கனகவள்ளி - 3

                     "அம்மா ஆஆஆ அப்பா ஆஆஆ" என்று அழுதுகொண்டேயிருந்த அந்தக் குழந்தையைப் பார்த்த கர்பிணிப் பெண் அவளருகில் வந்து சிரித்துக்கொண்டே 'அவளை அணைத்தபோது'  இருவரும் மறைந்து போயினர் அவ்விடத்தை விட்டு.

             அதேநேரம் குடுகுடுப்பைக்காரன் ராஜாவோ, 'செட்டியார் வீட்ல உள்ள குடும்பம் என்ன ஆனதோ ' என்று நினைத்துக்கொண்டே சென்றவன்,
" சே! இப்டி ஒரு பிரச்சனைல நாம விட்டுட்டு போனா நம்ம தொழிலுக்கே துரோகம் செய்ற மாதிரி. உயிர் போனா போகட்டும். நம்மளால முடிஞ்சத செய்வோம்" என்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மீண்டும் செட்டியார் வீட்டுக்குத் திரும்பினான்.

         காலை நேரம் என்றாலும் மறுபடியும் ஏதோ இருள் கவ்வியது போன்றே இருந்தது அந்நேரம்.

          மேலே அந்நாந்து பார்த்தவன் 'கிளைமேட் கூட பயமுறுத்துகிற மாதிரி இருக்கிறதே' என்று முனங்கிக் கொண்டே சென்றான். சிறிதுநேரத்திலேயே வீடும் மாறுதலுக்கு உட்பட்டு ஏதோ விகாரமாக காட்சியளித்தது அப்போது. அது மேலும் பயத்தை அதிகப்படுத்தியிருந்தது அவனுக்கு.

          சிறிது கலக்கத்தோடு 'ஆத்தா ஜக்கம்மா நீதான் தாயி காப்பாத்தணும்' என்று மனதில் வேண்டிக் கொண்டே  'கேட்'டருகில் செல்ல அப்போது 'டம்' என்று பெருஞ்சத்தம் கேட்டு திரும்பியவன் முன்புறம் தென்னைமரம் ஒன்று ஒடிந்து விழுந்தது.

     " ஆத்தாடி ! இன்னுமொரு அடி எடுத்து வச்சிருந்தோம் இந்நேரம் தென்னை மரத்துக்கே சட்னி ஆயிருப்போம். இனியும் போகக்கூடாது அங்க. நேரா பெரிய சாமிய பார்ப்போம். சொல்வோம். அவர் பார்த்துக்கட்டும் " என்று முடிவெடுத்தவன் உடலே வியர்த்திருந்தது  மரம் விழுந்ததால்.

      மேலும் அந்த வீட்டைப் பார்த்த போது அவனது உள்ளுணர்வு "இனி ஏதேதோ அசம்பாவிதங்கள் நடக்கப்போகுது. அத எப்டியாச்சும் தடுத்து நிறுத்தணும். அதுக்கு பெரிய சாமிதான் சரி " என்று மனதில் நினைத்துக்கொண்டு நடக்கத் தொடங்கினான் அவ்விடத்தை விட்டு. அதேசமயம் வீட்டுக்குள்ளிருந்து ஒரு விதமான குரூரமான சத்தங்களும் கேட்டு அடங்கியிருந்தன அப்போது.

       கதிரவனும் பயந்தெளிந்து இப்போது மெதுவாக எட்டிப்பார்ப்பது போல் எழுந்து கொண்டிருந்தான் கிழக்கில்.

       மற்றவர்கள் அனைவருக்கும் சாதாரண நாளாக தொடங்க, ஆசிரமத்தில் இருந்த குருஜிக்கு மட்டும் ஏதோ தவறாகவே தொடங்கியது அன்றைய நாள். ஆம் காலையில் எழுந்து குளித்துவிட்டு கடவுளுக்கு பூஜை செய்துவிட்டு, பசு மாட்டுக்கு பூஜை செய்ய பசுவின் அருகில் சென்றவர் அதன் விசித்திரமான போக்கால் சந்தேகம் கொண்டார்.

           ஆனாலும் பூஜையை தொடர்ந்தவர், பசுவிற்கு பூ மாலையை அணிவித்துவிட்டு சந்தனம் குங்குமத்தை அதன் நெற்றியில் வைக்க குனிந்தபோது திடீரென மேகம் இருண்டு காற்று பலமாக வீசத் தொடங்க, அருகேயிருந்த வேப்பமரத்தின் அடியில் ஊன்றப்பட்டிருந்த அம்பு வடிவ வேல்களும், 'ய' வடிவ வேல்களும் பிய்த்தெறியப்பட்டன அந்தக் காற்றில். மற்ற பசு மாடுகளும் கன்றுகளும் கர்ண கொடூரமாக கத்த தொடங்கின.

      ஆசிரமத்தின் கூரைகள் காற்றின் வேகத்தில் பிய்ந்து பட்டங்களாக பறந்து கொண்டும், அவரது சீடர்களும் நிற்கமுடியாமல் உருண்டு கொண்டும் இருந்தனர்.

    குருஜியும் தன்னை திடப்படுத்திக்கொண்டு பூஜையை முடிக்க முற்பட்டு பசுமாட்டின் கண்களைப் பார்த்தபோது , கண்களில் இரத்தம் வடிந்து அதன் உடம்பே அழுகிய நிலைக்கு மாறி அருவறுப்பாக மாறிக்கொண்டிருந்தது. அதையும் மீறி குருஜி நெற்றியில் பொட்டு வைக்க கட்டை விரலை வைத்து போது உணர்ந்தார் அது ஒரு கர்ப்பிணிப்பெண்ணின் அடக்க முடியாத கோபம்தான் காரணம் என்று.

              மறுநொடியில் குருஜியும் பசுவால் முட்டப்பட்டு தூக்கி வீசப்பட்டார். தூக்கிவீசப்பட்டவர் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த கோடாரிகளின் கூர்மையான முனைகளில் விழப்போக அந்தத் தருணத்தில் அவரின் காதில் "இவ்வளவு விரைவாக உன் மரணமா ச்சே ச்சே "  என்று கூறிய குரல் அருவமாக  அவரை இழுத்து மரத்தின் மீது மோதச்செய்தது பலமாக. இதனால்  பலத்த காயமடைந்து மயக்கமடைந்தார்.

            ஆசிரமும் தலைவிரிகோலமாக மாறினாலும் காற்று மறுபடியும் தன் தென்றல் நிலைக்கு மாறி சீடர்களை  வியக்க வைத்திருந்தது "நீயா இப்பிடி" என்று.

      நடந்த களேபரங்களைக் கண்டு கதிரவனும் பயந்து மேற்கே வேகவேகமாக மறைய முற்பட்டிருந்தான் இரத்தச் சிவப்பில். அதைக்கண்டு பறவைகளும் பயத்தில்  பலத்த ' கீச் கீச் ' என்ற சத்தங்களுடன் தங்களது கூட்டிற்கு விரைந்துகொண்டிருப்பதுபோல் இருந்தது அந்நேரம்.

          காயங்கள் பட்ட குருஜியை எடுத்துக்கொண்டு சென்று மருத்துவ உதவி செய்துகொண்டிருந்தது ஆசிரமத்தைச் சேர்ந்த மருத்துவக் குழு ஒன்று. மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கண்விழிக்காமல் இருந்தவர் மெதுவாக கண்திறந்து பார்த்த போது பயமும் குழப்பமும் குடிகொண்டிருந்தது அவர் முகத்தில்.

           'எங்கே நடந்தது ? எப்படி நடந்தது? இந்த தவறு. இவ்வளவு அஜாக்கிரதையாக இருந்ததில்லையே' என்று யோசித்தவர், படுக்கையின் அருகிலிருந்த 'பெல்'லை அழுத்திய போது, வேகவேகமாக இரு பெண் நர்சுகள் ஓடி வந்தனர் அவரது அறைக்கு. வந்தவர்கள் குருஜியின் முன் ஏதும் பேசாமல் பவ்யமாக நிற்க, குருஜியோ அவர்களைப் பார்த்து
"என் மொபைலை எடுத்துக் கொடுங்க" என்றார்.

                இப்போது புரிந்தது குருஜிக்கு அந்த அபாயம் எது என்று. அப்போது செல்வாவை நினைத்தவர்  அவசர அவசரமாக அவனது எண்ணைத் தேடி தொடர்புகொண்டார் குருஜி. அழைப்பு சென்று கொண்டே இருந்ததால் பலமான யோசனையிலேயே  இருந்தவர் அழைப்பை துண்டிக்க முற்பட்ட போது , அவரது அழைப்பு ஏற்கப்பட்டது மறுபுறம். சில நொடிகள் பதில் பேசாதவாறு குருஜி அமைதியாகவே இருந்தார்,  எதிர்புறம் என்ன பதில் வருகிறது என்பதைக் கேட்க.

        இன்னும் கூர்ந்து கேட்ட குருஜிக்கு "ர்ர்ர்ர் ம்ம்ம்ம்ம் " என உறுமும் சத்தம் போகப் போக  கேட்டது. முனகல் சத்தமும் பலமாக கேட்ட பிறகு "ஒருத்தனும் தப்பிக்க முடியாது" என்ற கரடுமுரடான காஞ்சனா குரலுக்குப் பிறகு அவரது அழைப்பு துண்டிக்கப்பட்டது தானாகவே.

கதிரவனும் தன்னை முழுமையாக மறைத்துக்கொண்டிருந்தான் இப்போது.  பூமியும் கருப்பு போர்வையை போர்த்தியபடி இருந்தது இரவில்.

          சிறிது நேரம் அமைதியாக யோசித்தவர் மறுபடியும்  'ஏதோ தவறு செய்துவிட்டோம் எங்கே..ம்ம்' என்று தனக்குத்தானே பேசியவர் அடுத்த எண்ணைத் தேர்ந்தெடுத்தார்  அழைப்புக்கு அவரது மொபைலில். அது  தெய்வம் மல்டிபெசாலிட்டி மருத்துவமனையின் ஆண் நர்சாக வேலை செய்யும் ஒருவனுக்குச் சென்றது.

     அழைப்பை ஏற்று பதிலளித்தவன் "ஹலோ யாரு " என்று கேட்க,

மறுமுனையில் , " நானா. உன் சாவு டா. திரும்பிப் பாரு " என பதில் வர

அதைக்கேட்டுத் திரும்பியவன் பார்த்தது 'மின்னல் வேகத்தில்  ஒரு ஆம்புலன்ஸ் அதில் ஒரு பெண் டிரைவராக ' தன்னை நோக்கி வருவதை உணர்ந்தவன் தப்பிக்க முயல நொடிப்பொழுதில் தூக்கி வீசப்பட்டு ரோட்டின் ஓரத்தில் நின்ற  ஒரு கர்பிணிப் பெண்ணின் காலடி அருகே விழ, தலையிலிருந்து  இரத்தம் வடிந்து ஆறாக ஓடிய போதும் அந்தப் பெண்ணின் முகத்தை பார்த்துக் காப்பாத்து மா எனக் கேட்க நினைத்தவன் "நீயா!" என்று அவளைப்பார்த்து அதிர்ச்சியில் உறைந்தவன் காதில் ரிங்டோன் ஒழித்துக்கொண்டேயிருக்க கண் விழித்தெழுந்த போது "ச்சை கனவா" என தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அருகிலிருந்த தன் மொபைலை எடுத்துப் பார்த்தவன்

"சுவாமியா !" என்று
பதறியடித்து , " ஹலோ! சாமி! சொல்லுங்க சாமி " என்று பணிவோடு சொல்லிவிட்டு குருஜியின்பதிலுக்காக காத்திருக்க,

மறுபுறம் குருஜியோ," ரகு! பார்த்து உசாரா இருங்க. எல்லாம் தப்பா நடக்குது. நான் கொடுத்த தாயத்தை கைல கட்டிக்கோங்க. இல்லனா உயிருக்கே ஆபத்து வரலாம் " என்று கூற

பதிலுக்கு , " சரிங்க. சாமி.  நிச்சயமா"  என்று பதிலளித்துக்கொண்டே ஆம்புலன்சின்  டிரைவர் சீட்டின் முன்புறம் உள்ள கண்ணாடியில் பார்வையை செலுத்தியவன் ஏதோ ஒரு மனித உருவம் தன்னை பார்ப்பது போலவே உணர்ந்தான்.

    இன்னும் பார்வையை கூர்மையாக்கி அந்தக் கண்ணாடியைப் பார்த்த போது "அது   உண்மை " என உறுதிசெய்துகொண்டவன் மறுபுறம் பேசிக்கொண்டிருந்த குருஜியின்
"ஒரு கர்பிணிப்பெண்தான் காரணம். ஏன்னு தெரியல. அதனால கர்பிணிப்பெண்ண பார்த்தா அந்த தாயத்த கைல வச்சுக்கோங்க. ஒன்னும் செய்யாது"  என்ற குரலை சட்டை செய்யாததால் குருஜியோ மறுபுறம்  "ஹலோ ஹலோ " என்றவாரே இருந்தார்.

       அந்த இரவிலும் மங்கலாக
'கண்கள் மட்டும் தெரிந்த'  உருவத்தை பார்த்து "யாரு! யாரு அது!"  என்று கேட்டுக் கொண்டே பயத்தில், அருகில் நோயாளியின் 'பெட்டில் படுத்திருந்த ரமேஸை எழுப்ப முயல
" டேய்! டேய்! ரமேஷு! எந்திரிடா!  யார்ரா இது? பார்ரா ! என்று ரமேஷைப்  பார்க்காமலே எழுப்பியபோது அந்தக் கண்கள் மறைந்திருந்தது அங்கிருந்து.

     எழுந்தமர்ந்த ரமேஷைப் பார்க்காமலே அவனது கண்ணத்தை தட்டி "அங்க பார்த்தியாடா. ஏதோ ஒரு உருவம் பார்த்த மாதிரியே இருந்துச்சு" என்று பேசிக்கொண்டே திரும்பியவன் பார்த்தது அதே உருவம் இப்போது அவனருகில்.

    பயத்தில்  "ஆஆஆஆ " என்று அலறிய போது அந்த உருவம் மறைந்து, ரமேஷ் எழுந்திருந்து"என்னாச்சுடா ஏன்டா இப்டி கத்துற." என்று கேட்ட போது ஆம்புலன்சின் பின் கதவை தட்டும் சத்தம் பலமாக கேட்டது.

   " டேய் ரமேஷ்.. இருடா. திறக்காத. ஏதோ தப்பா படுது " என்றான் ரகு.

ரமேஷோ ,"இருடா பார்ப்போம் " என்று சொல்லிவிட்டு, பின்புறத்தில் இருந்த கண்ணாடி வழியாக பார்த்த போது 'அங்கே ஒரு அழகான கர்பிணிப்பெண் சிகப்பு சீலையிலே நின்றுகொண்டிருந்தாள்'.

"அடேய் ஒரு புள்ளத்தாச்சி நிக்குதுடா இருடா என்னனு கேப்போம்"  என்ற ரமேஷை தடுத்த ரகு, "வேண்டாம் டா. திறக்காத. இந்த டைம்ல இந்த பொம்பள ஏன் இங்க வந்த கதவ தட்டுது யோசி" என்று கூற!

ரமேஷோ,"பயந்து சாகாதடா" என்றவாறு கதவை திறக்க முற்பட்டவனை மீண்டும் தடுத்த ரகு, "சரி. உன் இஸ்டம். ஆனா எங்க தாயத்து கைல காணோம். அத கட்டிகிட்டு போ" என்றான்.

ரமேஷோ,"அதுவா. இங்கதான் வச்சேன்.இருக்கானு பாரு. தேடு  "என்றபோது மீண்டும் கதவு தட்டும் சத்தம் பலமாக கேட்டது.

ரகுவோ தேடுதலில் மும்முரமாகியபோது ரமேஷ் சட்டென்று கதவைத்திறந்து கீழே இறங்கி அந்தப் பெண்ணிடம்," என்னம்மா"  என்று கேட்க

அவளோ ," கர்பிணி பெண் வார்டு இந்தப் பக்கம்னு சொன்னாக, அதான் தேடி வந்தேன். கண்டுபுடிக்க முடியல. ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸா இருந்ததா! பேச்சு சத்தம் வேற கேட்டதா! அதான் கேக்கலாம்னு..." ரகுவைப் பார்த்துக்கொண்டே கூறினாள்.

     ரகுவோ ,'ரமேஷ் கதவைத் திறந்ததை சற்றும் எதிர்பாராத திகிலில் இருந்தவன், அவளின் குரூரமான பார்வையால் மீண்டும் பீதிக்குள்ளானான்'.

     மேற்கொண்டு தொடர்ந்தவள் ,"அண்ணே! கொஞ்சம் விட்டுவரமுடியுமா. தேடித் தேடி கால் வலிக்குது" என ரமேஷிடம் கெஞ்சிக் கேட்டாள்.

       ரகுவோ ரமேஷிடம் சைகையில்," வேண்டாம்" என சொல்ல, அதைக் கண்டுக்காத ரமேஷ் கதவை சாத்திவிட்டு "நீ உள்ளயே இரு. நான் விட்டு வந்துடுறேன்" என அவனும் சைகையில் பதில் கூற ஆனால் ரகுவோ சாத்தப்பட்ட  பின்கதவு கண்ணாடி வழியாக அவர்களைப்பார்த்த போது அந்த அழகான பெண் கொடூர உருவ நிலையில் கர்பிணி பெண்ணாக காட்சியளித்தாள்.

       ரகுவை திரும்பிப் பார்த்துச் சிரித்தவளின் பார்வையை உணர்ந்தவன் "கனவில் வந்த அதே பெண்! இப்போது பார்த்த அதே பார்வை" என்று கண்டுபிடித்தவன் கத்தி ரமேஷை அழைக்க! அது கேட்காமல் போக!,  கதவை திறக்க முடிந்து அதுவும் முயலாமல் போக தவித்தான். அவளும் அவனோடு மருத்துவமனைக்குள் மறைந்து போனாள்.

        முன்னாள் படியிலே ஏறிச் சென்ற ரமேஷ்க்கு தன் கழுத்தை யாரோ பிடிப்பது போல் உணர, திரும்ப முயல அது முடியாமல் போக இப்போது கழுத்து நெறிபட தொடங்க , அவனது கண்கள் இரண்டும் பிதுங்கியவாறு தெரிய ஆரம்பித்த நேரத்தில் முன்பக்கமாக விழுந்தான் மயங்கி. சில நொடிகளில் மயக்கம் தெளிந்த போது அவன் தர தரவென மாடிப்படிகளில் மேல்நோக்கி இழுத்துச்செல்லப்படுவதைப் பார்த்து பயத்தில் அழுதவன் இப்போது வலியும் சேர்ந்துகொள்ள துடிதுடித்தான்.

       மருத்துவமனையின் டெரஸ்க்கே இழுத்தச்செல்லப்பட்டதால் காயத்தால் உயிர் பிரியும் தருணமாகவே அவன் நினைத்து "நீ யாரு. ஏன் கொல்லப்போற அத சொல்லிட்டு செய்" என்றான் அவளைப்பார்த்து.

அவளோ "தெரிந்து கொண்டு என்ன செய்யப்போகிறாய் "என்று கூறியவாறே அவனை இழுத்து டெரஸில் இருந்த குறுஞ்சுவரின் மேல் நிக்க வைத்த பிறகு "இப்போது தெரிந்து கொள்வாய்" என்றவாறு தன் உருவை காண்பித்த பிறகு அவனைத் தள்ளிவிட்டாள் கீழே. பத்தாவது மாடியின் டெரஸிலிருந்து விழுந்துகொண்டிருந்த போது "அவளா " என்றவனின் உடல் ஆம்புலன்சின் முன் விழுந்தது பொத்தென்று. அதில் சிதறிப்போனது உடல்.

        அப்போது ஆம்புலன்சின் முன்புற கண்ணாடியில் இரத்தமும் தெரித்து விழ அதைப்பார்த்த ரகு நடு நடுங்க, அதே சமயம் அவனின் தோளின் மீது ஒரு கை அழுத்தி "ரகு"என்றது ஒரு பெண்ணின் குரல். அதைக்கேட்டு பயந்தவன் அவளாககவே இருப்பாள் என நினைத்து அருகில் கிடந்த கத்தரிக்கோலை எடுத்து சடாரென்று குரல் கேட்ட திசையில் குத்தினான்.

      குரல்வளையிலே குத்துபட்டதால் குத்துப்பட்ட அந்த பெண்ணும் மேற்கொண்டு பேச முடியாமல் சரிந்து விழுந்தாள் வலியோடு. " அய்யோ திவ்யா நீயா. இப்போ ஏன் வந்த. மன்னிச்சிடு. பயத்துல செஞ்சிட்டேன்"  என அழ அதேநேரம் அவளின் உயிரும் உடலைவிட்டு பிரிந்து காற்றோடு கரைந்து போனது.

    

   தொடரும்...

      

 

Comments

Popular posts from this blog

தெரு நாய்

மனையாள்