மனையாள்
தொடர்ந்து பெய்த மழையால் வீரனூர் தன் பொலிவை மீட்டுக்கொண்டிருந்தது. வற்றிப் போயிருந்த மயிலை ஆறும் பொன்னி நதியைப்போல் மின்னிக்கொண்டிருந்தது.
மலையின் அடிவாரத்தில் தென்னந்தோப்புடனும் , சுற்றி வயல்களுடனும் , மாடுகள், ஆடுகள் கோழிகள் என பூமயிலும் ராஜசேகரனும் ஒரு அழகான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்களுடன் தோப்பில் சில வேலையாட்களும் தங்கியிருந்து விவசாய வேலைபார்த்து கொண்டிருந்தனர்.
வேலையாட்களுக்கும் வீரனூர் மக்களுக்கும் பூமயில் மீதும் ராஜசேகரன் மீதும் அளவிட முடியாத அன்பு, மரியாதை. பூமயிலும் கணவனுக்கு நிகராக குணத்திலும் திறமையிலும் சமமானவள். உழுவது முதல் ஏர் பிடிப்பது வரை ஆணுக்கு நிகர் அவள். தைரியத்திலும் சரி ஆனால் பார்ப்பதற்கு அமைதியான முகபாவம் உடையவள்.
ஊரில் நடுவே பெரிய வீட்டில் இருந்தவர்கள் அமைதியை நாடி ஊருக்கு ஒதுக்குப்புறம் மலையடிவாரத்தில் வீட்டைக்கட்டி தங்கிவிட்டனர். ஊரின்தலைவராக ராஜசேகரன் இருந்தபோது சமுதாய கூட்டங்களில் தனது நேர்மையான தீர்ப்பினால் சொந்தங்களுக்குள் எதிர்ப்பையும் சம்பாரித்திருந்தாலும் அவரின் மீது மரியாதை அளவுக்கதிமாக இருந்தது.
அவர்களது இரு மகள்கள் கீர்த்தனா, நிவேதாவும் ஒருவிதத்தில் காரணம் மதிப்புக்கு. ஆம் இருவரும் நன்றாக படித்து கீர்த்தனா வக்கீலாக மதுரையிலும், நிவேதா மருத்துவராக சென்னையிலும் பணியாற்றிகொண்டிருக்கின்றனர்.
பெண்கள் படிப்பது தேவையற்றது என்ற நினைக்கும் ஊரில் இருவரும் படித்து மேல்நிலைக்கு சென்றதால் இப்போது வீரனூரில் அதிகளவு பெண்குழந்தைகளை படிக்க வைத்துக்கொண்டிருந்தனர்.
நிவேதாவும் விடுமுறை நாட்களில் தனது ஊரில் மருத்துவ முகாம் ஏற்படுத்தி சிகிச்சை அளிப்பாள். கீர்த்தனாவும் தன்னால் ஆன உதவிகளை சட்டத்தின் மூலமாக நிறைவேற்றி தந்தாள். இதனாலயே ராஜசேகரனுக்கும் பூமயிலுக்கும் இன்னும் மதிப்பு கூடியது.
பெண்பிள்ளைகளை ஆண்பிள்ளைகளைப் போலே வளர்த்தது பூமயிலே. "எதற்கும் தயங்காதீங்க பிள்ளைகளா, பயப்படாதீக. தைரியமா எதிர்த்து நில்லுங்க" என்று அடிக்கடி கூறுவாள் அவர்களிடத்தில்.
ஆனால் அவ்வப்போது பூமயில் நிவேதாவைப்பார்த்து "நீ என்னதான் டாக்டரா இருந்தாலும் உன் மருந்து மாத்திரை எனக்கு தேவையில்லைடி, ஒரு நோய் நொடி அண்டாது எங்கள" என்று சீண்டுவாள்.
மகள்களும் பெற்றோரை அறுபது பிராயத்தை தாண்டிவிட்டதால் தந்தையை தலைவர் பதவியிலிருந்து விடுவிக்க செய்து அமைதியாக இயற்கையோட ஒன்றிவாழ இந்த இடத்தை தேர்வு செய்திருந்தார்கள் நால்வரும். சாதிப்பிரச்சனைகளும், சச்சரவுகளும் இருந்தாலும் இப்போது அமைதியாகவே இருந்தது வீரனூர்.
ஊரில் பெரிய குடும்பம் என்பதால், மக்களும் இவர்களிடமே பிரச்சனைகளை சொல்லி இங்கயே சுமூகமாக தீர்த்துக்கொள்வதும் கொண்டு. அதில் பூமயிலும் முக்கிய பங்கு வகிப்பாள். பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் அவளும் ஒரு மிகச்சிறந்த நீதிபதி.
இதனால் கீர்த்தனாவும் அவ்வப்போது "கோர்ட், நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம் பெறவு" என்று வம்பு இழுப்பாள் வேடிக்கையாக.
ஒதுக்குப்புறமாக வந்தாலும் வீரனுர் மக்களும் விடுவதில்லை இவர்களை. உதவியோ சச்சரவோ முதலில் வருவது இங்கயே.
பூமயிலுக்கும் தோழிகள் பல. அதுவும் அவள் வயது தோழிகள். அத்தனை வயதிலும் ஒரு இளைஞியாகவே காணப்பட்டாள் செயல்களில்.
அன்று வயலில் களைகளை களையும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. தொழிலாளர்களாக அல்லாமல் தோழிகளாக மும்முரமாக களையெடுத்துக்கொண்டிருந்தனர் கணுக்கால் வரை நிரம்பியிருந்த சகதியான நீரில் அந்த தோழிகள்.
மழையால் வயலில் தேங்கிய நீரை வாய்க்கால் மூலம் வடியவிட்டுவிட்டு பூமயிலும் அவர்களுடன் சேர்ந்துகொண்டாள்.
மல்லிகா ,கல்யாணி , ராணி அழகம்மாள் மற்றும் பூமயில் என ஐவர் படை அது. ஐவரும் வயதில் அறுபதை தொட்டவர்கள். ஒன்று சேர்ந்துவிட்டால் சிரிப்புக்கும் வேலையில் போட்டிக்கும் குறைவு இருப்பதில்லை.
அவர்கள் களை எடுப்பதில் மும்முரமாக இருக்க பூமயில் வந்ததைப் பார்த்த கல்யாணி " ஐ பூமயில் வந்தாச்சு" என்று கூக்குரலிட, மற்றவர்களும் பூமயிலைப் பார்த்து "வா மா பூமயிலு" என்று நக்கலாக அழைத்து அவர்களுக்குள்ளே சிரித்துக்கொண்டனர்.
பூமயிலும் தன்பங்குக்கு " லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்டி நாங்க" என்று சொல்லி தன் முந்தானையில் கொண்டுவந்திருந்த பலகாரங்களை காண்பித்தாள்.
"அடியே வாங்கடி ஓவரா உழைச்சு ஒட்டடக்குச்சி ஆய்டாம இத திண்ணுட்டு வேலை பார்ப்போம். எம்புருசன் தான் வாங்கிட்டு வந்தாப்புள டவுனுக்கு போயி" என்று கூறி ஆளுக்கு இரண்டு எடுத்துக்கொள்ள சொன்னாள்.
இவ்வாறு அன்றைய நாள் முழுவதும் உழைத்து விட்டு இளைப்பாற தயாராக, கதிரவனும் உழைத்துவிட்டு இளைப்பாற மலைகளின் பின்புறம் மெதுவாக மறைந்து கொண்டிருந்தான்.
களைகளை எடுத்து முடித்த திருப்தியில் ராணியோ " என் பங்க முடிச்சிட்டேன். சரி வாங்கடி போலாம். ஆத்துல குளிச்சிட்டு சீக்கிரமா வீட்டுக்கு போய் சேர்வோம்" என்றாள்.
அழகம்மாளோ "ஆமங்கடி, ஆத்துல தண்ணி நல்லா வருதாம் , இந்த சகதிக்கு அந்த குளியல் தான் செய்யனும் "என்று கூற அனைவரும் களை எடுத்து முடித்துவிட்டு மயிலை ஆற்றை நோக்கி சென்றனர்.
ஆற்றை நெருங்கியதும் கண்களை விரித்த பூமயில் " இம்புட்டு தண்ணி பார்த்து எவ்ளோ நாளாச்சு" என்று சொல்லிக்கொண்டே ஓடிச்சென்று ஆற்றுக்குள் குதித்தாள். பக்கத்தில் ஆட்டம்போட்டுகொண்டிருந்த சிறுவர்களும் "ஓய் " என்று மகிழ்ச்சியில் சத்தம் போட்டனர்.
சிறிது நேரத்தில் எதிர்பாரா தருணத்தில் திடீரென்று வந்த காட்டாற்று வெள்ளம் குளித்துக்கொண்டிருந்த அனைவரையும் ஒரு புரட்டு புரட்ட அதில் ஓரு சிறுவன் மாட்டிக்கொண்டு நீரின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்டான். மற்றவர்கள் சுதாரித்து திரும்புவதற்குள் அச்சிறுவனை ஒரு சுழற்று சுழற்றி அடித்துச்சென்றது மயிலை.
"அடியாத்தி, அந்த பையன காப்பாத்தபோறது நம்ம சாவை நாமே கூப்டுற மாதிரி " என்று ராணி கூற, பூமயிலோ " போடி " என்று கூறிவிட்டு உயிரை துட்சமாக நினைத்து ஆற்றில் நீந்திச் சென்று அவனை பின்தொடர்ந்து பிடித்துவிட்டாலும், அந்த வெள்ளத்தில் இழுத்தவரப்பட்ட உடைந்த கூர்மையான மரத்துண்டு பூமயிலுக்கு வயிற்றில் பலத்தை காயத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஆனாலும் அச்சிறுவனை தன் பிடியிலிருந்து விட்டுவிடவில்லை அவள். தட்டுத்தடுமாறி கரையின் ஓரத்தை அடைந்தவள் அவனை இழுத்து கரையில் போட்டாள். அவனுக்கும் தலையில் காயங்கள் இருந்தது. அவளுக்கும் காயத்திலிருந்து இரத்தப்போக்கு அதிகமாக மயங்கி விழுந்தாள் கரையில். அந்த இடத்தில் கரையின் மேல் நின்றுகொண்டிருந்தவர்கள் பூமயிலைப்பார்த்ததும் "அம்மா" என்று ஓடிவந்து , பூமயிலுக்கும் அவனுக்கும் முதலுதவிகள் செய்து அருகிலிருந்த ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு சென்றனர். அப்போது தோழிகளும் அழுதுகொண்டே பின் செல்ல, அச்சிறுவனின் உயிர் பிரிந்தது அந்நேரத்தில். ஆனால் தூக்கிக்கொண்டு சென்றவர்களோ இதை உணர்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர்களின் வேகம் அப்படி.
இதைப்பார்த்த சிலர் "வேத்து சாதிப்பையனை காப்பாத்த போயி, இப்டி ஆய்டுச்சு. இவளுக்கு இது வேண்டும் " என்று அந்த சூழ்நிலையிலும் சாதிவெறியை காண்பித்தனர்.
இதே போன்ற ஒரு சாதி வெறி நிகழ்வால்தான் , வெறுத்துப்போன ராஜசேகரனும் பூமயிலும் மனம் நொந்து ஊருக்கு ஒதுக்குப்புறம் குடியேறினர். அப்படி ஒரு சம்பவம் அது.
அன்று பூமயில், ஊரில் இருந்து பொங்கலுக்காக வந்திருந்த தனது இரு மகள்களுடன் நகரத்திற்கு சென்று மளிகை கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தபோது, அவளின் தோளை தட்டியது ஒரு கை " அம்மா" என்று அழைத்தவாறு.
அதைக்கேட்டு திரும்பியவள்! ஒரு கனம் இளம் ஜோடியைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தாலும், மறுகணம் சிரிப்போடு
" அடியே ரேகா, எப்படி இருக்க?, மாசமா இருக்கியா? நீ விட்டு போனதுல இருந்து உங்கம்மா ராணி பைத்தியம் பிடிச்சது போல் ஆய்டுச்சு. என்ட்ட சொல்லி சொல்லி அழும், நீ அவள விட்டுபோய்ட்டனு. உன்ன இப்டி பார்த்தா ரொம்ப சந்தோசப்படுவா" என்று சொல்லி முடிப்பதற்கும், ரேகாவின் கழுத்தில் அறுவாள் இறங்கியதற்கும் சரியாக இருந்தது. ரேகாவின் இரத்தம் பூமயிலின் முகத்தை நனைத்தது. அவளது இரு மகள்களும் சுதாரிப்பதற்குள் ரேகாவின் காதல் கணவன் வினோத்தும் தலை பிளந்து சரிந்து விழுந்தான் அந்த பட்டப்பகலில் மக்கள் நடமாட்டமிகுந்த சந்தையின் தெருவில்.
ஆம் ரேகாவின் வாழ்விற்கு அவளின் மேல்சாதி அடையாளமே முற்றுப்புள்ளி வைத்தது, மாற்று சாதி வினோத்தை திருமணம் செய்ததால்.
வெட்டியவர்கள் ஓட முற்பட , சுதாரித்த பூமயிலும் மகள்களும் தைரியமாக அவர்களை பிடிக்க முற்பட ஆனாலும் தப்பித்துவிட்டனர். இருந்தாலும் பூமயிலுக்கு அடையாளம் தெரிந்தது அதில் ஒருவன் தனது சொந்தக்காரன் வெள்ளையப்பன் என்று.
தோழி ராணியின் மகள் துடிதுடித்து இறந்ததைப்பார்த்தவள், "ஆணவக் கொலை நடக்கும் அளவுக்கா நம்ம ஊருக்கு வெறிபிடித்துவிட்டது " என்று நினைத்தவள், நேராக காவல்நிலையம் சென்று நடந்ததை கூறி, "தன் உறவினர் வெள்ளையப்பனும் காரணம்" என்று சாட்சி கூறிவிட்டு மகள் கீர்த்தனா மூலமே வழக்கை நடத்தினால். இதனாலயே எதிர்ப்பு அதிகமாகியது தன் சாதியை சேர்ந்தவர்களிடமிருந்து.
சில ஆண்டுகள் விசாரணை நடந்துகொண்டிருந்த வேளையில், சொந்தக்காரர்கள் ராஜசேகரனிடம் "பூமயிலை பிறழ்சாட்சி சொல்லச் சொல்லி நம்ம சாதிக்காரன காப்பாத்துப்பா " என்று பலமுறை கேட்டும், பூமயில் மாறவே இல்லை. அவளும் " எனக்கு என் சொந்தக்காரன விட என் ஊரும் நியாயமும் முக்கியம்" என்று முகத்தில் அடித்தது போல் சொல்லிவிட்டாள் இறுதியாக.
குற்றவாளிகளுக்கும் ஆயுள்தண்டனை கிடைக்க வைத்தாள் தன் மகள் மூலம். இந்த கொலை சம்பவத்தால்தான் மலையடிவாரத்துக்கு குடிபெயர்ந்திருந்தனர் அவர்கள்.
பூமயிலையும் அச்சிறுவனையும் மருத்துவமனைக்கு கொண்டுவருவதற்கும், தகவலறிந்த அவள் கணவன் பதறியடித்து மருத்துவமனைக்கு வந்துசேர்வதற்கும் சரியாக இருந்தது.
" பூமயிலு பூமயிலு இங்க பாரு" என்று கத்தியதற்கு பலன் கிடைத்தது. மெதுவாக கண்திறந்த பூமயில் ராஜசேகரனை பார்த்தாள் சில நொடிகள். பிறகு நிரந்தரமாக பார்த்துக்கொண்டே இருந்தாள். ஆம் விழிகளை மூடவில்லை. அவளால் மூடவும் முடியாது ஏனெனில் உயிர் பிரிந்திருந்தது.
தன் இரண்டு மகள்களுக்கும் தகவல் சொன்னான் இராஜசேகரன்.
" அம்மாவ பார்க்க வாங்கம்மா " என்று.
நிவேதாவோ " கடைசிவரை என்கிட்ட மருந்து மாத்திரை வாங்காமலயே சாதிச்சிட்டல்லம்மா" என்று கண்கள் கலங்கிய படி பயணித்துக்கொண்டிருந்தாள் அம்மாவைப் பார்க்க.
வீரனூர் மக்களும் அந்த சமயம் சாதியை மறந்து ஒன்றுகூடி இருந்தனர் பூமயிலின் மலையடிவார வீட்டில், அப்போது பூமயிலின் நினைவுகளையும் அவள் மகள்களையும் பெருமையாக நினைத்தவர்கள், "இப்படிதான்யா ஒரு குடும்பம் இருக்கனும் " என்ற மெச்சினர் வீரனூர் மக்கள்.
_*_
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு
சி இலக்குவனார் உரை: இல்லறத்தின் பெருமையே ஒருவனுக்கு நன்மை தருவது. அவ்வில்லறத்தின் அணிகலன் போன்றது நல்ல மக்களைப் பெறுதல்.
மனையாள் கதையைப் படித்தேன். மனைமாட்சியையும் நன்மக்கள் பேறையும்
ReplyDeleteவிளக்கும் கதை. சாதிப் பூசல் ஆணவக்கொலை ஆகியவற்றை கொண்டுதனா விளக்கவேண்டும். ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவப் பெருந்தகையின் குறளை விளக்க சாதிப் பூசலை கதையில் தவிர்த்திருக்க வேண்டும் என்ற கருத்து கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
நிச்சயமாக ஐயா. அடுத்த முறை கவனத்தில் கொள்கிறேன்
ReplyDeleteபூமயில் நல்ல பெயர். நல்லவர்களை இருக்கும் பொழுது போற்றாமல், மறைந்த பிறகு போற்றும் உலகம் இது. நிவேதா கடைசியில் கூறுவது கண்கலங்க வைக்கிறது... அருமை தோழர் 👌🏾👌🏾
ReplyDelete