கனகவள்ளி - 2
கர்ப்பிணிப் பெண்ணைப் பார்த்து சிலையாக நின்ற ராஜாவை, பின்புறமாக ஒரு கை அவனது தோள்பட்டையை தொட்டதும் சுயநினைவு வந்தவனாக திரும்பிப் பார்த்தவன் " டேய் ராஜா ராஜா. என்னடா ?" என்று கேட்ட மாதவனைப் பார்த்ததும் மயங்கிச் சரிந்தான் கீழே.
பதறிய மாதவனோ சிறிது தண்ணீர் தெளித்து அவனை எழுப்ப, எழுந்தவன்
"நீ ?.... , நீ ? ...செத்துட்டியே? எப்பிடி மறுபடியும் ...? பேய் .. பேய்...." என்று பயத்தில் உளர..
"டேய் ராஜா! இந்தாடா! டேய்"என்று அழைத்துவிட்டு ஓங்கி ஒன்று கன்னத்தில் விட்டான் மாதவன் ராஜாவுக்கு..
" அந்தப்பேயி..பேயி....உன் உடம்பு மேல உக்காந்திருந்துச்சுடா...." என்று ராஜா மறுபடியும் கூற,
மாதவனோ, " டேய் நீ கத்தவும் தான்டா நான் இங்க வந்தேன். அவ்ளோ நேரம் தெருக்கடைசில இருந்தேன். நீ கத்துன சத்தம் கேட்டுதான் நான் இங்க வந்தேன். இல்லனா இன்னும் மூனு வீட்டுக்கு சொல்லிட்டு வந்திருப்பேன்" என்றான் ராஜாவிடம்.
ராஜாவோ , " டேய் மாதவா. என்ன நம்புடா. வேணும்னா வா, நா கூட்டிட்டு போரேன் அந்தப் பேய் வீட்டுக்கு. அந்த... அந்த...ஆஆ.. பழையகால செட்டியார் வீட்டுக்கு" என்றவனை இடைமறித்த மாதவன், " டேய்!, நீ சொல்ற மாதிரியே வச்சிகிட்டாலும்.. நான் எப்படிடா உயிரோட இருக்கேன் இப்போ. நான்தான் செத்துட்டேன்னு நீ சொன்ன இல்ல " என்று சொல்ல ராஜாவோ, " இல்லடா..சத்தியமா நான் பார்த்தேன் டா" என்று பயத்தில் கண் கலங்கினான்.
இதைப்பார்த்த மாதவன்," சரி வா போகலாம் வீட்டுக்கு. நீ பயந்து இருக்க. இப்போ என்ன சொன்னாலும் உனக்கு புரியாது " என்றவன் மேலும் " எங்கடா உன் சைக்கிள்?" என்று ராஜாவிடம் கேட்டான்.
ராஜாவோ, "அதுவா! பேய பார்த்த பயத்துல வேகமா வரும்போது புதருக்குள்ள விட்டுட்டேன். அங்க கிடக்கும்டா " என்றான்.
மேலும் தொடர்ந்தவன், " மாதவா!, நம்புடா. ஏதோ நடக்குது. மர்மமா இருக்கு. நான் இங்க ஓடி வந்ததே உன் உடுக்கை சத்தம் கேட்டுதான் என்று மறுபடியும் தொடர..."
மாதவனோ, " டேய் கொஞ்ச நேரம் வாய மூடு. வா இந்த இடத்தை விட்டு காலி செய்வோம் முதல்ல"என்றான்.
ராஜாவோ," நடந்த சம்பவங்களுக்கு சாட்சியா ஏதும் காணமே. இவனுக்கு எப்படி புரிய வைக்குறது. இல்லனா ஒரு வேள மாதவன் சொல்றது உண்மையா?" என்று குழம்பினான்.
பிறகு மாதவனும் ராஜாவும் அந்த இடத்தை விட்டு கிளம்பி சிறிது தூரம் நடந்து செல்ல, அப்போது ஒரு சிரிப்பொலி கேட்டது அவர்களுக்கு.
அதைக்கேட்ட ராஜா , " பார்த்தியா நான் சொன்னேன்ல" என்றான் மாதவனிடம்.
ஆனால் மாதவனோ, " டேய் சும்மா வாடா. ஏதாவது பைத்தியம் சிரிச்சிருக்கும்" என்றான் நடந்தவாறே.
சிறிது நேரம் பேசாமல் இருவரும் சைக்கிள் கிடந்த இடத்திற்கு வந்துசேர, மாதவனோ தன் சைக்கிளை ராஜாவிடம் கொடுத்துவிட்டு கீழே விழுந்து கிடந்த சைக்கிளை எடுத்து மிதிக்கத் தயாரானன்.
ராஜாவோ அந்த சம்பவத்தின் நினைவுகளிலிருந்து மீளமுடியாமல் பிரம்மை புடித்தது போலவே சைக்கிளை மிதித்துக்கொண்டிருந்தான்.
அந்த சூன்யமான இரவில் சைக்கிளை அமைதியாக மிதித்துக் கொண்டுவந்த இருவரும் மயிலம்பாறையின் எல்லையை அடைந்தபோது, ராஜா மட்டும் திரும்பிப் பார்த்தான் சைக்கிளை மிதித்துக்கொண்டே .
அங்கே ஒரு பலகை 'தங்கள் வருகைக்கு நன்றி' என்று ஒளியில் மின்னிக்கொண்டிருக்க, அதனருகில் கர்ப்பிணிப் பெண் நின்றுகொண்டு சிரித்துக் கொண்டிருந்தாள் ராஜாவைப் பார்த்து.
அவளைப்பார்த்துக் குழம்பிய ராஜாவும் இப்போது மாதவன் சொன்னதை நம்பும் அளவிற்குத் தள்ளப்பட்டான். ஏனெனில் மாதவன் உயிரோடிருப்பதே அவனுக்கு தைரியத்தை அளித்திருந்தது.
" அது பிரம்மையாகத்தான் இருக்க வேண்டும் " என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான்.
நிலவும் தன் இரவுப்பணியை முடித்து விட்டுக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் இருவரும் ராஜாவின் வீட்டை அடைந்திருந்தனர்.
மாதவனும் ராஜாவை அவன் வீட்டில் விட்டுவிட்டுச் சென்ற பிறகு, ராஜாவும் களைப்பில் சிறிது நேரத்திலயே ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருந்தான் அப்போது.
கனவிலும் அவளின் சிரிப்பு ராஜாவை பயமுறுத்தியது. அவன் உடல் நடுக்கத்திலேயே அது தெரிந்தது..
அப்போது அவன் காதில் " இன்னும் நெறய இருக்கே. பார்க்கத்தான போற. இனிமேதான் தரமான சிறப்பான சம்பவங்கள் இருக்கு. ஹா ஹா ஹா " என கேட்க! பயத்தில் விழித்தவன். 'என்ன பேயி பேட்ட டயலாக்லாம் பேசுது' என்று நினைத்தவன் திரும்பி பார்த்த போது பேட்ட படம் ஓடிக்கொண்டிருந்தது கேபில் டீவியில் அதிகாலையில். ஆம் டீவியை ஆன் செய்துவிட்டு அப்படியே உறங்கியிருந்தான் அப்போது.
ஆனால் அவளின் உருவத்தை மட்டும் மறக்கவே முடியவில்லை தூக்கத்தில் கூட அவனால். அப்போது கடிகாரத்தைப் பார்த்தவன் அது அதிகாலை 4 மணியை காட்டிக்கொண்டிருந்தது. பாயில் இருந்து எழுந்தவனுக்கு தாகம் எடுக்க நேராக தண்ணீர் குடிக்கச் சென்றான் சமையலறைக்கு.
அப்போது யாரோ அவனை பார்ப்பது போலவே ஒரு உணர்வு வந்ததால், திடீரென்று திரும்பியவன் ஒரு உருவம் அறையின் மூலையில், ஓரத்தில் அமர்ந்திருந்ததைப் பார்த்தான்.
பயத்தில் நடுங்கி மெதுவாக ஸ்விட்ச் போர்டு பக்கம் சென்றவன், மெதுவாக கையை உயர்த்தி லைட்டை ஆன் செய்ததில் வெளிச்சம் வர, அந்த உருவத்தைப்பார்த்ததும் திடுக்கிட்டு,
" டேய் மாதவா!, என்ன இப்படி பயமுறுத்திட்டியேடா." என்றான் கீழே குனிந்து சிரித்தபடி.
"டேய். போயி எடுத்துடு " என்றதில் குரலின் வித்தியாசம் தெரிந்ததும் மெதுவாக நிமிர்ந்த போது கர்பிணிப்பெண் உருவமாகக் காட்சியளித்து மறைந்து போனாள்.
"ஆஆஆ" என வாயைப்பொளந்தவன் இனியும் இங்க இருக்க கூடாதுடா சாமி' என்று, தன் சைக்கிளை எடுத்துப் படுவேகத்தில் மாதவன் வீட்டிற்குச் சென்றான் எங்கும் நிற்காமல்.
அப்போது "இவன் வேற இந்த டைம்ல எந்திரிக்க மாட்டானே. கதவ கூட திறக்க மாட்டானே" என்று நினைத்துக்கொண்டே வருத்தமாக வீட்டருகில் சென்றவனுக்கு அதிர்ச்சி அவன் வீடு திறந்திருந்ததைக் கண்டு.
அதைக் கண்டவன் மனதிற்குள் "என்ன கதவ திறந்து கிடக்கு. இந்த டைம்ல சான்ஸே இல்லையே. பராவயில்லை! நமக்காகத்தான் திறந்தே வச்சிருப்பான் போல. போதும்டா சாமி" என்று நினைத்துக்கொண்டே " மாதவா மாதவா" என்று அழைத்துக்கொண்டே உள் அறைக்குள் சென்றவன், பாயில் அவனை காணததைப் பார்த்துத் தன் பார்வையை சுழலவிட்டான். அப்போது ஜன்னல் வழியாக பறவைகள் அலறி கத்தும் சத்தம் அதிகமாக கேட்டதை உணர்ந்தவன், ஜன்னலைத் திறந்து பார்த்த போது, ஒரு உருவம் மாதவனை தர தரவென்று இழுத்துச் சென்றுகொண்டிருந்தது.
அதைப் பார்த்துத் திகைத்தவன், மறுநொடியில் "மாதவா.. மாதவா..டேய் யார்ரா அது" என்று கத்தியதும் அந்த உருவம் அங்கயே நின்றது இவனது சத்தத்தால்.
என்ன யோசித்ததோ அந்த உருவம் மாதவனின் காலை விட்டுவிட்டு் தலையின் பக்கத்தில் வந்து நின்று, ராஜாவைப் பார்த்தவாறே, தன் காலைத் தூக்கி தலையிலே ஓங்கி மிதித்ததில் தலை நசுங்கி மாதவன் உடல் துடித்தது. அதே நேரம் ராஜாவைக் கோவமாகப் பார்த்து "போ. அத எடு" என்று சொன்னதும் ராஜாவிற்கு பயத்தில் சப்தநாடியும் ஒடுங்கியது இது அவளே என்று.
"இனி ஒன்னுமே செய்ய முடியாது" என்று மனதைத் தேற்றிக்கொண்டவன், அந்த செட்டியார் வீட்டுக்குச் செல்ல முடிவெடுத்து தன் வீட்டிற்கு விரைந்தான்.
மெதுவாக தன் வீட்டுக் கதவை திறந்தவனுக்கு உள்ளே அவளின் உருவம் இருப்பது போலவே ஒரு உணர்வு. சமயலறைக்குள் "தடபுட தடபுட" என்று சத்தத்தைக் கேட்டவன், திரும்பிப்பார்க்க விரும்பவில்லை அதை. கண்ணாடிக்கு அருகில் சென்றவன், கண்ணாடியைப் பார்க்காமல் குனிந்தே திரும்பினான் பயத்தில். 'குளிக்கனுமா ' என்று யோசித்தவன், "பேய் நம்மள எப்படியும் போடப்போகுது அதனால குளிச்சிட்டு புது சட்டைய போட்டுகிட்டுப் போவோம். நம்ம பாடிய போட்டோ எடுக்கும் போது பளிச்சினு தெரியணும்ல" என்று நினைத்தவாறு குடத்தையும் வாளியையும் தூக்கிக் கொண்டு வீட்டின் பின்புறம் சென்றான் குளிப்பதற்கு.
கதிரவனும் அவனுக்கு உதவுவது போல அன்று விரைவாகவே உதித்திருந்தான். குளித்து முடித்து பக்திப் பயத்தோட சைக்கிளில் கிளம்பினான் கிழிந்த ஜோல்னா பையோடு. வருகிற வழியில் அவன் பார்த்த அனைவரும் கர்பிணி பெண்ணாகவே தெரிந்தது அவன் கண்களுக்கு. மயிலம்பாறையப் அடைந்தபோது பயத்தில் வியர்த்திருந்தது ராஜாவுக்கு.
பிறகு நேராக காட்டுப்பாறைக்குள் நழைந்தபோது, அந்த தெருவின் முதல் வீட்டிலுள்ளவன் ராஜா வருவதைப்பார்த்து தடுத்து நிறுத்தியவன் " ஏன்டா உங்களுக்கு இதே வேலையாப் போச்சு. குடுகுடுப்பை அடிச்சி பசங்கள பயமுறுத்தி, ஏன்டா நடுராத்திரில தொந்தரவு பண்றீங்க. இன்னொரு தடவ இந்த ஏரியால உன்னைப் பார்த்தேன் அவ்வளவுதான் "என்று திட்டி அனுப்பினான். ஆனால் அதெல்லாம் அவன் காதில் விழவில்லை.
பிறகு நேராக எங்கும் நிற்காமல், செட்டியார் வீட்டை அடைந்ததும், மேலே நிமிர்ந்து பார்த்தான் நேற்று அந்த உருவம் இருந்த இடத்தில். இப்போதும் அந்த உருவம் அவனைப் பார்த்துக்கொண்டே இருப்பது போலத்தெரிந்தது அவனுக்கு.
அப்போது அந்த வீட்டின் முன் கோலம் போட்டுக்கொண்டிருந்த அந்த வீட்டுப் பெண் செல்வி அவனைப்பார்த்ததும் " வாங்க. நீங்கதான நைட்டு குறி சொல்லிட்டு போனது" என்று மேலே பார்த்துகொண்டிருந்த ராஜாவைப் பார்த்துக் கேட்டாள்.
திடுக்கிட்டவன் சுதாரித்து," ஆமாம் மா. நா தான் வந்தேன்" என்றான் எச்சிலை முழுங்கியவாறு.
" இல்ல நைட்டு ஏதோ பயங்கர கண்டம்னு ஏதோ சொன்னீங்களே. அத கேட்டுட்டு நான் கதவ தொறந்து வெளில வந்த போது நீங்க ஏன் ஓடுனீங்க? " என்று ராஜாவிடம் கேட்டுக்கொண்டிருந்த போது செல்வியின் கணவன் செல்வா வெளியில் வர , " யாரு" என்று கேட்டுவிட்டுப் பிறகு அவனாகவே "ஓஓ குடுகுடுப்பகாரரா?. என்னயா உன் ஜக்கம்மா என்ன சொல்றா. கண்டம் கிண்டம்னு ஏதோ சொன்ன" என்று சொல்லி நக்கலாகச் சிரித்தான்.
அப்போது ராஜாவோ," அடியே சிரிடி. உன் தலைக்கு மேலயே கண்டம் உக்காந்திருக்கு" என்று முனுமுனுத்த போது, அதைக்கேட்டுவிட்ட செல்வா வோ "என்னது தலைக்கு மேல கண்டமா" என்று மறுபடியும் நக்கலாகச் சிரித்தான்.
அப்போது குறுக்கிட்ட செல்வி," ஏங்க. சும்மா இருங்க. எப்ப பார்த்தாலும் நக்கல் தான் உங்களுக்கு" என்று சொல்லி முடித்த போது, அவர்கள் மூன்று பேருக்கும் நடுவில் தென்னை மரத்திலிருந்து தேங்காய் ஒன்று டம்மென்று விழுந்தது.
இதைப்பார்த்த ராஜா," இப்போ புரிஞ்சதா. மேல கண்டம் இருக்குன்னு" என்று சிறிது தைரியத்தை வரவைத்துக்கொண்டு சொன்னான்.
அதே சமயம் அவர்களின் UKG படித்துக்கொண்டிருக்கும் சிறு மகளும் அழுதுகொண்டே வெளியில் வர, செல்வாவோ " வாடாச் செல்லம் என்ன வேணும். ஏன் அழுகுறீங்க" என்று அவளை வாரி அணைத்தபடி வீட்டின் ஓரம் செல்கையில் "அந்த எழுமிச்சம்பழமும், மாந்திரீக பொம்மையும் கண்ணில் பட 'கோபமானவன்' "செல்வி! செல்வி! யார்டி இந்த கருமத்தை எல்லாம் இங்க வச்சது. குழந்தை பார்த்தா பயப்படாது" என்று திட்டிவிட்டு "அதை எடுத்துக்கொண்டு வந்து ராஜாவிடம் கொடுத்து," இந்தாங்க, இதை எல்லாம் இனிமே இங்க கொண்டுவராதீங்க, இவ சொல்றானு" என்று குடுகுடுப்பைகாரரிடம் கராராக கூறியவன் " அவருக்கு காசு ஏதாவது கொடுத்து அனுப்பு " என்று செல்வியிடம் சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்றான்.
மாந்திரீகப்பொருள் கிடைத்ததை சிறிதும் எதிர்பார்க்காத ராஜா மகிழ்ச்சி அடைந்தாலும் ஆனாலும் மனதுக்குள் வருத்தம் வர " அம்மா இத மறுபடியும் அதே இடத்துல வச்சிடுங்க. ஏன் சொல்றன்னா உங்க வீட்ல இது நாள் வரை கெட்டது நடக்காம இருந்ததுக்கு இதான் காரணம்" என்று எடுத்துச் சொல்லியும் கேட்காத செல்வி, "வேண்டாம்ங்க இனி அவர் பார்த்தா திட்டுவாரு. இத நான் தான் இன்னொரு சாமியார் வைக்க சொன்னதால வச்சேன். இதுலாம் இனி வேணாம்ங்க. நீங்களே போற வழில எறிஞ்சிடுங்க" என்று கூறிவிட்டுத் தன் கையில் இருந்த பத்து ரூபாயை கொடுக்க வந்தாள் குடுகுடுப்பைகாரன் ராஜாவிடம்.
ராஜாவோ "வேணாம் மா" என்று சொல்லிவிட்டு நகர்ந்த போது, மறுபடியும் மேலே பார்த்தவன் இம்முறை அவளைக் கண்டான் அந்த இடத்தில். ஆனால் அருவமாக.
அந்த அருவமோ, அவன் கண் முன்னே ஒரு வித விநோத உருவத்துடன் செல்வியின் பின்னாள் நடந்து சென்றது. வீட்டுக்குள் செல்லும் போது, மறுபடியும் ஒரு முறை அவனைத் திரும்பிப் பார்த்து சிரித்த பிறகு, கதவு தானாக பலமான சத்தத்துடன் மூடிக்கொண்டது.
தன் மகளை எடுத்துக்கொண்டு படுக்கை அறைக்குச் சென்ற செல்வாவுக்கு அழைப்பு வந்தது மொபைலில்.
மொபைலை எடுத்துப் பார்த்தவன் "என்ன சாமியார் காலங்காத்தால, அவர் பங்க தான் குடுத்துட்டமே" என்று நினைத்துக்கொண்டு அட்டெண்ட் செய்தவன் "சொல்லுங்க சாமி. என்ன காலைலயே.." என்று இழுத்தான்.
சாமியாரோ ," இனி பார்த்து இரு. கடவுள வேண்டிக்கோ" என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தார்.
"என்ன சாமியார் காலைலயே ஏதேதோ உளர்ரார். நேத்து குடுத்த அமௌண்ட்ல ஓவரா கஞ்சா கிஞ்சா அடிச்சிட்டாரோ " என்று நக்கலாக மனதில் நினைத்துக்கொண்டான்.
அதே சமயம் மகள் அமைதியாக இருப்பதை கண்டவன், "என்ன பேபிமா செல்லம் அமைதியாக இருக்காக" என்று திரும்பி இருந்த மகளை திருப்பியவன் அவளின் உருவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான். "பேபிமா என்ன இது வயிறு புடைச்சிருக்கு இவ்ளோ பெரிசா " என்று முகத்தைப் பார்த்தவன், அதில் தவழ்ந்த புன்னகையால் ஏதோ நினைவுக்கு வந்தவனாக "நீ...நீ.... நீயா" என்று அவளின் குழந்தையைப்பார்த்து இல்லை கர்பிணிப் பெண்ணைப்பார்த்துக் கேட்டான்.
அவளும் சிரித்துக்கொண்டே ,
" அப்பா நாம விளையாடலாமா. நான் ஓடுவனாம். நீ புடிப்பியாம் " என்று சொல்லிக்கொண்டே ஓடத்தொடங்கியவள் அவள் அம்மாவிடமும் ஓடிச்சென்று " அம்மா நீயும் என்னப்புடி " என்று மறுபடியும் ஓடியவள் இப்போது மாடிப்படிகளில் ஏற ஆரம்பித்தாள். செல்வியோ விவரம் ஏதும் தெரியாமல் மகளை விரட்ட, செல்வாவோ அழுதுகொண்டே பின் செல்ல , ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாதவன் " அம்மா எம்மகள விட்ரு என்னை என்ன வேணாலும் செஞ்சுக்கோ என்று குழந்தையைப்பார்த்துக் கத்த " , இதைக்கேட்டுத் திடுக்கிட்ட செல்வி அப்போதுதான் மகளை முழுமையாகப் பார்த்தாள், பார்த்தவள் " நீ..நீ.. எம்மகள விட்ரு ப்ளீஸ்..ப்ளீஸ்" என்று கதறியவள், செல்வாவை நோக்கி, "அன்னைக்கே சொன்னனே. நீ கேட்டியா?, இப்ப பாரு " என்று கதறி அழுதாள்.
ஆனால் கர்பிணி குழந்தையோ,
" அம்மா, அப்பா வாங்க விளையாடலாம். என்னப் புடிங்க பார்க்கலாம். நான் மாடில இருந்து குதிக்கப்போறேன். நீங்க ரெண்டு பேரும் என்ன புடிச்சிடணும் கீழ விழாம" என்று சொல்லிக்கொண்டே பின்னால் நகர்ந்தவள் முன் திரும்பி குதிக்க எத்தனிக்க, பேபி என்று இருவரும் ஓடிவந்து அவள் கையைப் பிடிப்பதற்குள் பேபிமா கீழே விழ , அவளைப்புடிக்க செல்வா தடுமாற, செல்வாவைப் புடிக்க செல்வி தடுமாற..மூவரும் ஒருவர் பின் ஒருவராக கீழே விழ, அப்போது குழந்தை கர்பிணிப் பெண்ணாக மாறி செல்வா செல்வியைப் பார்த்துச் சிரிக்க, இருவரும் தரையை அடைய சில நொடிகளுக்கு முன் மகளை மேலே பார்ப்பதற்கும் தரையில் விழுவதற்கும் சரியாக இருந்தது. செல்வி செல்வா இருவருக்கும் பலமான காயம்பட்டதால் இரத்தம் வடிய, மகளைப் பார்த்துக்கொண்டே கண்ணை மூடினர்...
குழந்தையோ மேலே நின்றுகொண்டு "அப்பா அஅஅ, அம்மா அஅஅ "என்று அழுதுகொண்டே இருக்க, அந்த கர்பிணிப்பெண்ணின் பார்வை இப்போது அந்தக் குழந்தை மீது இருந்தது.
தொடரும்.....
Comments
Post a Comment