி அடிக்க, படைத்தளபதி தடுமாறிய நேரத்தில் உதிரனின் வாள் அவன் கைகளை பதம்பார்த்தது. மறு நொடியே தலையையும் பதம்பார்த்தது.
உதிரன் தன் படையை கிராமங்கள் பக்கம் செலுத்தி முன்னேற அங்கே அவன் கண்ட காட்சி அவனுக்கு மூச்சே விடமுடியாத அளவுக்கு திணறினான். ஆம் பல பெண்களின் உடல்கள் அலங்கோலமாக கிடந்தன, குழந்தைகள் முதியவர்கள் என கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்தனர். இதனை உதிரன் எதிர்பார்க்கவில்லை.
பதிலுக்கு முத்தாரனின் படைகளும் மன்னரைச் சேர்ந்த கிராமங்களை தாக்கி அழித்தனர். அங்கு கர்ப்பினி பெண்கள் கூட கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்தனர். ஒரு கர்ப்பிணியின் வயிறு கிழிக்கப்பட்டு ஏழு மாத சிசு வெளியில் இழுக்கப்பட்டு தலை வெட்டப்பட்டிருந்தது. முதியவர்கள் உடல்கள் இரண்டாக கிழிக்கப்பட்டிருந்தன, கைகால்கள் வெட்டப்பட்டு தலை இல்லாமல் கிடந்தனர். சிறு சிறு நிலங்களும் இரத்தத்தில் மிதப்பது போல் இருந்தன.
இதே போல் மன்னர் படையும் செய்திருந்ததை பார்த்த உதிரன் ,நம் படை இவ்வாறு செய்யாதே என்று உணர்ந்தவன். தன் படையோடு விதுரன் வந்தது நியாபகத்துக்கு வந்தது. அவன் தான் செய்து இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு வெறி மேலும் ஏறியவனாக அவனை நோக்கி குதிரையை செலுத்தினான். விதுரன் சென்ற இடங்கள் எல்லாம் தீக்கிரையாகி இரத்தக்காடாக மிதந்திருந்தது. உதிரனும் குதிரையை வேகமாக செலுத்த வழியில் தன் படைவீரர்கள் பெண்களை பலாத்காரம் செய்ததை பார்த்தவன், குதிரையை வலப்பக்கம் திருப்பி சென்று ஒரே வீச்சில் மூன்று தலைகளையும் துண்டாடினான் தன் படை வீரர்கள் என்றும் பாராமல்.
ஆம் திட்டத்தின் போது தெளிவாகி விளக்கி இருந்தான் " படை வீரர்களுடன் மட்டுமே போர், பெண்களோ குழந்தைகளே முதியவர்களோ தாக்கப்பட கூடாது "என்று.
காதல் & பாசத்திற்கான பழிவாங்கல்:
______________________________________
குதிரையை மேலும் செலுத்தியவன் காதில் பழக்கப்பட்ட குரல் விழுந்தது. காப்பாற்றுங்கள் என்று. படையை கிழக்கு பக்கம் செல்ல ஆணையிட்டவன் , குரல் வரும் திசையை நோக்கி சென்றபோது அங்கே ஒரு பெண் கொடுமையாக .... ஆம் விதுரன் மற்றும் அவன் படைவீரர்களும் செல்லாயியை ..... இதைக் கண்டு பொறுக்காதவனாக குதிரையில் இருந்து குதித்த உதிரன் இரு வாள்களையும் எடுத்து அங்கிருந்த விதுரன் மற்றும் ஆறு வீரர்களையும் சரமாதாரியாக வெட்டி தள்ளினான். இதில் விதுரன் இரண்டு கையும் துண்டானது. சிலர் தலை துண்டானது. சிலர் தலை இரண்டாக பிளந்தது.
அதே நேரத்தில் விராயி யும் அவள் படையும் மேற்கு பக்க கிராமத்தில் நடந்த சண்டையில் தீவிரமாக போரிட்டது.. வீராயி உடையெங்கும் இரத்தத்தில் அபிசேகம் செய்தது போல் இருந்தது. வீராயியை அம்பில் குறி வைத்த இரு வரை ! அம்பு இவளை தாக்கும் முன்னரே இவள் வாள் அவர்களது நெற்றியில் இறங்கியிருந்தது.
திடகாத்திரமான உதிரனின் முக்கிய தோழன் வீராயியுடன் வாள் வாச்சில் திணறியடிக்க வீராயியும் கேடத்தை தூக்கி எறிந்துவிட்டு ஒற்றை வாளுடன் அவனுடன் மல்லுகட்டினாள். இரண்டு புறமும் மாறி மாறி கால்களை வைத்து அவன் பார்வையை ஏமாற்றி அவன் வலது கையில் வெட்ட சுதாரிப்பதற்குள் இடது கையை இழந்தான். அடுத்த நொடி நேராக தலையில் இறக்கினாள் வாளை. படைத்தலைவன் இல்லாததால் உதிரனின் படை சிதறியது.
செல்லாயியை இரண்டு கைகளால் எடுத்து மடியில் படுக்க வைத்தவன் " என்னை மண்ணித்து விடு செல்லாயி. என்று கதற. ஏன் இந்த போர்?. ஏன் இந்த அவசரம்? சுமூகமாக வருகின்ற வேலையில்? "உன்னோட வாழ நினைத்து ஆசையாக வந்த எனக்கு இதுதான் பரிசா எ" ன்று கேட்டவளுக்கு பதில் சொல்ல முடியாமல் துடித்தான்.
இவர்கள் இருவரையும் முத்தாரனின் படைவீரன் பார்த்து விரைந்து அவனுக்கு தகவல் கொடுத்தான். கோவத்தின் உச்சிக்கு சென்றவன் படைகள் அனைத்தையும் கோட்டைக்குள் வர உத்தரவிட்டான். இனி ஒருவரும் உயிரிழக்க கூடாது நம் பக்கம். மன்னர் மண்ணாக சபதம் எடுப்போம் என்றான் முத்தாரன்.
செல்லாயியை பார்த்து கூனிக்குறுகி பதில் ஏதும் சொல்ல முடியாமல் தூக்கிச்செல்ல முற்பட , வேண்டாம் நான் பிழைப்பது அரிது. நீங்கள் தந்த பரிசுக்கு மிக்க நன்றி. இதற்கு நானா என்று சொன்னபோது அதற்கடுத்த வார்த்தைகள் காற்றில் கரைந்துபோயின.
ஆஆஆ என்று விண்ணை நோக்கி கத்தியவன் அவள் கண்களை மூடி நெற்றியில் முத்தமிட்டான். திரும்பி பார்த்தவன் குற்றுயிராக இருந்தவர்களின் தலையிலே வெட்டி அனுப்பி வைத்தான். முனகிக்கிடந்த விதுரனின் இரண்டு கால்களையும் பிடித்து இழுத்துச்சென்று பலங்கொண்டு உடலை இழுத்து, ஓங்கி ஓங்கி மரத்தில் வெளுத்தான். இரண்டாவது முறை தலை சிதற அவனது மூச்சும் நின்றது. சிறிது கணம் அமைதியாக நின்றவன் பிறகு செல்லாயியை நோக்கி ஓடினான்.
அதே நேரம் செல்லாயி இறந்தது முத்தாரனுக்கு தெரியவர ! தன்மகள் கொல்லப்பட்டதற்கு முத்தாரன் பழிக்குப்பழி வாங்க நினைத்து அவர்களது பெண்பிள்ளைகளை கவர்ந்து வர ஆணையிட்டான். அதோடு அவர்களின் கிராமங்களையும் அவர்கள் செய்ததைவிட கொடுமையாக சூரையாட உத்தரவிட்டான். ஆனால் அதற்கு முன்னரே அவனது படைகள் ஆரம்பித்துவிட்டன அட்டூழியங்களை மன்னர் படைக்கு நிகராக.
போரைப்பற்றிய தகவல்களை வீரர்கள் மூலம் அறிந்த களப்பிரான், தனது படைவீரர்களின் இழப்பை கண்டு ஆத்திரமும் துக்கமும் அடைந்தான். எங்கே உதிரன் என்று கேட்டான் களப்பிரான்.
ஒற்றனோ "அரசே அவர்களது வீரர்கள் எல்லாம் பின்வாங்கிவிட்டனர் "என்று நடந்ததை எல்லாம் கூற
களப்பிரானுக்ககோ "நம் படையா கொடுமைகளை கட்டவிழ்த்தது" என்று அதிர்ச்சியானவன் ,
"யார் உத்தரவிட்டது" என கேட்க.
ஒற்றனோ "அரசே அது அது " என்று கூற தயங்க. "தங்கள் அரச வம்ச சொந்தங்கள் 10 பேர் " என்று கூறினான் பெயர்களுடன். அதில் "முக்கியமானவன் விதுரன் "என்று கூற அதைக்கேட்ட களப்பிரான் அதிர்ச்சி அடைந்தான்.
"அரசே விதுரனும் மற்ற மூவரும் இளவரசர் உதிரனால் கொல்லப்பட்டு விட்டனர்" என்றான் வீரன்.
"உதிரன் எங்கே என்று" களப்பிரான் கேட்க
அரசே அது என்று அவனது "காதல் முதல் செல்லாயி கொலைவரை சொல்லி முடித்தான் " ஒற்றன்.
அமைதியாக கேட்ட களப்பிரான், முதல்மந்திரியிடம் கோட்டையின் பாதுகாப்பை பலப்படுத்த ஆனையிட்டான். குடிகளுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்.விரைவில் உதிரனை திரும்ப அழையுங்கள். இறந்த படைவீர்களுக்கு தக்க இறுதி மரியாதை அளியுங்கள் என்று கூறிவிட்டு விறு விறு என்று நடந்தான் அந்தப்புறத்திற்கு.
அதே நேரத்தில் பிரான்மலை மாளிகையிலிருந்து அரண்மனைக்கு வந்துகொண்டிருந்த உதிரனின் மகள் பார்கவியையும் அவனது மனைவி வலசையையும் முத்தாரனின் படைவீரர்கள் இருவரையும் கடத்தினர் மற்ற தோழிகளையும் காவல் வீரர்களையும் கொலை செய்து, பெண்களை வன்புணர்வு செய்தனர்.
உதிரனோ செல்லாயியை தன் இரு கரங்களால் ஏந்தி நடக்க முயல மரத்தின் மறைவிலிருந்து ஒரு அம்பு சர்ரென்று வந்து அவன் நெஞ்சுக்குள் நுழைந்தது. மறுநொடி மேலும் இரண்டு அம்புகள் தோள்பட்டையிலும் கழுத்திலும் இறங்க வலி தாங்கமுடியாமல் அதே இடத்தில் செல்லாயின் உடலை கீழே விழ விடாமல் வலியோடு, முட்டி இரண்டும் உடையும் அளவு மண்டியிட்டான். அவன் கண்முன் அண்ணன் அரசன் களப்பிரான் வந்து போனான். அண்ணா என்று மனதுக்குள்
அழைத்தான் முதல் முறையாக ஆம் களப்பிரானை அண்ணா என்று அவன் அழைத்ததே இல்லை சிறுவயதிலிருந்து இன்று வரை. தன் மேல் அவ்வளவு அன்பு வைத்திருந்த அண்ணனை, மகள் பார்கவியை தான் வளர்த்ததை விட அண்ணன் தான் வளர்த்தார் என்னால் போதுமளவு அன்பு காட்ட முடியாமல் போனதே, மனைவி வலசை என நினைத்த போது இன்னொரு அம்பு அவன் மார்பின் நடுவில் பாய்ந்து அவன் மூச்சுக்காற்றை பிரித்தெடுத்தது உடம்பில் இருந்து.
உதிரனின் மறைவும் ,போரும்:
________________________________
கோசலையின் படைவீரர்களோ செல்லாயின் உடலை தோனியில் எடுத்து செல்ல, உதிரனின் உடலை அவன் காலில் கயிறு கட்டி குதிரை மூலம் தரதர வென்று இழுத்து சென்றனர் கோசலையின் கோட்டைக்கு.
செல்லாயின் உடலை பார்த்து கதறி அழாமல் அருகில் நின்று வெறிக்க வெறிக்க பார்த்தால் வீராயி. உதிரனின் உடலை இழுத்து வந்து போட்டனர் நுழைவாயிலில். இழுத்து வந்ததில் உதிரனின் முகம் சிதைந்து போயிருந்தது. மார்பு கால்பகுதியில் ஆடைகள் கிழிந்து இரத்தம் வழிந்தோடியது.
யார் இவன் என்று கேட்டாள் வீராயி.
"இவன்தான் மன்னரின் இளவரசன் உதிரன். சிறிய இளவரசியை" என்று மேலும் சொல்லமுடியாமல் தடுமிறினான்
"ம்ம்..ஏன் தடுமாற்றம் ! சொல்லுங்கள்" என்றாள் வீராயி.
"இவனும் இவனது படைவீரர்களும் இளவரசியை சிதைத்துவிட்டார்கள்" என்று கூற
வீராயி "காதல் என்ற பெயரில் கபட நாடகம் ஆடி என் தங்கையை கற்பழித்து கொன்று என் மக்களை நசுக்கிய உனக்கு" என்று கோவத்துடன் வீரன் வைத்திருந்த வாளை உருவி உதிரனின் தலையை வெட்டினாள்.
அவளின் கோவம் உதிரன் உயிரோடிருந்தால் இன்னும் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பான் என்று அவள் கண்கள் காட்டியது.
முத்தாரனோ கண்களில் நீர் வடிய தன் செல்ல மகளின் முகத்தை பார்த்து அழுதான்.
"மன்னரின் அழிவே உன் சாவுக்கு பரிகாரம் என் தாயே அதை நிறைவேற்றியே தீருவேன், எத்தனை ஜென்மம் எடுத்தாவது மன்னர் அரச வம்சம் மண்ணாகும் வரை ஓயமாட்டேன்" என்று சபதம் எடுத்தான்.
கோசலையில் அரசன் முத்தாரனோ "தளபதி, அனைத்து படைகளையும் தயார் நிலையில் வையுங்கள். களப்பிரான் நம்மை தேடி வர இவன் தலையை தூது அனுப்புங்கள் " என்றான் தளபதியிடம்.
தளபதியோ அரசே " உதிரனின் மகள், மனைவி நம் சிறையில் என்றவன்".
அவர்களை அழைத்து வர ஆணையிட பார்கவியும் வலசையும் சிதைந்த நிலையில் பிணமாக இருந்தனர். ஆம் அவர்கள் இருவரையும் சிதைத்துவிட்டனர்.
இருவரையும் பார்த்த முத்தாரன் என்ன இது அவர்கள் நிலையை பார்த்து தளபதியிடம் கேட்க..
தளபதி தலைகுனிந்தான்!
வீராயியும் தங்கையின் இழப்பில் இருந்ததால் இதை கண்டு கொள்ளவில்லை.
உதிரனின் உடலை கோட்டையின் வெளியில் தொங்க விடுங்கள். பெண்கள் இருவரது உடலையும் மன்னருக்கு அனுப்ப ஏற்பாடு செய்யுங்கள் என்று ஆணையிட்டான்..
களப்பிரானுக்கு கடத்தப்பட்ட செய்தி வர, உதிரன் பற்றிய தகவல்களும் தெரியவர "இன்று இரவே கோசலை இருந்த இடம் இல்லாமல் போகவேண்டும் " என்று எரிமலை வெடித்தது போல் ஆணையிட்டான்.
போரின் உக்கிரம்:
___________________
குதிரைப்படை, காலாட்படை, யானைப்படை , வில்லாளர்கள் என்று அனைத்தையும் அனுப்பிவைத்தான்.
" கோசலை என்ற இடமே இனி வரலாற்றில் இருக்க கூடாது , கொன்று புதைத்து விடுங்கள் " என்று கர்ஜித்தான்.
அனைத்து படைகளும் கோசலை நோக்கி நகர பூகம்பம் வந்தது போல் இருந்தது.
களப்பிரானுக்கு மேலும் ஒரு செய்தி வந்து சேர்ந்தது. உதிரனின் தலை மற்றும் பார்கவி வலசையின் உடலுடன். உதிரனின் தலையை பார்த்து கண்ணீரை அடக்கியவன் பார்கவி வலசையின் முகத்தை பார்த்தவன் கோவத்துடன் வெறி கொண்டவனாக நின்றான்.
களப்பிரான் அந்த நிலையில் எமன் மாதிரி காட்சியளித்தான் பார்த்தவர்களுக்கு. அரண்மனையில் இருந்த கணமான ஒரு மேஜயை தூக்கி வீசினான். ஓலையை பிரித்து படிக்க சொன்னான் அதில் "கோசலையின் கழுகுகள் கொத்தி தின்பதற்கு முன் அள்ளிச் செல் அவனது உடலை என்றும், களப்பிரானுக்கும் இதே கதி "என்றும் எழுதி இருந்தது.
அனைவரையும் இழந்து தனி மரமாக நின்ற களப்பிரான் "கோசலையின் ஒவ்வொரு உயிரும் இதற்கு பதில் சொல்லியாகவேண்டும் என்று பதில் ஓலை அனுப்பினான். இன்று இரவு உங்களுக்கான இறுதி இரவு "என்று பதில் அனுப்பினான் கோசலையின் தூதரிடம்.
"விரைவாக மறைந்துவிடு என் கண்முன் நிக்காதே " என்றான் தூதரிடம் களப்பிரான்.
களப்பிரான் தனது வெள்ளைப்புரவியில் தயாராக போருக்கு கிளம்பினான் கோசலைக்கு. கோசலை கோட்டை சுற்றியும் மன்னரின் படைகள் இருந்தன.
பார்ப்பதற்கு வித்தியாசமான அமைப்பில் இருந்தது கோட்டை. களப்பிரானுக்கு அது பாதாள கோட்டை என்பதும் அவனுக்கு தெரியும். கோட்டையை சுற்றி இருந்த அகழிகளில் மரங்களை வெட்டி போட்டனர். அகழி முழுவதும் முதலைகளாக இருந்தன. வேறு வழியின்றி அவற்றையும் கொல்ல நேரிட்டது.
அகலியை தாண்ட முற்பட ! எங்கிருந்தோ அம்புகள் வெளிவந்து மன்னர் படைவீரர்களை பலி கொண்டன. மொத்த படையும் ஒரே நேரத்தில் நான்கு வாயில்களையும் உடைக்க , கோசலை படையும் மன்னர் படையும் கொடூரமாக தாக்கி கொள்ள இரத்த ஆறே ஓடியது.
களப்பிரானின் முன் கோசலையின் தெற்கு வாயில் படை தூசியாக பறந்தது. களப்பிரானின் வாள் கண்ட தலைகளை எல்லாம் ஒரே வீச்சில் சாய்த்தது.
முத்தாரனும் அவனுது படைகளும் மேற்கு வாயிலில் மன்னர் படையை சிதறடித்தது. வீராயியும் தன் பங்குக்கு கிழக்கு வாசலில் மன்னர் படைக்கு சேதத்தை ஏற்படுத்தினாள். அவளின் வாள் வீச்சில் மன்னர் படையின் தளபதி இறந்தான். நொடிக்கு நொடியாக மூவரும் உயிர்களை பறித்து கொண்டே இருந்தனர்.
கோசலையின் கொரில்லா படை மறைந்திருந்து களப்பிரானை அம்பால் தாக்க, அவனது குதிரையும் காயமடைந்தது. களப்பிரானும் அவர்களையும் சமாளித்து வீரர்களை துண்டாடினான். மன்னரின் தளபதிபடை பாதி கொரில்லா படைக்கு முடிவுகட்டியது. இதனால் கோட்டைக்குள் எதிர்ப்பின்றி நுழைந்தது மன்னர் படை. கண்ணில் பட்டவர்களை கண்ட துண்டமாக வெட்டியது. எறும்புகள் நசுக்கப்படுவது போல் உயிரிழந்தனர் கோசலையின் படைவீரர்கள்.
போர் நடப்பதற்கு முன் முத்தாரன் தன் குலதெய்வ குரு சாமிகளிடம் அருள் பெறசென்றபோது " குருசாமியோ முத்தாரா தைரியத்துடன் சென்று போர்புரி. வேறு வழியில்லை. இந்த போர் என்று இழுக்க , சொல்ல வந்ததை சொல்லாமல் முடிந்தவரை பெண்களை குழந்தைகளை காப்பாற்று. ஆனாலும் கடினமே. உன் மகள் வீராயியை பாதுகாப்பாக கோட்டையை விட்டு அனுப்பிவிடு. அவள்மட்டும்தான் உன் நாட்டின் மிச்சம் இந்த போரில் . ஆனாலும் " என்றவாரு முடித்து ஆசி வழங்கினான்.
விடைபெற்று வந்தவன். தன்படைகளின் முன் பேசினான் " இது நமக்கான போர். சரித்திரத்தில் நாம் யார் என்று நிரூபிக்கும் போர். குழந்தைகள் முதற்கொண்டு பங்குபெரும் போர். வீரமே நமது உயிர் மூச்சு. உயிர் துச்சமே "என்று முழங்கினான்.
வீராயிடம் , "மகளே இதோ நமக்கான இறுதி நாள்" என்று முத்தாரன் பேச
இடைமறித்த வீராயி " தந்தையே அவ்வாறு கூறாதீர்"
"இல்லை மகளே நம் படை கடினமே ஆனாலும் தீரத்துடன் போர் புரிவர். அதே சமயம் நம் எதிர் காலம் உன் கையில். உன்னால் முடிந்தளவு பெண்களையும் குழந்தைகளையும் காப்பாற்று. இந்த போரில் நீ பாதியில் விடைபெற்று கொள் , உன் பாதுகாப்புக்கு சில வீரர்களை அழைத்துக்கொண்டு செல்"என்றான்.
"இது என் அன்புக்கட்டளை" என்று கூறிவிட்டு தன் மகளின் நெற்றியில் முத்தம் வைத்து ஆசி வழங்கிவிட்டு திரும்பி பாராமல் சென்றான் வீராயியை.
வீராயியும் முடிந்தளவு மன்னர் படைகளை கட்டுப்படுத்தினாள். அதே சமயம் பெண்களையும் குழந்தைகளையும் கோட்டைக்கு அருகில் இருந்த குகை வழியாக அனுப்ப ஆயத்தமாகினர் கோசலையின் வீரர்கள்.
வீராயியும் போரிலிருந்து பின்வாங்கி கோட்டைக்குள் சென்றாள். வீரர்களிடம "தயாரா " என்று கேட்டவுடன் முதலில் கர்பினி பெண்களையும், குழந்தைகளையும், குமரி பெண்களையும் அனுப்புங்கள் பிறகு முதியவர்களை அனுப்புங்கள். அத்துடன் பாதுகாப்புக்கு சில படை வீரர்களையும் செல்ல உத்தரவிட்டாள்.
பெண்களும் அழுது சிவந்த கண்களுடன் நன்றி தெரிவித்து விட்டு கணவன்மார்களை விட்டு அழுதுகொண்டே புறப்பட்டனர். குழந்தைகளும் "அப்பா எங்கே "என்று தன் தாயிடம் கேட்டு கொண்டே நகர்ந்தனர். வீராயியும் அவர்களை சுரங்க வழி முடியும் சிங்கம்புணரி ஊரின் எல்லையில் சந்திப்பதாக உறுதி அளித்தாள்.
போரின் உக்கிரத்தால் அவளின் முடிவில் மாற்றம் செய்தாள் . இவர்கள் அனைவரும் சுரங்க வழி செல்ல குறைந்தது ஒன்னறை நாழிகை ( ஒரு நாழிகை = 24 நிமிடம்)ஆகலாம் அதற்குள் எதிரிகள் படையை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக அவ்வாறு முடிவு செய்தாள். ஆனால் அவள் நினைப்பதற்கும் மாறாக நடந்தது.
நேருக்கு நேர் :
______________
களப்பிரானும் மேற்கு வாயில் நோக்கி முன்னேற அங்கே முத்தாரன் படையுடன் மோதியது. களப்பிரானும் முத்தாரனும் நேருக்கு நேராக களம் கண்டனர். ஆம் களப்பிரான் வியூகங்கள் சரியாக அமைத்ததில் எளிதாக முத்தாரனிடம் வந்து சேர முடிந்தது படை.
எங்கு நோக்கினும் கோசலையின் படைவீரர்களின் உடல்கள்.இருவரும் பலமாக மோதினர். முதலில் முத்தாரனின் வாள் வீச்சு அனல் பறந்தது. களப்பிரானோ தாக்குதலில் ஈடுபடாமல் தற்காப்பிலே ஈடுபட்டான். இதுவும் ஒரு தந்திரமே. முத்தாரனின் வேகத்தில் களப்பிரான் இடது வலது என்று மாறி மாறி வாளால் தடுத்தார். களப்பிரானின் கேடயமே வெட்டுப்படும் அளவுக்கு ஆனது.
முத்தாரன் தொடர் தாக்குதாலில் களப்பிரானின் இடது தோள் பட்டையில் வெட்டுகாயம் ஏற்பட்டது. முத்தாரன் சிறிது தளர்வடைய களப்பிரான் தன் வாளை சுழற்றினான் இப்போது. ஒவ்வொரு வீச்சும் மின்னல் போல் இறங்கியது முத்தாரனின் கேடயத்தில். ஒரு நொடி கூட முத்தாரனை இளைப்பாற விடவில்லை. தொடர்ந்து புயல் போல் வாளை வீசியதால் முத்தாரன் பின்வாங்கி கால் தவறி விழுந்தான்.
களப்பிரான் அவன் விழும்போது தாக்கவில்லை. எழ சிறிது நேரம் கொடுத்து மறுபடியும் தாக்கினான். சண்டையிட்டுக் கொண்டிருந்த படைவீரர்கள் இவர்களது வாள்வீச்சை பார்த்து நிறுத்தும் அளவுக்கு உக்கிரமானது இருவருக்குமான போர். இப்போது முழுவதுமாக தளர்ந்து போன முத்தாரனின் கையை பதம்பார்த்தது களப்பிரானின் வாள்.
மன்னர் படை கிழக்கு வாசலை நெருங்கவும் பெண்கள் சுரங்க வழியே செல்லவும் நேரம் சரியாக இருந்தது. ஆனால் வீராயியால் செல்ல முடியவில்லை. தடுத்து கொண்டே இருந்தாள் முடிந்தவரை. பெண்கள் தப்பித்து சென்றதை பார்த்த மன்னர் படை சுரங்க வழிக்குள் எண்ணையை ஊற்றி வைக்கோள் தீப்பந்து உருண்டையால் மூட முடிவு செய்தனர். முன்னரே இந்த வழியை ஒற்றர் படை மூலம் அறிந்திருந்தது மன்னர் படை.
சிங்கம்புணரி எல்லையிலும் இந்த சுரங்கத்தின் வழியை அடைத்து வைக்கோள் பந்துகளையும் துணிப்பந்துகளையும் எண்ணையில் நனைத்து வைத்திருந்தனர் தீயை பற்ற வைக்க. தகவல் வந்தடைந்ததும்அவ்வாறே செய்ததில் சுரங்க வழிக்குள் மாட்டிக்கொண்ட அனைவரும் தீயில் கருகி உயிரிழந்தனர். வீராயி சென்றிருந்தாள்! அவளையும் அக்னி ஆட்கொண்டிருக்கும்.
போரிட்டுகாகொண்டிருந்த வீராயியை மற்ற படைத் தலைவர்கள் , "இளவரசியே நீங்கள் தப்பிக்க இதுவே சரியான தருணம். நீங்களாவது உயிருடன் இருக்க வேண்டும். செல்லுங்கள் "என்று சில பெண் வீராங்கனைகளை பாதுகாப்புக்கு அனுப்பினர்.
தந்தையின் நிலையை கேட்டறிந்தவள் மனதொடிந்து போனாள். தங்கையையும் இழந்து ,நாட்டையும் இழந்து தன் மக்களின் உயிரையும் இழந்து வருந்தினாள். இப்படி ஒரு நிலையா என்று. களப்பிரானுக்கும் அவனது அரசுக்கும் ஒரு முடிவுகட்டாமல் விடாமாட்டேன் என்று சபதம் பூண்டாள்.
வஞ்சம் தீர்த்தல்:
___________________
களப்பிரான் வீசிய வீச்சு ! முத்தாரனின் கைக்கு விடுதலை தந்தது ,அவன் உடலிலிருந்து. அப்போது களப்பிரான்
" உன் நாடு, படை ,மக்கள் அழிவதை நீ உன் கண்ணால் பார்த்து துடிக்க வேண்டும். நீயே கதற வேண்டும் என்னை கொன்று விடு என்று. அதுவரை அனுபவி. உன் அகங்காரம் உன் அழிவுக்கு காரணம் "என்றான்.
வீரர்களை பார்த்து "இவனை நுழைவு வாயிலில் கட்டி வையுங்கள் " என்றான்.
நான்கு வாயில்களும் முழுவதுமாக மன்னர் படை வசம் வந்தது. கைது செய்யப்பட்ட கொரில்லா படை பெண்களில் சிலர் இன்னும் போரிட்டனர். மன்னர் படைத்தளபதிகளுள் ஒருவன் "சரணடைந்தால் சிறை இல்லையேல் உங்கள் உயிர் விடுதலை பெறும்" என்றான். அவர்கள் பணியவில்லை.
இப்போதும் "அடங்கவில்லையா" என்றவன் ஐந்து பேண்களையும் வரிசையாக வெட்டி வீழ்த்தினான்.
முத்தாரன் பிடிபட்ட செய்தியை கேட்ட அவன் படைகள், சிதறி ஓடினாலும் விடுவதாய் இல்லை, விரட்டி விரட்டி கொன்றனர். சிலர் கும்பலாக எரித்து கொல்லப்பட்டனர்.
கோசலையின் அரண்மனைக்குள் நுழைந்த களப்பிரான் "இந்த ராஜ்ஜியமா இத்தனை உயிர்கள் பலியிட காரணம். என்ன கர்வம் அவனுக்கு. என்னை தனி ஆளாக ஆக்கிவிட்டான் " என்று முத்தாரன் மீது கோபம் கொண்டவன், "ஒருவரையும் விட்டுவைக்காதீர்கள் அதுவே ஆபத்தாகிவிடும். துடைத்தெறியுங்கள்" என்றான்.
கோட்டையின் ஒரு பகுதி மூடி இருந்ததை திறக்க சொன்னான். அங்கே தீயில் கருகிய நாற்றம் குடலை புடுங்கியது. அந்த இரும்பு கதவை திறந்தவர்கள் கண்டது சில ஆயிரம் பெண்கள் தீயில் கருகி உயிர்விட்டிருந்தனர். ஆம் அவர்கள் தங்களையே எரித்துக்கொண்டனர். அதில் ஒருவள் உயிர் போகும் தருணத்தில் எழுந்து "உங்களது நாடும் உங்கள் கண் முன் இதே போல் அழியும்" என்று கூறவும் அவள் உயிர் பிரியவும் சரியாக இருந்தது.
"சில நொடிகள் நின்றவன், உயிருக்கு போராடுபவர்களை கொன்றுவிடுங்கள்" என்றான்.
அவ்வாறே முடித்து அனுப்பி வைக்கப்பட்டது அனைத்து உயிர்களும். களப்பிரான் ! கோட்டையின் மதில் சுவர் மீது ஏறிப்பார்க்கையில் , எங்கும் சடலமாகவே கிடந்தது. அப்போது முத்தாரனை இழுத்து வாருங்கள் அவன் காண வேண்டும் இதை என்றான் களப்பிரான்.
தன் தேசமே தன் கண் முன்னே நாசமாவதை பார்த்து "இதற்கு நான் கண்ணீர் விடப்போவதில்லை . இதே போல் நீயும் வருந்துவாய்"என்று கூறினான்.
குற்றுயிராக கிடந்தவர்களை மன்னர் படைகள் நிரந்தரமாக அனுப்பி வைத்தனர். பிழைக்க வாய்ப்பில்லாத தன் படை வீரர்களையும்.
அப்போது அங்குவந்த குலகுரு, "களப்பிரா இது சர்வ நாசமாக்கிய போர். அநேக உயிர்கள் வதைக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றன. இவைகளின் ஆத்மா ஏதாவது வீபரீதங்கள் ஏற்படுத்த வாய்ப்பிருப்பதால், மாந்திரீகர்களை வைத்து பூஜைகள் செய்வது நல்லது" என்றார்
இதைக்கேட்ட முத்தாரன்" பூஜைகளா! ஹா ஹா . உங்களை நானே அழிப்பேன் "என்றான்.
களப்பிரானும் "உன் அகம்பாவம் இன்னும் குறையவில்லை "என்றான் முத்தாரனை பார்த்து .
"இன்று முழு அமாவாசை முடிந்தவரை விரைவில் இன்றே செய்தால் நன்று"
மாந்திரீகர்களை அழைத்து வர வீரர்கள் அனுப்ப பட்டனர்.
ஆனாலும் காலம் கடந்துவிட்டது. எங்கும் மாய அழுகுரல்கள் கேட்ட வண்ணம் இருந்தன. மேகமும் இருண்டு வித விதமான மேகங்களால் பயமுறுத்துவது போல் இருந்தது.
களப்பிரானும் அவனுது படைகளும் அங்கயே கூடாரம் அமைத்து தங்கினர். களப்பிரான் உதிரனின் உடலை இறக்கி அவன் தலையுடன் இங்கயே அனைத்து மரியாதைகளையும் செய்து முதல் வேளையாக தகனம் செய்தான்.
முத்தாரன் வலியால் துடிப்பதை அவன் வெளிக்காட்டவில்லை. வெறித்து பார்த்தவாறு இருந்தான்.சில நொடிகள் பழைய வாழ்க்கைக்குள் நீந்தியது அவன் மனது.
கோசலையின் அழிவும், பிணங்களும்:
________________________________________
களப்பிரான் மனதை இந்தப்போர் ஏதோ செய்தது. அங்குமிங்கும் நடமாடினான். நிம்மதியில்லை." ஏன் இவ்வளவு வெறி எனக்குள். எதற்காக இத்தனை உயிர்கள் பலி ஆயின. என் குழந்தைகளை இழந்துவிட்டேனே. என் அற்ப ஆசைக்காக இத்தனை உயிர்கள் பலி. இல்லை இல்லை சரியே "என்று மனதிற்குள் நினைத்துகொண்டான்.
அதுவரை படைவீரர்கள் குழுகுழுவாக பிணங்களை இரண்டு மூன்று இடங்களில் அடக்கினர். அவைகள் பிண மலைகள் போல காணப்பட்டன.
முத்தாரனோடு அவனது முக்கிய இரு தளபதிகளும் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் மூவரும் தற்போது மயக்கத்தில் இருந்தனர்.
களப்பிரானும் "வீரர்களே! எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக "என்றான்.
கோட்டைகளும் குடியிருப்புகளும் இடித்து தள்ளப்பட்டன. தரைமட்டமாக ஆகியது கோசலை. விரு விரு என்று நடந்துகொண்டிருந்தன அனைத்துப் பணிகளும்.
கோசலை முழுவதும் எங்கு நோக்கினும் பற்றி எரிந்தது. சில பக்கங்கள் பல பெரிய குழிகளும் வெட்டப்பட்டன புதைப்பதற்கு உடல்களை.
மன்னரை நோக்கி:
____________________
களப்பிரான் தன் ஒரு பகுதி படைகளுடன் கிளம்ப தயாரானான். அனைத்து படைவீரர்களுக்கும் குரு சில மந்திர தாயத்துகளை கொடுத்தார்.
" அதை அணிந்துகொள்ளுங்கள் மறந்துவிடாதீர்கள் "என்றார்
களப்பிரான் "முத்தாரனை தன் தேரின் பின்பகுதியில் கட்டிவிடுங்கள். மற்ற இருவரையும் மற்ற தேர்களில். இழுபட்டு சாகவேண்டும். நம் வீரர்களின் மரணத்துக்கு.அவனும் துடிதுடித்தே சாகவேண்டும் " என்றான்.
அதே நேரத்தில் மாந்திரீகர்களும் அரண்மனைக்கு வந்து சேர்ந்து, பூஜைகளை நடத்த ஆயத்தமாகினர்.
அதில் "நிலைமை கைமீறி போய்கிறதோ, விரைவில் அரசர் வந்துவிட்டால் நலம் "என்று வேண்டிக்கொண்டான் தலைமை மாந்திரீகன்.
களப்பிரானும் படைகளும் பாதி தூரத்தை கடந்திருந்தனர்.
எரிந்துகொண்டிருந்த பிணங்கள் எழுவது போல் தெரிந்தன மாந்திரீகனுக்கு. 'அரசன் விரைவில் அந்த எல்லையை கடந்துவிட வேண்டும்" என்று நினைத்து ஒரு வித பதட்டத்துடனே இருந்தான்.
முத்தாரன் தன் உடலை விட்டு ஆன்மா வாக வெளியேறி மற்ற ஆத்மாக்களை தன்னுள் உள்வாங்கி கொண்டிருப்பதை உணர்ந்தான் மாந்திரீகன்.
அகோரம்:
__________
மன்னருக்கு சென்றுகொண்டிருந்த படைகள் மீது திடீரென்று முன்னால் சென்ற வீரர்களை அம்புகள் சர் சர் என்று தாக்குகின. களப்பிரானை குறிவைத்தும் தாக்கின அம்புகள். ஆனால் தடுத்துவிட்டான். முன்னால் சென்ற வீரர்கள் சிலர் இறந்தனர். காயமுற்றனர். ஐந்தாறு வீரர்கள் வெவ்வேறு இடங்களில் தாக்க மேலும் பலியாகினார். அதில் ஒரு வீரன் களப்பிரானை நோக்கி படுவேகமாக முன்னேறி வர மற்ற ஐந்து வீரர்களும் மன்னரின் வீரர்களால் பலியாகினர்.
களப்பிரானும் அந்த ஒற்றை வீரனுடன் வாள்வீச்சில் ஈடுபட அந்த இரவிலும் , களப்பிரானின் வாள் வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின் வாங்கி தடுமாற அப்போது முகமூடி கிழிய தேரின் பின் விழ, அது வீராயி என்று உணர்ந்த முத்தாரன் , அவளை பார்க்க! அதே நேரத்தில் அவன் ஒருங்கிணைத்த ஆத்மா இறுதி நொடியில் அவன் உடம்பில் இருந்து வெளியேறி வீராயிக்குள் சென்று அவள் மறைவதற்கும் ! களப்பிரானின் வாள் அவள் தலையை பதம் பார்க்க செல்ல ஆனால் அவள் அந்த இடத்தில் இல்லை. மாயமாக மறைந்தாள் அந்த இருட்டில்.
களப்பிரான் "என்ன இது" என்று விழித்தான் ஆச்சரியத்தில்.
வீரர்களோ "அரசே அவன் எங்களை தள்ளிவிட்டு அவன் தப்பித்துவிட்டான்" என்றனர்.
மற்றவர்களது உடல்களை பார்த்தவர்கள் 'பெண்களா! "என்று அதிர்ந்தனர். இந்த உடல்களையும், தங்கள் வீரர்களின் உடல்களையும் எரித்துவிட்டு பயணத்தை தொடர்ந்தனர்.
கோசலையில் பாதி வீரர்கள் அங்கு கிடைத்த மதுவை அருந்திவிட்டு உற்சாகமடைந்தனர்.
ஒருவன் இறந்தவனின் உடலை இழுத்துக்கொண்டு வரும்போது
" அடேய் வலிக்கிறது தூக்கி கொண்டு செல்" என்றது அந்த உடல்
"யார் பேசியது" என்று உற்று பார்த்தவனை தர தர என்று இழுத்து தூக்கி எறிந்தது நெருப்பில்.
குழிகளை வெட்டிக்கொண்டிருந்தவர்கள் மண்வெட்டியை வைத்துவிட்டு களைப்பாகி ஓய்வெடுக்க , அந்த மண்வெட்டிகள் தானாக குழிகளை வெட்ட ஆரம்பித்தன. வேக வேகமாக.
"என்ன இது" என்று பயந்தவர்கள் உசாராவதற்குள் பெரிய குழி தயாரானது, தப்பிக்க ஓடியபோது அனைவரின் கால்களும் இழுக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டது அந்த குழியில்.
உயிரோடு அவர்கள் புதைக்கப்பட்டனர்.
பிணங்ஙளின் மீது தீ வைக்க முற்பட்டவன் தன்னைத்தானே வைத்துக்கொண்டான். அது பற்றி எரிந்து மற்ற வீரர்களையும் அவன் புடித்து உருள அவர்களும் எரிந்து சாம்பலாகினர்.
பலர் சிதறி ஒடினார்கள். கோட்டையின் கீழ் இருந்தவர்கள் அவர்கள் இடித்த கற்களே அவர்கள் மேலே விழுந்து பலி கொண்டது.
குதிரையில் ஏறியவர்கள் அந்த குதிரையே அவர்களை தள்ளிவிட்டு அவர்களின் தலையில் முன்னங்கால் இரண்டையும் வைத்து மிதித்தே கொன்றது. இப்படியாக கோசலையில் இருந்த மன்னர் படைகள் உயிரிழந்தனர். ஒருவரும் தப்பிக்கவில்லை. பலர் மரத்தில் தூக்கில் தொங்கினர்.
இவை அனைத்தும் வீராயி என்ற அகோரம் செய்தது. முத்தாரனின் ஆன்மா மேலும் மற்ற ஆன்மாக்களை உள்ளடக்கி வீராயியின் உடலில் தங்கிக்கொண்டது.
மன்னர் அரண்மனை:
_______________________
கோட்டையை அடைந்ததும் முத்தாரன் உடலையும், அவனது முக்கிய தளபதிகள் உடலையையும் கோட்டை வாயிலில் தொங்க விட்டனர்.வாழ்த்து கோசம் விண்ணை பிளந்தது. களப்பிரானும் வீரர்களும் இரத்தம் உறைந்த வாளை கழுவாமல் அப்படியே அரண்மனைக்கு எடுத்து சென்றது, அரண்மனையின் புனிதத்தை கெடுத்து வலுவிலக்க செய்தது.
கோசலையில் இருந்த வீரர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்ட தகவல்கள் வந்து சேர்ந்தது களப்பிரானுக்கு மாந்திரீகன் மூலம்.
அரசே நிலைமை கைமீறிச் செல்கிறது. பூஜைகள் நடந்து கொண்டிருக்கின்றன.உங்களது படையில் ஒருவரும் உயிர்பிழைக்கவில்லை. விரைவில் அரண்மனை மற்றும் அரசின் எல்லைகளை பாதுகாக்க வேண்டும் என்றான் விரிவாக. களப்பிரானும் கலந்து கொண்டான்.
இதனால் சில நாட்கள் எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை. முழு நம்பிக்கையில் மக்கள் நடமாட தொடங்கினர்.
ஆம் அரண்மனையில் எல்லையில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சம் பழம் வெட்டப்பட்டு அதில் குங்குமம் பூசப்பட்டு ஒரு ஜான் அளவு குச்சியில் அதுவும் பூசப்பட்டு நூல்கண்டால் சுற்றப்பட்டும் மனித முகம் வரையப்பட்டும் இருந்தது. அதை அரண்மனையை சுற்றிலும், ஒவ்வொரு வீட்டை சுற்றிலும் ஊன்றப்பட்டது. இதனால் மன்னர் அமைதியாகவே இருந்தது.
மக்களும் இந்த போர் நமக்கு இன்னும் என்ன துன்பங்களை தரப்போகிறதோ என்று பயந்தனர்.
அரண்மனைக்குள் அதிக துர்நாற்றம் வீசியதால் தொங்கவிடப்பட்ட உடல்களை அகற்ற உத்தரவிட்டான் களப்பிரான். வீரர்களும் மந்திரித்த கயிறுகளை கையில் கட்டியிருந்தாலும் சிறிது பயத்துடன் சென்றனர் வெளியில்.
அந்த உடல்களை பார்த்தபோது அழுகிபோய் கொடூரமாக காட்சியளித்தது.
அதில் ஒருவன் " ஏன்டா இத எடுக்கும்போது உயிர் வந்துட போகுது, அத பார் !என்ன பார்க்குற மாதிரியே இல்லை " என்றவனை உண்மையில் அவனைத்தான் பார்த்தது.
முத்தாரனின் கண்கள் சுழண்டதை அந்த வீரன் பார்த்துவிட்டு " டேய் அதோட கண் சுத்துதுடா, நான் பார்த்தேன் " என்றான்.
மற்றொருவன் "சும்மா இருடா பயந்து சாகாம கயிறு லூசுல விடுங்க" என்றான்.மெதுவாக இறக்கியவர்கள் அந்த உடல்களை ஒரு பாடையில் வைத்து எடுத்து கொண்டு எல்லை முடியும் இடத்தில் ஆற்றின் கரையோரத்தில் புதைக்க முடிவு செய்தனர்.
அதில் ஒருவன் மாந்திரீகன் கொடுத்த மங்களப்பொருட்களை எடுத்து " இந்தாங்கடா இதையும் சேர்த்து புதைங்கடா, இல்லனா எழுந்து வந்துடப்போறானுக " என்று கூறிவிட்டு சிரித்தான்.
"அடேய் சும்மா இருக்க மாட்ட, நெசமா வந்துட போறானுக "என்று கூறிவிட்டு குழியை வெட்டுவதில் மும்முரமாகினர்.
மூவரையும் புதைத்துவிட்டு
ஐவரும் ஆற்றில் குளிக்க சென்றனர்.
அப்போது ஒரு குரல்" சீக்கிரம் குளித்துவிட்டு வாருங்கள். இன்னும் இரண்டு குழிகள் வெட்ட வேண்டும் "என்றது.
"இன்னும் ரெண்டா, மூனு பேர்தானய்யா" என்று பேசிய வாறு திரும்பி பார்த்தவன் அதிர்ச்சியில் இறந்து விழுந்தான் நீருக்குள். மற்ற நால்வரும் நிமிர்ந்து பார்த்து ஓட முற்பட்டவர்கள், ஓட முடியாமல் சுழல் உருவாகி நீருக்குள்ளயே மூழ்கி இறந்தனர்.
களப்பிரான் மனதில் நிம்மதி குடியிருக்கவில்லை. அனைத்ததையும் இழந்தது போல் உணர்ந்தான். பார்கவியின் இனிய குரல், தம்பியின் சிரிப்பு, வலசையின் அன்பு என அனைத்தையும் இழந்து ஏதோ வெறுமை ஆட்கொண்டது போல் ஆனான்.
வீராயியின் அரண்மனை பிரவேசம்:
______________________________________
மறுநாள் காலை களப்பிரானிடம் தகவல் வந்தது " அரசே புதைக்க சென்ற நம் வீரர்கள் ஆற்றில் இறந்து மிதப்பதாக" என்றான் வீரன்.
மேலும் அவன் "ஆற்றின் ஓரத்தில் அரச லட்சணம் பொருந்திய பெண் ஒருவர் மயங்கி கிடந்தார். அவரையும் மயங்கிய நிலையில் நம் வீரர்கள் எடுத்து வந்துள்ளனர் " என்றான். ஆம் வீராயி வீரர்களை தேடிவந்தவர்களின் கண்ணில் படுமாறு ,சில காயங்களுடன் அவளாகவே தன் உடலை அவ்வாறு மாற்றி தன் உடலை கரையின் ஓரத்தில் கிடத்தியிருந்தால்.
வீரர்களின் கையில் இருந்த தாயத்து அவளின் சக்திக்கு முன் மண்ணாக இருந்தது. அதுவாகவே அவிழ்ந்து விழுந்தது. பூஜை சாமான்களும் அவளை உள் எடுத்து சென்றபோது எரிந்து சாம்பலாகின.
களப்பிரானும் "அவளை மயக்கம் தெளிந்தவுடன் அழைத்து வாருங்கள்" என்றான்.
விராயியை ஒரு விருந்தினர் மாளிகையில் தங்கவைத்தனர். விழித்து எழுந்தவள் ஒரு புன்சிரிப்பால் தன்னையே அழகாக்கி கொண்டாள் மற்றவர்கள் முன்.
களப்பிரானுக்கும் அவள் விழித்தது தகவல் வர , அவள் அழைத்து வரப்பட்டாள் சபைக்கு.
வீராயியும் அவன் கேட்கும் முன்பே "அரசே தான் சேர தேசத்தை சேர்ந்தவள் என்றும், வியாபாரியின் மகள் வீராயி" என்றும் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு அனைவரும் உயிரிழந்துவிட தான் மட்டும் உயிர்பிழைத்ததாகவும் தெரிவித்தாள்.
வீராயியும் களப்பிரானை தன் அழகால் கவர்ந்துவிட்டாள் . அவன் கண்களே பிரதிபலித்தது அதை .தன்னுடைய முதல் ஆட்டத்திலே அவனை வீழ்த்தினாள்.
மர்ம இறப்புகளும் பஞ்சமும்:
_____________________________
நாட்கள் ஆக ஆக ஏதாவது இறப்பு செய்தி வந்தவண்ணம் இருந்தன. சில பசுக்களும் வயிறு பெருத்து வாயில் இரத்தம் வந்தபடி ஆற்றின் கரையோர கிராமங்களில் இறந்து கிடந்தன மேய்ச்சலுக்கு சேன்றவை.
ஒரு ஆட்டுக் கூடத்தில் இருந்த 45 ஆடுகளும் அப்படியே இறந்துகிடந்தன. கிராமத்தார்கள் பயத்தில் விழிபிதிங்கி இருந்தனர். சோகத்துடன் அவைகளை எரித்தனர்.
பஞ்சமும், சாவுகளும் அதிகரித்து கொண்டே இருந்தன. வழிதான் தெரியவில்லை.
களப்பிரான் தன் தலைமைத் தளபதியிடம் மாந்திரீகனை இன்று இரவு அழைத்து வர உத்தரவிட்டான்.
அவனும் அரண்மனைக்கருகில் உள்ள தன் வீட்டுக்கு சென்றான் தயாராக.
அவன் வீட்டை அடைந்ததும் அவன் 3 வயது குழந்தை அப்பா என்று மெல்ல ஓடி வந்து அவனை தழுவிக்கொண்டது.
"என்னடா செல்லம் என்ன வேணும்" என்று கொஞ்சிக் கொண்டே குழந்தையை தூக்கியவன் , குழந்தையின் கையில் தனது குறுவால் இருந்ததை கண்ட அவன் "அட இப்பொழுதே தைரியம் வந்துவிட்டதா என் மகாராணிக்கு "என்று கொஞ்சினான்.
அவன் மனைவியும் "ஆமாம், அவள் எப்பொழுதும் தாங்கள் போரில் கத்தியை வைத்து விளையாடுவது போல் அவள் இங்கே விளையாடுகிறாள் , நான் சொல்வதை எங்கே கேட்கிறாள் அவள்" என்று சொல்லிக்கொண்டே சமையலறைக்குள் நுழைந்து உணவை எடுத்துக்கொண்டு வந்தவள் அவனை பார்க்கையில் " அந்த பெண் குழந்தை அவன் தோளின் மேல் உட்கார்ந்துகொண்டு, அவனது கழுத்தை பாதி அறுத்திருந்தது".
ஐயோ என்று அலறியடித்துக்கொண்டு ஓடி வந்தவள் ! அந்த குழந்தையும் தன் கழுத்தை அறுத்துக்கொண்டு சாய்ந்ததை பார்த்து , இவளும் அதிர்ச்சியாகி இறந்தாள். அகோரம் இவ்வாறாக போரில் ஈடுபட்டவர்களை கொல்ல ஆரம்பித்தது.
அரண்மனையிலும் சேவகிகள் நோய்வாய்ப்பட்டு இறந்தனர். மன்னரின் அரண்மனையை சுற்றி உள்ள அகலிகளில் இருந்த முதலைகள், ஆமைகள் ,மீன்கள் என அனைத்தும் செத்து மிதந்தன.
இந்த பிரச்சனைகளால் மனம் நொந்த களப்பிரான் மதுவுக்கு அடிமையானான். மாந்திரீகர்களாலும் ஒன்றும் செய்யமுடியவில்லை. வீராயியின் அன்பும் அவன் கண்ணை மூடியது. சதா அந்தப்புறமே என்று கதியாக கிடந்தான்.
அவளின் அன்பு ,அவன் அவள் மீது அன்பை பொழிய காரணமாகியது. அவ்வப்போது குருவும் சில முக்கியஸ்தர்கள் சந்தித்தாலும் அவன் வீராயியை சந்தித்துக் கொள்ளுங்கள் என்றான்.
இவர்கள் என்ன சொன்னாலும் அவன் நம்புவதாயில்லை. இறுதியாக குரு மற்றும் சில முக்கியஸ்தர்கள் பாண்டியதேசத்தில் வசித்து வந்த கொல்லிமலை சுவாமிகளை தரிசிக்க சென்றனர் வீராயிக்கு தெரியாமல்.
அதே சமயத்தில் இங்கு மிச்சமிருந்த பசுக்களும் ஆடுகளும் நீரின்றி உணவின்றி ஆங்காங்கே இறந்து விழுந்தன. நாய்களும் பேய்கள் போல மாற ஆரம்பித்தன. மனிதர்களுக்கே உணவில்லை இதில் நாய்களுக்கு ஏது. யார் எதை அடித்து தின்பார்கள் என்று எந்நேரமும் பயமாகவே கழிந்தது.
நாய்களும் பசியை தாங்கமுடியாமல் ஆடு மாடுகளை பசிக்காக வேட்டையாடின. இறந்த மிருகங்களை தின்று நாய்களும் இறந்தன. அவைகளை தின்ற காகங்களும் இறந்தன. இப்படியாக மன்னரே பிணங்களாக தென்பட்டன எங்கு நோக்கினும்.
எலும்பும் தோலுமாக இருந்த நாய்கள் ஒரு பெண்ணையும் துரத்தி கொண்டு சென்றது. அவள் தன் கைகளில் குழந்தையை வைத்துக்கொண்டு ஓடினால். ஆனால் நாய்களிடமிருந்து தப்ப முடியவில்லை. தன் கண் முன்னே குழந்தையின் கழுத்தை கடித்து குதறிய நாய்கள், இவளையும் பிய்த்து தின்றது. மக்கள் வெளியில் வருவதற்கே தயங்கினர்.
வீராயியும் அரண்மனைக்குள் இருந்த புனிததன்மையை மாற்றி கொண்டிருந்தாள் மந்திரங்கள் மூலம்.
நாட்களா நகர்ந்தன. வறட்சி தாண்டவமாடியது. தண்ணீர் எங்கும் தென்படவில்லை. மக்கள் தாங்கள் வளர்த்த மாடுகளை ஆடுகளை கொன்று திண்ணத் தொடங்கினர்.
ஒரு நாள் களப்பிரான் அவளிடம் " என் மனது நிம்மதியிழந்து விட்டது. என்னால் தான் இந்த போர். நான் வேண்டாம் என்றிருந்தாள் இந்த போர் நடந்திருக்காது. இவ்வளவு உயிர்களும் போயிருக்காது. கடவுளே எனை மன்னிக்கமாட்டார் "என்று புலம்பினான் .
ஆனால் மன்னரில் இன்னும் நிலைமை மோசமடைந்தது. போரில் ஈடுபட்ட தளபதிகள், வீரர்கள் , பெண்கள், குழந்தைகள் என ஒவ்வொரு நாளும் பலர் உயிரிழந்து கொண்டே இருந்தனர்.
மன்னர் முழுவதும் பிணங்கள் புதைப்பதும் எரிக்கப்படுவதுமாகவே இருந்தது. பசுமையாக காட்சியளித்த மன்னர் இப்போது வறண்ட பாலைவனமாக காட்சியளித்தது.
அநேக மனித தலைகள் காணப்பட்ட அரண்மனையில் சிலரே இருந்தனர். அவர்களும் நோயுடன் இருந்தனர்.
மன்னர் முழுவதும் வீராயியின் கட்டுப்பாட்டில். எதிர்த்தவர்களை சடலங்களாக மாற்றினாள். அரண்மனையும் சேவகிகள் குறைந்து பராமரிப்பின்றி பழைய பாழடைந்த அரண்மனை போல் ஆகியது. மக்கள் பசியால் இறந்தனர்.
களப்பிரானும் மனமாற்றமும்:
_________________________________
இந்நிலையில் ஒரு நாள் அவன் கனவில் "அரசே எங்களை காப்பாற்றுங்கள் " என்று மக்கள் ஓடிவர, ஒரு புறம் மக்கள் பசியால் வாடி மடிய, மன்னர் முழுவதும் பிணங்களாக காட்சியளிக்க திடிக்கிட்டு எழுந்தவன் மாறுவேடத்தில் தன் வெள்ளைப்புரவியில் ஏறி உண்மையா என அறிய சென்றான் நகரங்களுக்கு.
அவன் கண்ட காட்சிகள் அவனை உலுக்கி போட்டது. இரு நாய்கள் மனித உடம்பை கடித்துக்கொண்டு கிடப்பதை பார்த்தவன் அதிர்ச்சி அடைந்தான். அதை விரட்டி அடித்தவன் அந்த சடலத்தை பார்த்த போது அது அவனது வீரன். இப்போதுதான் இறந்தது போல் காணப்பட்டான். வாடி வதங்கி இருந்தது அந்த உடல். வீடுகள்பல விளக்குகள் இன்றி இருந்தது.
எதிரே ஒருவன் நடந்துவருவதை பார்த்தவன் அவனை விசாரிக்க, அவன் நடப்பதை விவரித்துக் கொண்டிருக்கையிலே பசியால் சுருண்டு விழுந்து மரணித்தான். இப்படியே இரவு முழுவதும் பயணித்தவன் இறுதியில் ஒரு மா மரத்தின் மீது ஏறி ஓய்வெடுத்து! விடிந்ததும் கண்விழித்தவன் அதிகாலையில் மன்னரின் நிலையை தரிசித்தான். சுடுகாடை போல் உணர்ந்தான். சில நொடிகள் சிலையாக நின்றவன் அரண்மனை நோக்கி புறப்பட்டான்.
கொல்லிமலையும் வாளும்:
____________________________
அப்போது களப்பிரானின் விசுவாசிகளும்! கொல்லிமலையில் இருந்து திரும்பி வரும்பொழுது அதிர்ஸ்ட வசமாக களப்பிரானை பார்க்க, அவனை வழிமறித்து சுவாமிஜி கூறியதை கூறினார்கள்.
" அரசே நீங்கள் விரும்பும் அந்த வீராயிதான் அந்த தீய சக்தி. நம்மை அழிக்கவே வந்திருக்கிறாள் " என்றார் குரு
"வீராயியா?. இருக்கவே இருக்காது. தெரிந்துதான் பேசுகிறீர்களா என்னிடம்" என்றான் கோவமாக.
"அரசே எங்களுக்கு வேறுவழியில்லை. உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும். இன்று சந்திரகிரகணம் நீங்களே அறிந்து கொள்வீர் " என்றான் இன்னொரு தளபதி.
மேலும் தொடர்ந்த குரு " தன்னிடம் இருந்த தாயத்தை எடுத்து அவனிடம் கொடுத்து அரசே இதை அணிந்து கொள்ளுங்கள். ஏனெனில் அவள் இனி பெண்ணாக இருக்கமாட்டாள். இதோ உங்கள் பரம்பரை வாள். இதை நாங்கள் திருடியதற்கு மன்னிக்கவும். இந்த வாள், உங்களை பாதுகாக்கும் ஒரே ஆயுதமாக இருக்கும்" என்றார்
மேலும் "அரசே அவளை நீங்கள் இந்த பூஜை செய்யப்பட்ட உங்கள் வாளால் குத்தினால் ,அவள் ஆன்மாவை இந்த தங்க மந்திரப் பேழை உள்வாங்கி கொள்ளும். பிறகு அதை கட்டுப்படுத்தி விடலாம்.உங்களால் மட்டுமே அது முடியும். ஏனெனில் அது உங்களைத்தான் பழிவாங்க பார்க்கிறது" என்றான்.
அனைத்தையும் கேட்டுக்கொண்டவன் இப்போது அமைதியாக சென்றான் தன் குதிரையை விரட்டாமல். "காதலால் ஏமாற்றப்பட்டேனா. இருக்காது! நிச்சயம் இருக்காது! " என்று சமாதானப்படுத்தி கொண்டான்.
இருந்தாலும் அவள் வந்தபிறகுதான் இத்தனை அழிவு. என் அரசையே அழித்துவிட்டாள். அவளை என்று நிலை மாறினான்.
சூரியன் மறையத்தொடங்கி இருள் சூழத்தொடங்கியது.
களப்பிரானும் வீராயியும் அகோரமும்:
_______________________________________
அரண்மனையை அடைந்தவன் உள்ளே பார்த்த காட்சி மேலும் கோபமூட்டியது அவனது உயிர்பிழைத்திருந்த மீதி மக்களும் அரண்மனைக்குள் இழுத்து போடப்பட்டிருந்தனர். பலர் சாகும் தருவாயில் இருந்தனர். அவர்கள் இருந்த நிலை அப்டிதான். குழந்தைகளும் கர்ப்பிணி பெண்களும் முதியவர்களுமாக இருந்தனர். ஆண்களோ தலைதுண்டிக்கப்பட்டு அவர்கள் உடல் இரத்த வெள்ளத்தில் ஊறிக்கிடந்தது.
மன்னர் அரசில் ஆண்கள் இவர்கள் மட்டுமே. கொல்லிமலைக்கு சென்ற ஐவரும் மற்றும் களப்பிரான் மட்டுமே.
அப்போது அகோர உருவத்தில் வீராயி அங்கு வந்து இறங்கினாள். "உன் இறுதி நாள் இன்று. உன் இனம் அழிந்ததை பார்த்தாயல்லவா. என் சபதம் நிறைவேறப் போகிறது இன்று உனை கொன்று " என்றாள்
களப்பிரானோ "என்னை கொன்றுவிடு ஆனால் அவர்களை விட்டுவிடு" என்றான்.
"ஹா ஹா உன் நிலைமை! அன்று நான்! இன்று நீ ! " என்று சொல்லிக்கொண்டு ஒரு வாளை வீசினால் அவன் மீது. அந்த வாளை லாவகமாக தடுத்தான் தனது சக்திவாய்ந்த வாளால். மேலும் இறந்துகிடந்தவர்களை அவன் மீது வீசிய போதும் களப்பிரானை அவைகள் நெருங்கவில்லை. அவன் வைத்திருந்த வாள் அவனை காப்பாற்றியது.
களப்பிரானும் திருப்பி தாக்கியதில் வீராயி அவன் வாளின் சக்தியால் பின்வாங்கினாள். வீராயி என்ற அகோரமும் தன் மந்திர சக்திகளை பயன்படுத்தி அவனை அழிக்க முயல ஆனால் முடியவில்லை. அவன் வாள் தான் காரணம் என்று உணர்ந்த அகோரம் அரண்மனையின் ஒரு தூணை பிடுங்கி மக்கள் மீது வீச , பத்து பதினைந்து பேர் குழந்தைகள் உட்பட நசுங்கி இறந்தனர்.
"ஆஆ என்று கத்தியவன் கோழையே என்னுடன் மோதாமல் ஏன் அவர்களிடம் உன் திறமையை காட்டுகிறாய்." என்றான் களப்பிரான்.
"ஹா ஹா உன் உயிர்தான் ஒரே பதில். இல்லையேல் உன் மக்களையும் இவளையும் கொன்றுவிடுவேன்" என்றது அகோரம். ஆம் வீராயயைத்தான். ஏனெனில் வீராயி களப்பிரானை உண்மையாக நேசிக்க தொடங்கியிருந்தாள் அவன் கோசலையின் நிலைக்கு வருந்தியதால். களப்பிரானை மன்னித்திருந்தாள். ஆனால் அகோரம் அவளை விடவில்லை. வீராயியோ அகோரத்தை தன் ஆன்ம பலத்தால் ஒரு நாள் நெருங்கவிடாமல் களப்பிரானுடன் காதலில் கலந்துருகி கர்ப்பம் தரித்திருந்தாள். இதனாலே வீராயியை கொடூரமாக துன்புறுத்தியது அகோரம். குழந்தையை கொல்ல முயன்றும் வீராயி அதற்கு உடன்படவில்லை.
களப்பிரானுடனான சண்டையில் அவனிடத்தில் அகோரம் பின்வாங்கியதற்கு வீராயியன் ஆன்மாவே காரணம். முழுமையாக அவள் உடலில் இறங்காததால் முழு சக்தியுடன் அகோரம் இயங்க முடியாமல் போனது.
வீராயியின் உயிரும் அவனது வாரீசையும் நினைத்த களப்பிரான் "தான் காதலில் ஏமாற்றப் படவில்லை அது உண்மையான காதல் "என்று சிறிது மகிழ்வோடு வீராயியை நோக்கி நகரும்பொழுது தான் வைத்திருந்த வாளை தூக்கி எறிந்து தாயத்தையும் பிடுங்கி எறிந்தான்! இந்த நேரத்தை சரியாக பயன்படுத்திய அகோரம் வாளால் கண்சிமிட்டும் நேரத்தில் களப்பிரானை வெட்டிப்பிளந்து துண்டுகளாக்கியது.
வீராயியின் தியாகம்:
______________________
அதே நேரத்தில் வீராயி தன் ஆன்ம பலம் கொண்டு அகோரனை அடக்கி கீழே கிடந்த களப்பிரானின் வாளை எடுத்து தன்னை குத்திக் கொண்டாள். அப்போது குரு வும் இதுதான் நடக்கப்போகிறது என்று அறிந்தவராக தன் கையிலிருந்த தங்கப்பேழையை திறக்க அந்த வாளின் மந்திர சக்தியால் வீராயின் உடலிலிருந்து வெளியேறி கட்டுப்படுத்தப்பட்ட அகோரனை தங்கப்பேழை உள் இழுத்துக்கொண்டது.
வீராயியின் தைரியத்தையும் களப்பிரானின் தியாகத்தையும் பார்த்துக்கொண்டிருந்த மக்கள் ஒரு கணம் கல்லாகி நின்றனர். குரு வும் மற்ற நால்வரும் வீராயியை நோக்கி ஓட குருவோ வீராயிடம் " உங்களுக்கு நாங்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம்" என்று கண்ணீர் மல்க கூறினான்.
அவளோ தன்னை தன் கணவனிடம் எடுத்துச் செல்லுங்கள் என்று கூற அவர்களும் சிதறிக்கிடந்த களப்பிரானின் உடலுக்கு அருகில் எடுத்துச்சென்றனர். களப்பிரானின் கண்களோ அப்போதும் காதல் பார்வையிலேயே இருந்தது. வீராயியை பாத்த பிறகு அவன் கண்களும் மூடின வீராயியும் மயக்கமடைந்தாள்.
மயக்கமடைந்த அவளை மன்னரின் குரு "மருத்துவ அறைக்கு எடுத்துச் செல்லுங்கள்" என்றான். குருவும் மருத்துவ பணிப்பெண்களும் அவளை காப்பாற்ற முயற்சித்து வெற்றியும் பெற்றனர். ஆனால் நினைவிழந்து படுத்த படுக்கையாகவே இருப்பாள் என்றார் குரு.
களப்பிரானும் அவளின் வயிற்றுப்பகுதியை தன் பொய்க்கரங்களால் தடவி உனக்காக காத்திருக்கிறேன் என்று வீராயியிடத்திலும், மன்னருக்கு தக்க தருணத்தில் வருவேன் என்றும் கூறி விடைபெற்று சென்றது அவனது ஆன்மா.
வீராயியும் ஒன்பது மாதங்கள் உயிருடன் போராடி ஒரு ஆண் மகவை பெற்றெடுத்து களப்பிரானிடம் சென்றாள். குருவும் களப்பிரானின் வாளையும் இதர ஆபரணங்களையும் அவன் உடலை பாடம் செய்து அனைத்தையும் பாதுகாப்பாக அரண்மனையின் உள்ளேயே புதைத்தனர். அவனருகில் வீராயியின் உடலையும் புதைத்தனர்.
ஆனால் இது தற்சமய நிவாரணம்தான் மன்னருக்கு. சாபமும் விலகி, மழை கொட்டத் தொடங்கி மக்கள் நல் வாழ்வு வாழத் தொடங்கினர். அகோரத்தின் ஆவியையும் கோசலைக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கே புதைக்கப்பட்டது. அதன் மீது ஆலமரக் கன்றும் நடப்பட்டது. அகோரம் அந்த ஆலமரத்தில் 500 வருடங்களாக அடைபட்டுக்கிடந்தது.
விளையாடச் சென்ற சிறுவர்கள் எதேச்சையாக ஒரு இடத்தை தோண்ட அங்கு அந்த தங்கப் பேழை கிடைக்க அதை எடுத்துச்சென்று தன் பெற்றோரிடம் கொடுக்க அதை அவர்கள் ஊர்த்தலைவரிடம் கொடுக்க, அதை ஊர்த்தலைவர் திறக்க , திறந்த உடனேயே அங்கயே சுருண்டு விழுந்து இறந்தார். அகோரம் மறுபடியும் தன் ஆட்டத்தை ஆரம்பித்தது.
பாஸ்கரின் மன்னர் பயணம்:
_____________________________
இதைக்கேட்டு பாஸ்கரன் பிரமிப்பும் பயமும் கலந்த அதிர்ச்சியில் இருந்தான். மேலும் அந்த பாறையை நகற்றி விட்டு பார்த்தவன் உள்ளே ஒரு பனை ஓலை இருப்பதை கண்டான். அதை எடுத்தவன் ஒரு கனம் மன்னரின் அரண்மனைக்கு சென்று வந்தது போல் ஆனான் மனதளவில்.
"இந்த ஓலை உங்களுக்கு ஒன்றை புரியவைக்கும் மன்னருக்கு சென்ற பிறகு " என்றான் ஆவி உதிரன். ஆம் அவன் உதிரனே இத்தனை நாளாக அகோரனிடம் போரிட்டுக் கொண்டிருந்தது. "உங்களுக்கு எப்பொழுதும் உதவியாக அண்ணா" என்று கூறினான் பாஸ்கரிடம். பாஸ்கரோ அண்ணனா என்று ஆச்சரியப்பட்டவாரே கிளம்பினான்.
அதுவரை ரேஸ்மியும் பொறுமை இழந்தவளாக இறங்க முற்பட பாஸ்கரோ "இரு இரு வந்துட்டேன்" என்றான்.
"வா. போவோம் நேரம் இனி இல்லை. ஒரு பெரிய வேலை இருக்கு" என்றவன் விறு விறு என்று நடந்து காருக்கு சென்றவனை அவன் காரும் ஆச்சரியப்படுத்தி இருந்தது. ஆம் வெடித்திருந்த டயர்கள் புதுசாக மாற்றப்பட்டிருந்தன. மற்ற பாகங்களும். பாஸ்கரோ "என்ன ஒரு சக்தி "என்றே அரசனை வியந்தவன் "ஹலோ கனவு கண்டது போதும் காசு கொடுங்க" என்று பாஸ்கரிடம் கேட்டான்.
தொடர்ந்த மெக்கானிக் "நீங்க தானங்க எனக்கு கால் பண்ணி வரவச்சது. இப்போ முழிக்குறீங்க! என்ன ஏமாத்தபாக்குறீகளா."என்றான் மெக்கானிக்.
பாஸ்கரோ மெக்கானிக்கு பணத்தை குடுத்து அனுப்பிய பிறகுதான் தெரிந்தது அது உதிரனின் வேலை என்று.
காரை எடுத்து நேராக மன்னருக்கு கிளம்பினார்கள். மன்னரின் எல்லையை அடைந்தவன் அவன் உடம்பில் ஏதோ ஒன்று நுழைந்தது போல் உணர்ந்தான். அரண்மனை ! அதன் தடமே இல்லாமல் இருந்தது.
ஊருக்குள் காரை செலுத்தியவன் அவன் சித்தப்பா வீட்டின் முன் நிறுத்தினான். அவன் சித்தப்பாவிடம் அனைத்தையும் விளக்க , அவரோ பாஸ்கரை அழைத்துக்கொண்டு மன்னரின் பரம்பரை குருகளிடம் அழைத்துச் சேன்றான்.
"வாருங்கள். உங்களால்தான் இத்தனை வருடங்கள் சாபம் பெற்ற இடம் இனி புனிதமாக போகிறது "என்றார் குருஜி.
மன்னரின் மக்களும் பாஸ்கரை பார்க்க திரண்டிருந்தனர். அன்று நகரமாக விளங்கிய மன்னர் இன்று சிற்றூராக.
இப்போதும் அவர்கள் நிலை படுமோசமாக இருந்தது. நீருக்கே படாத பாடு படவேண்டியிருந்தது.விவசாயம் பொய்த்துபோன நிலை. பட்டினி ,பஞ்சம், இறப்புகள் என ஓரு வழி செய்திருந்தது . இந்நிலையில் பாஸ்கரை ஒரு தெய்வப்பிறவியாகவே மதித்தனர்.அவன்தான் தங்களுக்கு விமோட்சம் தருபவன் என்று எண்ணினர்.
மக்களும் தங்கள் குலதெய்வத்திற்கு விரதம் பூஜைகள் செய்து முடிந்தவரை தங்களை காப்பாற்றி கொண்டு வந்தனர் அகோரத்திடம் இருந்து.
குருஜியோ வாருங்கள் செல்லலாம் என்று அழைத்துக்கொண்டு காட்டை நோக்கி நகர்ந்தார். அவன் மன்னருக்கு வந்தடைந்த நாள் களப்பிரான் கொல்லப்பட்ட நாள்தான். அதே சந்திரகிரகணத்தில். ரேஸ்மிக்கும் வீராயியின் நினைவுகள் வந்து போயின. ஒரு கோவிலுக்குள் நுழைந்தவர்கள் அங்கிருந்த சுவாமி சிலையை அகற்றியவுடன் ஒரு சுரங்க பாதை தென்பட்டது. அதை நோக்கி சென்றவர்கள் காட்டின் நடுப்பகுதியை அடைந்தனர். சுரங்க வழியும் அவ்வளவு சுலபமாக இல்லை.
"சுற்றி பார்த்தவன் ஒரே காடா இருக்கு. இதுல எப்படி போறது "என்றான் பாஸ்கர்.
குருஜியும் தன் கையில் வைத்திருந்த அருவாளை எடுத்து சரமாரியாக வெட்டி கொண்டு வழி உருவாக்கி கொண்டே சென்றார். அவர் வயதுக்கும் உடம்புக்கும் சம்பந்தமே இல்லை அவ்வளவு கடுமையாக உடம்பை வைத்திருந்தார்.
தன் வயிறை பார்த்து தடவிக்கொண்டே சென்றான் "நாமளும் நல்லாதான் வளத்து வச்சிருக்கோம் " என்று மனதுக்குள் பேசிக்கொண்டான்.
வீராயி ஏதோ நினைத்துக்கொண்டு அமைதியாக வந்தாள். ஆதவனோ தன் பங்குக்கு பின் வாங்க தொடங்கினான் இப்போது.
தூரத்தில் ஒரு சின்ன பாழடைந்த மண்டபம் ஒன்று இருப்பதை உணர்ந்தான். அது மண்டபம் போல்தான் காட்சிஅளித்தது. அது அவர்கள் புதைக்கப்பட்ட இடம். இருளும் தனது கருப்பு நிறத்தை கோரமாக மாற்றியிருந்தது.
அந்த இடத்தை அடைந்ததும் பாஸ்கரின் மனநிலை மாறியது. அவன் பாதம் களப்பிரான் புதைக்கப்பட்ட இடத்தில் பதிந்ததும் அங்கயே நின்றான். காடு அமைதியின் உச்சத்தில். நிலம் பிளவுபடுவதை கண்ட குருஜி சிறிது விலகி நின்று கொண்டார்.
மன்னில் இருந்து வெளிவந்த வாள் , இப்போது பாஸ்கரின் கையில் தஞ்சம் அடைந்திருந்தது. குருஜியும் தன் கையில் இருந்த சங்கால் ஓசை எழுப்பினார். அது கோவிலில் பூஜைகள் ஆரம்பமாக ஒரு உத்தரவு.
குருஜியும் ஓலையை களப்பிரானிடம் கொடுத்தான். அதை அவன் படிக்க தொடங்கியதும் மன்னரின் ஒட்டு மொத்த படையும் உயிர்பெற்றெழுந்தது. சாம்பலில் இருந்தும் மண்ணில் இருந்தும். அனைவரும் ஒரே நேரத்தில் இங்கு தோன்றினர். ரேஸ்மி வீராயியாக மாறினாள். மீண்டுவந்த உதிரனும் தளபதிகளும் குருவும் இருவருக்கும் நன்றி தெரிவித்தனர். அவர்களை தெய்வங்களாக பார்த்தனர் அனைவரும்.
ஆன்மாக்களின் போர்:
_______________________
இதை அறிந்த அகோரமும் தன்படைகளை உயிர்த்தெழச் செய்தது.
போர்மேகம் மூண்டது. அகோரமும் தன் படைகளுடன் கோசலையின் காட்டுக்குள் தோன்றியது.. மன்னரின் படையும் ஆயத்தமாகியது.
களப்பிரானோ "இன்று உன் இறுதி அத்தியாயம் என் கையால் எழுதப்படும்" என்றான்.
அகோரமும் வீராயியை பார்த்து "மகளே" என்றவன் ! வீராயியோ பதிலுக்கு "யார் மகள்? ஒரு பேய்க்கா? "என்று கேட்டவள் அதை "நீங்கள் தந்தையாக இருந்திருந்தால் அழைக்கலாம். இப்போது நீங்கள் ஒரு துர்சக்தி அவ்வளவே" .
மழையும் காற்றுமாக பூப்பந்து தீப்பந்தாக மாறியது. அனைத்து பட்சிகளும் அலறியடித்து கத்தின. அகோரம் களப்பிரானை தாக்க தொடங்கியது. களப்பிரானால் அதிகம் ஏதும் முடியவில்லை தனிஆளாக அகோரமோ மிகப்பெரும் சக்தியாக. கடும்போர் நிகழ்ந்தது. இம்முறை இரத்தம் ஏது? மரணம் ஏது? மறுபடியும் மறுபடகயும் உயிர்த்தெழுந்தனர்.
முடிவுறா போரா இது என்று உணர்ந்த களப்பிரான் தன் குருவிடம் கேட்க
" அரசே நீங்கள் மானுட சரீரத்தில் இருப்பதால் அது இவ்வாறே நடக்கும். நீங்கள் இருவரும் ஆத்மாக்களாக இணைந்து ஒற்றை ஆத்மாவாக மாறினாள் மட்டுமே அகோரனை அழிக்க முடியும்"என்றார்.
அதே நேரம் ரேஸ்மி என்ற வீராயியை நோக்கியவன்! "நாம் இம்முறை மனிதபிறவியில் வாழ்ந்துவிட்டோம் , மன்னரின் மக்களுக்காக இப்பூவுலகை விட்டுப்பிரிய சம்மதமே" என்ற ரேஸ்மி தன் கையில் வைத்திருந்த வாளால் தன்னை குத்திக்கொண்டாள்.
பாஸ்கரும் தன் காதல் மனைவி கூறியதைப்போல் பூத உடலை விட்டு பிரிந்து, ஆன்மாகவாக மாறி வீராயியுடன் கலந்து, ஒன்றினைந்த சக்தி பெற்றதாக மாறினான். இப்போது களப்பிரான் அகோரத்தை தாக்க! அகோரம் தடுமாறியது. தப்பிக்க உருவங்களை மாற்றிக்கொண்டே இருந்த அகோரம் அடுத்த உருவத்திற்கு மாறும்போது களப்பிரானின் வாள் அதன் தலையை துண்டாடியது. களப்பிரானும் அகோரத்தின் தலையை கையில் எடுத்து புவியை பிளப்பது போல் கர்ஜித்து தன் கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டான். மன்னரே நிலநடுக்கம் கண்டது போல் ஆகியது.
அதன் உடலிலிருந்த அனைத்து ஆத்மாக்களும் வெளியேற இரத்த ஆறாக ஓடியது. அவனால் சிறைபிடிக்கப்பட்ட மற்ற ஆத்மாக்களும் களப்பிரானுக்கு நன்றி தெரிவித்து விடைபெற்றன.
அகோரம் சிறிது நேரம் துடி துடிக்க மக்கள் செய்த பூஜையும் அகோரத்தை முற்றிலுமாக அழித்தொழித்தது.
மன்னரின் படையும் கோசலையின் படையும் காற்றில் மறைந்து போயின. உதிரனும் நன்றி தெரிவித்து மறைந்தான். களப்பிரானும் வீராயியும் அவ்வறே பாஸ்கரும் ரேஸ்மியாக மறைந்தனர்.
வரண்ட காற்று நின்று ஏதோ புதிய பூமிபோல் மக்கள் உணர்ந்தனர். தென்றல் காற்று இதமாக அவர்களை தடவிச்சென்றது. மன்னர் சாபத்திலிருந்து விடுபெற்றது. குருஜி பாஸ்கரின் உடலையும் ரேஸ்மியின் உடலையும் முன்பு புதைக்கப்பட்ட இடத்திலேயே புதைத்தனர்.
மன்னர் மக்கள் பாஸ்கரையும் ரேஸ்மியையும் கடவுளாக வணங்கினர். அவர்கள் காரை கோவிலில் அலங்கரித்து வைத்தனர்.
புகுந்த வீட்டுக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்தவர்களது வீடும் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ஆம் அதை கோவிலாக மாற்றிவிட்டனர் மன்னர் மக்கள். பாஸ்கர் ரேஸ்மியின் ஆசையும் நிறைவேறியது அனைவரும் வருகை தந்ததால். இருவரின் ஆத்மாவும் பரிபூரணமாக விடைபெற்றது இப்புவியிலிருந்து...
முற்றும்...
புதினம் போல் இருந்தது... 👏🏽👏🏽
ReplyDeleteநன்றிகள் பல உலகன் அவர்களே💐🙏😊
Delete