கனகவள்ளி...

       மயிலம்பாறை ஊரே அமைதியாக ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தது அந்த நடு இரவில். அந்தப் பௌர்ணமி நிலவு, மரங்களின் ஒய்யார நடனத்தை, அரசன் போல் மேலிருந்து ரசித்துக்கொண்டிருந்தது. தென்றலோ நிலவின் சேவகன் போல செயல்பட்டு மரங்களை நடனமாடச்செய்து கொண்டிருந்தது தன் வேகத்தால்.

      அந்த நிசப்தத்தை குலைக்கும் வகையில் இருவர் வந்துகொண்டிருந்தனர் தங்களது பழைய சைக்கிளில் மயிலம்பாறை நோக்கி. ஊரே உறங்கும் வேலையில்தான் இவர்களுக்கு வேலை. ஆம் அவர்கள் வேற யாருமில்லை, குடுகுடுப்பைக்காரர்கள் தான் அவர்கள். ஒருவன் மாதவன், இன்னொருவன் ராஜா. 

       இருவரும் மயிலம்பாறையின் முதல் தெருவான காட்டுப்பறையை அடைந்ததும், அதில் தனது சைக்கிளை நிறுத்திய ராஜா " மாதவா, நான் காட்டுப்பாறை உள்ள போறேன். நீ எந்ந தெருக்கு போற?" என்று ராஜா கேட்டபோது அவர்களைக்கடந்து ஒரு ஆம்புலன்ஸ் கண் இமைக்கும் நேரத்தில் சென்றது. அப்போது மேலும் தொடர்ந்த ராஜா, "இந்த ரோட்ல மட்டும் அடிக்கடி ஆக்சிடெண்ட் ஆகுது" என்று வருத்தப்பட்டான்.

         "சரி! சரி! அதுக்கு நாம என்ன பண்ண முடியும். அவுங்க விதி அது " என்ற மாதவன்  மேலும் "நான் 4வது தெருக்கு போறேன். ஏனா நேத்து 3 வது தெருக்கு போயிருந்தேன். எல்லாமே பெரிய பெரிய வீடு. இரண்டு மணிநேரம் காட்டுக்கத்தல் கத்தியும் பத்துபைசா கிடைக்கல. அதான் 4வது தெருக்கு இன்று போறேன் என்றான் சலிப்புடன்".

         மேலும் தொடர்ந்த மாதவன் " பார்த்து டா! காட்டுப்பாறை, ஒரு மாதிரியான இடமாம். நாய் கூட இல்லையாம் இந்த ஏரியால. வளர்த்தாலும் செத்துப்போகுதாம்,  இல்லனா ஓடிப்போய்டுதாம். பின்னாடியே போனா சுடுகாடு வேற. பார்த்துப் போய்ட்டு வா. யார் மொதல வந்தாலும் இங்கயே வெயிட் பண்ணுவோம்" என்று ராஜாவிடம் கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் தன் சைக்கிளில்.

       மாதவன் கூறியதையெல்லாம் அமைதியாகக் கேட்ட ராஜா, ஒருவித சிந்தனையுடனே சிறிது நேரம் நின்றவன், பிறகு சைக்கிளை அங்கயே நிறுத்திவிட்டுக் காட்டுப்பாறைத் தெருவிற்குள் நடந்துச் சென்றான் சிறிது பயத்துடன்.

       தெருவின் உள் செல்லச் செல்ல இருபுறமும் வீடுகள் அவனை வரவேற்றன. விளக்குகளும் நிலவுக்குப்போட்டியாக வெளிச்சத்தால் இரவை பகலாக்கியிருந்தது அப்போது.

       முதல்வீட்டை அடைந்த ராஜாவோ! மனதிற்குள் ' நிலா, நட்சத்திரம், லைட் எல்லாம் நல்லா  பல்லு இளிச்சிக்கிட்டு இருக்கு.நமக்கு பயமா. நாம உடுக்கை அடிக்கிற சத்தத்துல ஊரே பயப்படனும் இன்னைக்கு. இவனுக்கு நம்மள பீதியாக்குறதுல அப்டி ஒரு சந்தோசம்' என்று நினைத்தவன், தன் ஜோல்னா பையிலிருந்த உடுக்கையை எடுப்பதற்கும் கரண்ட் கட் ஆவதற்கும் சரியாக இருந்தது.

        கரண்ட் கட் ஆனதும் மயிலம்பாறையே ஒளிந்துகொண்டது போல் இருந்ததே இரவிற்குள். இதை சிறிதும் எதிர்பார்க்காத ராஜா,' என்னடா இது ஒரே இருட்டா இருக்கு. "சரி டார்ச் லைட்ட எடுப்போம்" என்று நினைத்து மறுபடியும் பைக்குள் கைவிட்ட போது தான் புரிந்தது அவனுக்கு, "அமாவாசை மாறி இருக்கு. பொளர்ணமி தான இன்னைக்கு" என்று நினைத்து தலையை மேலே நிமிர்த்தி பார்த்த போது " என்னடா இது நிலாவையும் காணோம், ஒன்னத்தையும் காணோம்" என்று திகிலடைந்து நின்றான். அப்போது ராஜாவுக்கு பயம் வர ஆரம்பித்திருந்தது. ஆனால் மாதவனின் உடுக்கை சத்தம் மட்டும் கேட்டதும் சிறிது நார்மலானவன், டார்ச்சை எடுத்து ஆன் செய்தபோது மீண்டும் கரண்ட் வந்திருந்தது.

       "அப்பாடா" என்று பெருமூச்சு விட்டவன், டார்ச்சை ஆப் செய்துவிட்டு, உடுக்கை அடிக்கத்தயாரானான்.

          "நல்ல காலம் பொறக்குது!, நல்ல காலம் பொறக்குது!. ஆத்தா ஜக்கம்மா, இந்த வீட்டபத்தியும், இங்க நடக்கப்போற நல்லது கெட்டதையும் சொல்ல எனக்கு உத்தரவு கொடுத்திருக்கா தாயி" என்று ஆரம்பித்தவன் வீட்டுக்கு இரண்டு நல்லது கெட்டது சொல்லிவிட்டு ஒவ்வொரு வீடாக நடந்தான்.

          வீட்டுக்குள் உறங்கிக் கொண்டு இருந்தவர்களில் சிலர் உடுக்கை சத்தத்தால் விழித்து, இவன் சொன்னதைக் கேட்டவர்கள், "இவனுகளுக்கு வேற இலையில்லை"என்றார் ஒருவர்.

         இன்னொருவரோ "எப்பபாரு தொந்தரவு செஞ்சிகிட்டு. இவனுகள கொல்லனும் மொதல்ல இந்தப்பேயி" என்று முனுமுனுத்தார்கள்.

           குழந்தைகள் உட்பட, சிலர் பயத்தில் கண்களை இறுகமூடிக்கொண்டனர் உடுக்கையின் வித்தியாசமான இசையால்.

             இப்படியாக பல வீடுகளுக்கு உடுக்கை அடித்துவிட்டு, "சரி போவோமா. இதுவே ஜாஸ்தி இன்னைக்கி" என்று நினைத்தவன், அடுத்தபடியாக சற்று உள்ளே தள்ளி இருந்த பழைய வீட்டைப் பார்த்தான், அது பழைய கால செட்டியார் வீடு போன்று இருந்தது.

            "சரி ஆனது ஆச்சு இந்த வீட்டோட முடிச்சிக்குவோம்" என்று அங்கும் உடுக்கை அடிக்கத் தயாரானவன், முன்வரிகள் ஏதும் சொல்லாமல் நேரிடையாக "ஆத்தா இந்த வீட்டுக்கு பெரிய கண்டம் இருக்கு. சாவு விழப்போகுது. நீ உன்ன காப்பாத்த , நீ மறந்து போன உன்னோட குல தெய்வத்தை வேண்டிக்க தாயி" என்று தன்னையறியாமல் சொன்னான்.

           "ம் மேலே சொல்றா " என்ற குரல் அவன் காதில் விழுந்தது. திடுக்கிட்டவன் குரல் வந்த திசையை நோக்கி் மேலே பார்த்ததும் விக்கித்து நின்றான். "ம் சொல்றா " என்றது மறுபடியும். அவன் கண்ணுக்கு ஏதோ உருவம் ஒன்று தெரிந்தது. மேலும் கூர்ந்து பார்க்க முயன்றவன் கிழே கதவு திறக்கும் சத்தம் கேட்டதும், அங்கும் பார்வையைச் செலுத்தியவன் அங்கு ஒரு உருவம் தெரியவர , அப்போது திடீரென்று இடதுபக்கம் ஒரு சத்தம் வர , திரும்பியவனுக்கு அதிர்ச்சி "அவன் கண்ட உருவம் இங்கே அவன் முன், 'ஒரு கர்ப்பிணி பெண்ணாக பாதி உடம்பு அழுகியநிலையிலும், பாதி இரத்தம் வடிந்துகொண்டிருந்த நிலையிலும் இருந்தது. அண்ணா "அங்க கிடக்கிற எலுமிச்சம் பழத்தையும், மாந்திரீக பொம்மையையும் தூக்கி எரியுறீங்களா. எனக்கு இந்த வீட்ல வேலை இருக்கு " என்று சொன்னதும் அதுவரை கோமாநிலையில் நின்றவன், உடுக்கையையும் பையையும் எறிந்துவிட்டுத் தலைதெறிக்க ஓடினான் சைக்கிள் நின்ற இடத்துக்கு.

              சைக்கிளை எடுத்தவன் நேராக மாதவனை நோக்கி மின்னல் வேகத்தில் மிதித்து பறந்தான். அவனது வேட்டியோ ஒரு புறம் அவிழ்ந்து காற்றில் பறந்தது. வேகமாக மிதித்தவன் இப்போது சிறிது தடுமாற, பாரம் அதிகமாகியது போல் இருந்தது.  "என்னடா இது "என்று பயத்தில் திரும்பி பார்த்தவன் " என்னடா மிதிக்கமுடியலயா, நா வேணும்னா மிதிக்கவா" என்ற மாதவனைப் பார்த்தவன் திகிலடைந்து சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்தவன்  அங்கிருந்த ஒரு புதருக்குள் விட்டு கீழே விழுந்தான். அப்போது மறுபடியும் கரண்ட் கட் ஆனது.

         விழுந்தவன் பயத்தில் " ஓஓஓஓ " என்று அலறிக்கொண்டே "மாதவா மாதவா என்ன காப்பாத்துடா . எங்கடா இருக்க " என்று உடுக்கை சத்தம் வந்த திசையை நோக்கி வெறிகொண்டு ஓடினான். அப்போது மீண்டும் ஒன்றில் தடுக்கி விழுந்தான்.

         அது அவனுக்கு ஏதோ போல் தோன்றியது. ஆனாலும் அதைப்பார்க்காமல் மறுபடியும் எழுந்து உடுக்கையின் சத்தத்தை கேட்டு ஓடியவன், அந்த சத்தம் கேட்கும் இடத்தை அடைந்ததும் அவன் பார்த்தது மேலும் அதிர்ச்சி அடைய வைத்தது அவனை. ஆம்  உடுக்கை அடித்துக்கொண்டே இருந்தது. அதோடு வெறும் கை மட்டுமே இருந்தது. 'அது மாதவனின் கைதான்' என்று பார்த்ததும் மூச்சிறைத்தது ராஜாவுக்கு பயத்தில்.

    அப்படியென்றால் " மாதவன் எங்கே" என்று திரும்பியவன் கண்ட காட்சியும்  அவனை மூர்ச்சையடைந்து விழச்செய்தது. ஆம் அந்த கர்ப்பிணிப் பெண் மாதவனின் ரத்தம் வடிந்த உடலின் மேல் கம்பீரமாக அமர்ந்திருந்தாள் ராஜாவைப்பார்த்துக்கொண்டே...

தொடரும்....
     

Comments

Popular posts from this blog

தெரு நாய்

கனகவள்ளி - 3

மனையாள்