தெரு நாய் - மறுபதிப்பு.
அன்று கனமழை சென்னையில். அதனால் சென்னையே மிதந்தது அந்த கொடூர மழையில். அந்த மழையிலும் தன் குட்டிகளை ஈன்றது ஒரு தெரு நாய். விடாத மழையிலும் வேறு வழி இல்லை ஈன்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் அழகான ஐந்துக் குட்டிகளை ஈன்றது அது. தான் ஈன்ற குட்டிகளை வலியையும் பொருட்படுத்தாமல், தன் நாக்கால் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தது, சிறிது நேரத்தில் ஒரு பேராபத்து வரப்போவதை உணராமல். குட்டிகளின் ஈனக்குரல்களும் அதற்கு ஒரு சுகத்தை கொடுத்திருக்க வேண்டும் அந்த கனமழையிலும் வலியைத் தாங்க.
தெரு நாயின் கடந்தகாலம்:
சென்னை பிரதான நகரில் அது பிறந்தது, தனது 4 சகோதர சகோதரிகளுடன் தன் தாயான ஒரு தெரு நாய்க்கு. பிரதான நகரில் வசித்ததால் உணவுக்கோ தங்குமிடத்துக்கோ பஞ்சமில்லை. அந்தக் குட்டிகளைப் பார்க்கும் போதெல்லாம் அந்தப் பகுதி மக்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி ஏனெனில் அவைகளுக்குள் விளையாடுக்கொள்ளும் விதம் அவர்களின் மனதைக் கவரந்திருந்தது.
அவர்களில் சிலர் அவைகளுக்கு பிஸ்கெட், பால், சாப்பாடு என்று சிறுவர்முதல் பெரியவர் வரை அனைவரும் அன்போடு கொடுப்பது வாடிக்கை. அவைகளின் தாயும் தன் பங்குக்கு கறிக்கடைகளில் இருந்து குப்பையில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளை தன் குட்டிகளுக்கு கொண்டு வந்து கொடுக்கும்.
இப்படியே சில நாட்கள் கடக்க அதில் ஒரு ஆண் குட்டியை அங்கு வசித்த குடும்பத்தின் ஒரு சிறுவன், தாய் நாய் வருவதற்கு முன் அதை கவர்ந்து சென்றான். அந்த சம்பவம் நிகழும் போது மற்ற நாய்க்குட்டிகள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அவனுடன் கொஞ்சி விளையாடிக்கொண்டிருந்தன. ஆனால் அவனோ களவாடிய குட்டியைத் தன் ஸ்கூல் பேக்கில் போட்டுத் தன் வீட்டுக்கு எடுத்துச் சென்றான். அதையறிந்த அவன் பெற்றோர்கள் முதலில் ஏற்க மறுத்தாலும், அவன் பிடிவாதத்தால் வேறு வழியின்றி ஏற்றனர்.
அதேநேரம் உணவைத்தேடிச் சென்றிருந்த தாய், சிறிது நேரத்தில் வந்து சேர அப்போது தன் ஆண் குட்டியைக் காணாதிருந்ததைக் கண்டு அங்கும் இங்கும் தேடிப் பரிதவித்தது. ஆனால் அதற்கு யார் ஆறுதல் அளிக்க முடியும், அதன் குட்டி பாதுகாப்பாகத்தான் இருக்கிறது என்று.
இப்படியே சில நாட்கள் கடக்க, பிறகு ஆசுவாசமாகி பழைய நிலைக்குத் திரும்பி மற்ற குட்டிகளுடன் வாழத்தொடங்கியது. வேறென்ன செய்ய முடியும் அந்த தாய் நாயால். அதேற்கென முறையிட காவல்நிலையமா இருக்கிறது புகார் அளிக்க. அதான் பழைய நிலைக்கு காரணம்.
மறுபடியும் அதன் மற்ற குட்டிகளும் களவாடப்பட முயற்சிகள் நடந்தது ஆனால் அவைகள் பெட்டைகள் என்பதால் அவற்றை களவாட எந்தவொரு பெற்றோரும் குழந்தைகளை அனுமதிக்கவில்லை. குழந்தைகளுக்கு ஏது வித்தியாசம் ஆண் பெண் குட்டி என்று. அதையும் மீறி ஒரு சிறுவன் தாய் நாய் இருக்கும்போது ஒன்றைக் களவாட முயல, தாய் நாய் அதை கண்டுபுடிக்க!, அவனை கடிக்க முயன்றது.இதனால் லேசாக கீறல்கள் அவன் மேல் விழுந்தது.
அதில் பயந்த அவன் அழுதுகொண்டே வீட்டுக்குச் செல்ல, நடந்த நிகழ்வை அறிந்த அவன் பெற்றோர்கள், கோபத்தில் அந்த தாய் நாயின் இறுதி நாளை குறித்தனர்.
இதனால் பழைய பிரியாணியில் எலிமருந்து விசம் கலந்து, அதை அந்த தாய் நாய்க்கு கொடுக்க முடிவு செய்தார்கள்.
கதிரவனும் அன்று நடக்குப்போகும் நிகழ்வை பிரதிபலிக்கும் விதத்தில் செக்கச்செவேலென்று கிழக்கில் உதித்தது. தாய் நாயும் உணவுக்காக அலைந்து திரிந்து, மீண்டும் இருப்பிடத்தை அடைந்திருந்தது உணவு ஏதும் கிடைக்காததால்.
பிரியாணி வாசனையை நுகர்ந்த தாய் நாய், தன்னை நோக்கி வருவதை உணர்ந்த அது எழுந்து தன் வாலை பவ்யமாக ஆட்டியது. ஆனால் அதன் பாசத்தை உணர மறந்த அவன் பெற்றோர்கள் அந்த விசப் பிரியாணியை அதற்கு வாழை இலையில் படைத்தார்கள்.
அந்த தாயும் வாலை ஆட்டிக்கொண்டு இந்தப் படுகொலையை உணர முடியாமல், தன் குட்டிகளைப் பிரியப் போகிற தருணத்தையும் உணராமல் "வவ்! வவ்! " என்று குரைத்தது தன் குட்டிகளை அழைக்கும் நோக்கத்தில். அதன் குட்டிகள் விபரீதத்தை உணர்ந்ததோ என்னவோ தன் தாயின் அழைப்புக்கு செவி கொடுக்காமல் விளையாடிக் கொண்டிருந்தது.
பசியின் மயக்கத்தில் இருந்த தாய் அவர்கள் கொடுத்த பிரியாணியை நன்றியுடன் வாலை ஆட்டிக்கொண்டே உண்ணத்தொடங்கியது. இதை ஏதும் அறியாத காயம் வாங்கிய சிறுவனோ அந்தத் தாய் நாயைத் தடவிக் கொடுத்துக்கொண்டிருந்தான். ஏனெனில் இருவரும் பகையை மறந்திருக்க வேண்டுமல்லவா. அது தின்றுகொண்டிருப்பதைப் பார்த்த அவன் பெற்றோர் "சரி சரி வாங்க போவோம் " என்று விடாப்பிடியாய் அந்தச் சிறுவனை அழைத்துச் சென்றார்கள் அவ்விடத்தை விட்டு.
அந்த தாய் நாய் அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் கால்வாசியை உண்டு முடித்துத் தள்ளாடத் தொடங்கியது.
இதையறியாத ஒரு குட்டிக்குப் பசி எடுக்க விளையாடுவதை விடுத்துத் தன் தாயை நோக்கி ஓடி வந்தது. குட்டியோ தாயின் வலி புரியாமல் அது தள்ளாடுவதை விளையாட்டாக நினைத்து அதனுடன் விளையாடத் தொடங்கியது. தாய் நாயோ வலியால் துடிக்க அது விளையாட்டாக தெரிந்தது அக்குட்டிக்கு. அந்த குட்டிக்குத் தாயால் புரியவைக்க முடியவில்லை அது விசம் என்று உணர்த்த. ஆனாலும் ஈனக்குரலில் குரைத்தது அக்குட்டியைப் பார்த்து. அதுவோ தாயின் முகத்தை நக்கத் தொடங்கியது.
சில நொடிகளில் தாய் நாய் சுருண்டு விழ குட்டியோ அதை உணராமல் தாயுடன் விளையாடிவிட்டு பால் குடிக்க முற்பட்டது. அப்போது தாய் நாய் தனது இறுதி மூச்சை காற்றிலே கலக்கச் செய்திருந்தது. குட்டியோ மார்பை முட்டி முட்டி இழுக்க , பால் வந்ததோ என்னவோ தெரியவில்லை பிறகு பிரியாணியை நோக்கி நகர்ந்தது அது தன் தாய் இறந்தது தெரியாமல்.
இதை உணராத மற்ற இரண்டு குட்டிகள் விளையாட்டில் மும்முரமாகி ஒன்றை மற்றொன்று விரட்ட அது சாலையைக் கடக்க முயல , அதேநேரம் அங்கு அதிவேகமாக வந்த ஒரு இளைஞனின் பைக் தன் அருகில் வந்ததை பார்த்த அந்தக் குட்டி நாய் பயத்தில் நடுங்கி நகராமல் படுக்கவும், பைக்கின் முன் சக்கரம் அதன் உடல் மீது ஏறவும் சரியாக இருந்தது. இதனால் நொடிப்பொழுதில் அதன் உடல் நசுங்கி உயிரை இழந்தது அந்த விரட்டப்பட்டக் குட்டி. அவனோ பைக்கை நிறுத்தாமல் அதைவிட அதிவேகமாகக் கடந்தான் அந்த இடத்தை.
விரட்டிவந்த குட்டிக்கு அதன் சகோதரியின் நிலைமையை உணர்ந்ததோ என்னவோ அதன் நசுக்கப்பட்ட உடம்பைச் சுற்றி சுற்றி வந்தது. நாக்கால் தடவியது. காலால் உதைத்தது. அதைப் பார்த்த மக்களோ கடந்து சென்றார்கள் சர்வசாதாரணமாக, அதன் உயிரை துச்சமாக மதித்து. ஆம் மனிதர்களுக்கு விலங்கின் தசை மீதுதானே மதிப்பு, அதன் உயிருக்கல்ல அல்லவா.
ஆனால் அதற்கோ பேரிழப்பு. அது புரிந்ததனால்தான் தன் சகோதரியை அது எழுப்ப முயற்சித்துக்கொண்டே இருந்ததோ. ஆனால் எவ்வளவு முயன்றும் அதை எழுப்ப முடியவில்லை அதனால்.
முயற்சிகள் வீணானதால் தன் தாயைப் பார்க்கச் சென்றது அந்தக்குட்டி. அதே நேரம் பிரியாணியை திண்றிருந்த முதல் குட்டியும் தன் உடலை மட்டும் விட்டுச்சென்றிருந்தது இப்பூவுலகுக்கு .அதற்கு எவ்வாறு புரியவைக்க? அதுவும் யார் புரியவைப்பார் அனைத்தும் உயிரிழந்துவிட்டன என்று. பிறகு அது தன் தாயை சுத்தி சுத்தி வந்தது எழாததால் அது தன் இரு சகோதரிகளையும் சுற்றி வந்ததது. இறுதியில் அது களைப்பாக தன் தாயின் மார்பில் பால் குடிக்க முற்பட்டது.
அப்போது அங்கு வந்த சிலர் அந்த இறந்த தாய் நாயை அதன் கால்களைப் பிடித்து தரதரவென்று இழுத்து செல்ல முயல, அந்தக் குட்டியோ "வவ் வவ்"என்று குரைத்து தனது எதிர்ப்பைத் தெரிவித்தது. ஆனால் அதைக் கண்டுகொள்ளாத அவர்கள் அதன் இறந்த இரு சகோதரிகளையும் ஒரு சாக்குப்பையில் போட்டு இழுத்துக்கொண்டு சென்றனர். அந்த நாய்க்குட்டியோ குரைத்துக்கொண்டே அவர்களை துரத்தியது 'தன் தாயை எங்கு கொண்டு செல்கிறீர்கள்' என்ற எண்ணத்துடன்.
பொறுமை இழந்த அவர்கள் குட்டியின் வலியை உணராமல் அதை ஒரு குச்சியால் அடித்து விரட்டிவிட்டனர் "போய்த்தொலை சனியனே " என்று. அன்று ஓடியதுதான் நம் தற்போதைய தெருநாய் இன்று தன் குட்டிகளை கொஞ்சிக் கொண்டிருந்தது இப்பூவுலகுக்கு வந்ததை மகிழ்ச்சியாக.
கனமழை சென்னையை மிதக்கவிட்டிருந்தது.இதனால் அதன் இருப்பிடத்தையும் நீர் சூழ ஆரம்பிக்க, குட்டிகளை வேறு ஒரு இடத்துக்கு பாதுகாப்பாக எடுத்துச்செல்ல முடிவு செய்து, இறுதியாக ஒரு வீட்டின் மாடிப்படிக்குக் கீழ் உள்ள இடத்தைக் கண்டுபிடித்து அங்கு கொண்டு விட்டது தன் குட்டிகளை. ஆனால் அதற்கு என்ன தெரியும் இந்த மனித பதர்கள் ஏரியை ஆக்கிரமித்து கட்டிய வீடு இது என்று. பிறகு பசிக்கொடுமையால் குட்டிகளை அங்கேயே விட்டுவிட்டு உணவைத்தேடி அலைந்தது அந்த மழையிலும்.
அப்போது சென்னையே முழுவதும் நீரில் மூழ்கி இருக்க, மனிதர்களுக்கே உணவுப் பொட்டலங்கள் கிடைக்காத வேளையில், ஏழைகளோ தங்கள் இருப்பிடத்தை இழந்து தவிக்கும் நிலையில் யார் உணர்வார் இந்த தெருநாயின் தாய்மை வலியையும் அதன் பசியின் கொடுமையையும்.
இறுதியில் ஓரிடத்தில் அழுகிய நிலையில் கிடந்த கோழிக்கழிவுகளின் இறைச்சியை திண்ணத் தொடங்கியது.
கடும் மழையால் அங்கும் சிறிது சிறிதாக நீர் வரத்தொடங்கியது. ஆனால் இதை அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை தாய் நாய் பசியின் மயக்கத்தில். சிறிது நேரம் கழித்து, திடீரென்று தண்ணி அணை உடைந்து வருவதுபோல் முழுவேகத்தில் அவ்வழியே வர தின்றுகொண்டிருந்த தாய்நாயை இழுத்துக்கொண்டு சென்றது.
ஆம் அப்போது செம்பரம்பாக்கம் ஏரியை எதிர்பாராவிதமாக திறந்து விட்டிருந்தனர் அணையில் நீர் நிரம்பியதால். இதனால் அனைத்து தெருக்களும் ஏரியைப்போல் காட்சியளித்தது. அதில் அடித்துச்செல்லப்பட்ட தாய் நாய்க்கு உடலில் காயங்கள் ஏற்பட இறுதியாக நீரின் வேகத்தை சமாளித்து ஒரு மேடான இடத்தை அடைய, அப்போது தன் குட்டிகளின் நிலை பற்றி யோசித்ததோ என்னவோ மறுபடியும் தாக்குப்பிடித்து நீந்தி தன் குட்டிகள் இருக்கும் இடத்தை அடைந்த போது அங்கே குட்டிகள் இல்லை. ஏனெனில் வெள்ளம் அந்த வீட்டையும் பாதி மூழ்கடித்திருந்தது. மேலும் குட்டிகளும் அந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு வெவ்வேறு திசைகளில் பிணங்களாக மிதந்தது. தாய் நாயோ பதறியடித்து தன் குட்டிகளைத் தேட ஆரம்பித்தது. அப்போது ஒரு குட்டிநாய் இறந்து மிதப்பதை கண்ட தாய் நாய் அதை நெருங்கி, தன் வாயால் இறந்த குட்டியை கவ்விக்கொள்ள அப்போது எதிர்பாராவிதமாக செம்பரம்பாக்கத்தின் இன்னொரு மதகும் திறக்கப்பட்டதால் மீண்டும் வெள்ளம் தன் கோரமுகத்தைக் காட்ட அதில் தாய் நாய் மீண்டும் கரடுமுரடாக அடித்துச் செல்லப்பட்டு எங்கோ ஒரு இடத்தில் வீசிச் சென்றது. அதில் தன் குட்டியையும் நழுவவிட்டிருந்தது. குட்டிகளை ஈன்ற காயத்தின் வலி கூட மறையாத சூழலில் அதன் குட்டிகளை இழந்ததில் வருத்தம் கூடியதால், உணவு உண்ணாமல் அலைந்நு திரிந்து களைத்துப்போனதால், இறுதியாக மனிதர்கள் தஞ்சம் அடைந்திருந்த இடத்தில் தனக்கென கிடைத்த ஈரமான இடத்தில் சென்று படுத்தது.
இரண்டுமூன்று நாட்கள் ஆகி நீரும் வடியாததால் நோயும் தொற்றியது. அதன் காயங்கள் சீல் பிடிக்க ஆரம்பித்தன. உணவுக்காக அலைந்து திரிந்தது மறுபடியும். மனிதர்களே உணவுக்கு அலைந்த நேரத்தில் அவர்களுக்கு கிடைத்த பொட்டலத்தில் இதற்கு உணவு தர யாரும் தயாராக இல்லை. அவர்களும் அடித்து விரட்டினார்கள் " எங்களுக்கே சொறு இல்ல இதுல உனக்கு எங்க தர்ரது " என்று. அரசோ மனிதர்களுக்கு தானே உணவை தயார் செய்தது. விலங்குகளுக்கு இல்லையே. இறுதியாக உணவுக்கு அலைந்து நொந்த நேரத்தில், ஒருவர் உண்பதை பார்த்த தாய் நாய், அவரை நோக்கிச் சென்று வாலை ஆட்டி அவர் முன் நின்றது. நாயின் உடலை நோக்கிய அவர் , அதன் நொடிந்த தேகத்தை உணர்ந்ததால் தான் பெற்ற உணவின் பாதியை அதற்கு அளித்து அதன் உயிரை காத்தார் அப்போதைக்கு. ஆனால் மற்ற நேரங்களில் எங்கும் உணவு கிடைக்காததால் பட்டினியோடு அலைந்து திரிந்தது.
இப்படியே உணவைத் தேடி அலைந்து சரிவர கிடைக்காததால் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்றது. நாட்களும் கடந்தன. இறுதியாக வாழிடம் இயல்புநிலைக்கு திரும்பினாலும் அங்கு திரிந்த மற்ற நாய்களால் தாக்குதலுக்கு உள்ளாகி, மேலும் மோசமடைந்தது அதன் உடல். காயங்கள் ஆறாத நிலையில் சில ஆண் நாய்கள் வேறு அதை துரத்திக்கொண்டே இருந்தது. நாட்கள் செல்லச் செல்ல அந்தக் காயங்கள் ஆறாமல் புழுக்களும் உருவாகின இலவச இணைப்பாக அதன் உடலில்.
வலி தாங்கமுடியாமல் நாட்களைக் கடத்தியது நாடுமாறியாக.எங்கோ நடந்த திருமண விழாவில் வாழை இலைகளுடன் மிஞ்சிய உணவுகள் கிடைக்க, அதையும் உண்ண இயலாத அளவிற்கு மற்ற நாய்கள் அதனுடன் சண்டையிட்டு அதற்கு படுகாயங்களை ஏற்படுத்த. குத்துயிரும் குலைஉயிருமாக நடமாடியது தாய்நாய்..எங்கோ கிடைத்த உணவை உண்டு தன் வாழ்வை தொடர்ந்தது சில காலம்.
பேய் மழைத்தண்ணீரும் மற்ற கார்ப்பரேட்டுகளால் உறியப்பட, அனைத்து குளம் குட்டைகளும் வற்றிப்போனது. உணவுக்குப் பஞ்சம் என்பது தற்போது நீருக்கே பஞ்சமானது. எங்கு பார்த்தாலும் சாக்கடை மட்டுமே. வெயில் காலத்தில் அதில் உருண்டு சூட்டை தணித்துக்கொண்டது.
ஆயினும் காயங்கள் புழுக்களால் அழுக, கொடூர வலியை ஏற்படுத்த தாங்க முடியாமல் ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கியது. முடி உதிர்ந்த சொரி நாயைப்போல் காட்சி அளித்தது.
மற்ற நாய்கள் நடமாடும்போது குரைத்ததை கண்டுகொள்ளாமல், இந்த மாமித மனிதர்கள் தங்களைத்தான் குரைப்பதாக எண்ணி மாநகராட்சிக்கு மென்ட்டல் நாய் என்று தெரிவிக்க, மாநகராட்சியும் அதை பிடிக்க துரத்தியபோது 'தன்னைத்தான் கொல்லப்போகிறார்கள்' என்ற பயத்தில் வேகமாக ஓடி, எக்ஸ்பிரஸ் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற போது அதிவேகமாக 3மணி நேரத்தில் சேலத்தை அடைய முற்பட்ட வாகனத்தில் அடிபட்டு தூக்கி எறியப்பட்டது மறுபக்க சாலையில்.
அதே சமயம் அந்த மறுபக்க சாலையில் சென்னையை நோக்கிச் சென்ற லாரியால் குற்றுயிரும் சுபமாக முடிக்கப்பட்டு வழியனுப்பி வைக்கப்பட்டது.
தொடரும்....
Comments
Post a Comment