அய்யாவு
வடுகபட்டியின் அதிகாலை மார்கழி மாத குளிர் "ஊட்டிக்கு நான் சளைத்ததில்லை" என்று போட்டி போட்டுக்கொண்டு இருந்ததோ என்னவோ அப்படியொரு குளிர்.
எவ்வளவு குளிர் என்றாலும் அய்யாவு ஐயாவின் அதிகாலை விழிப்பைத் தோற்கடிக்க முடியாது குளிரால். அதிகாலை 3 மணி ஆனதும் அய்யாவுவின் முழிப்பு , அலாரத்திற்கே போட்டிபோடும். சோம்பல் முறிப்பதற்குக் கூட விரும்பாத உடல் அது. படுக்கையில் இருந்து எழுந்தவுடன் "எல்லாரும் நல்லா இருக்கணும் கடவுளே" என்று வேண்டிக்கொண்ட பிறகு விறு விறு என்று எழுந்து பால் கறக்கச் சென்றுவிடுவார் தொழுவத்திற்கு.
அய்யாவுவின் மனைவி அமராவதியும் அவருக்குச் சமமாக எழுந்து வாசலை பெருக்கி சாணம் தெளித்து கோலம் போட்டு அதன் நடுவில் ஒரு பரங்கிப்பூவையும் வைத்து விட்டுத்தான் மறு வேலை. இவர்கள் இருவருக்கும் வேலையில் அவ்வளவு போட்டி அத்தனை வயதிலும்.
பால் கறந்து முடித்த அய்யாவு அமராவதியிடம், "சரி, நான் போயி பால் பண்ணைல பால ஊத்திட்டு அப்டியே கடைய தெறக்குறேன், நீங்க மத்த சோலிய முடிச்சிட்டு வந்துடுங்க" என்று மதிப்போடு கூறிவிட்டு வேகவேகமாக பால்பண்ணை நோக்கி சென்றார். ஏனெனில் அய்யாவு சின்ன குழந்தைகள் முதற்கொண்டு மதிப்பு கொடுத்து அவ்வளவு வாஞ்சையாக பேசுபவர்.
பால்பண்ணையில் பாலைக் கொடுத்துவிட்டு, வேக வேகமாக தனது TVS XL இரு சக்கர வாகனத்தில் வந்து சேர்ந்தார் தனது கடைக்கு. அந்தக் கடையில் ஒரு பிரிவில் மளிகைக் கடையையும் மறுபிரிவில் தேநீர்க் கடையையும் வைத்திருந்தார்.
அருகே சில கடைகள் இருந்தாலும், இவரது அன்பான இதமான பேச்சு வருபவர்களுக்கு ஒரு மகிழ்வைக் கொடுத்ததாலேயே, பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் முதல் முதியவர்கள் வரை அய்யாவு கடையில் எப்போதும் கூட்டம் வந்த வண்ணம் இருக்கும். மேலும், அவரது கடையில் ஒலிக்கும் பாடல்களும் வருவோரை வெகுவாக ஈர்க்கும்.
இதனாலயே கவலைகளை மறக்க சிறிது நேரமாவது அய்யாவுவின் கடைக்கு வருபவர்கள் பலர்.
அய்யாவுவும் வேலையில் மும்முரமாக , பக்திப்பாடல்களும் பின்னணியில் ஒலிக்க ஊருக்கே அறிவித்தது பொழுது புலர்ந்ததை..
அப்போது அங்கு வந்த பெரியவர் ராமசாமி, "அய்யாவு நமக்கு ஒரு டீ போடுப்பா" என்று சொல்லிவிட்டு அமைதியாக அமர்ந்தார். இந்த அமைதியைச் சற்றும் எதிர்பாராத அய்யாவு, "என்னாச்சு ராமா ஏன் இவ்ளோ கவலையா இருக்கீக?, இப்டி இருக்க மாட்டீகளே எப்பவும்" என்றார் ராமசாமியிடம்.
"அட அதுவா தை மாசம் பொறக்க போவுது, அறுவடை நல்ல படியா இருந்தா நெல்ல வித்து புள்ளைங்களுக்கு நல்லது செய்யலாம், இல்லனா... " என்று அமைதியானார், அய்யாவு கொடுத்த தேநீரை வாங்கிக் கொண்டு.
"அட விடுப்பா. இந்த தடவ நல்ல மழை. கம்மா கண்ணியும் நிறைஞ்சிருக்கு. அதுக்கேத்தா மாதிரி இந்த தடவ எல்லா வயலும் நல்லா விளைஞ்சு கிடக்கு. பெறவு என்ன. பயப்படாதீக. நல்லதே நடக்கும். அறுவடை நல்ல படியா அமைஞ்சு, விலையும் நல்ல விதத்தில கிடைக்கும். எல்லாம் நம்பிக்கைதான். கவலப்படுறதுனால எதுனா ஆகப்போதா. இல்லைல. பெறவு என்ன. போனதடவ மாதிரி இல்லாம இந்த முறை நல்ல விளைச்சல். அப்டி நினைச்சு மகிழ்ச்சியா இருய்யா " என்று நம்பிக்கையூட்டினார் ராமசாமியிடம்.
ராமசாமியும், "ஆமப்பா நீ சொல்றதும் சரிதான். கவலப்படுறதுனால என்ன ஆகப்போது. ஒன்னுமில்லை. அடுத்து நடக்குறத பார்ப்போம்" என்று தெம்பாகப் பதிலளித்தார்.
மேலும் "உன்கிட்ட பிடிச்சதே இந்த நல்ல நாலு சொல் தாம்ப்பா. சரிப்பா வயக்காட்டு பக்கம் போய்ட்டு வாரேன்" என்று கூறிவிட்டு அருகிலிருந்த மண்வெட்டியை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு நடந்தார் ராமசாமி.
அதேநேரம் அமராவதியும் வேலைக்குச் செல்லும் கூலி ஆட்களும் ஒரே நேரத்தில் வந்தடைந்தனர் கடைக்கு.
"வாங்கம்மா. என்ன ஐயாவத் தனியா தவிக்க விட்டீக போல இன்னைக்கு, அங்க பாருங்க மனுசன" என்று மேஸ்த்திரி ரவி அமராவதியிடம் கிண்டலடிக்க,
அமராவதியோ "அட போப்பா, எம்புருசன் அதெல்லாம் தனியாவே சமாளிச்சிடுவார்" என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தாள்.
அப்போது ரவி, "அப்போவ், நமக்கு ஒரு ஏழு காபி, ஏழு வடை தந்துடுங்க" என்று அய்யாவுவிடம் கூற,
அவரும் "இந்தா போட்ருவோம், ரவிக்கு இல்லாததா. மொதலாளி இல்ல" என்றார் சிரித்துக்கொண்டே.
ரவியோ "ம்கும் இவனுங்களுக்கு வடை டீ வாங்கி கொடுத்தே நான் பிச்சைகாரன் ஆய்டுவேன் போல" என்று கிண்டலடித்தான் மற்றவர்களைப் பார்த்து.
அய்யாவுவும், "சரிப்பா சரிப்பா. வள்ளல் அப்டி எல்லாம் சொல்லக்கூடாது" என்று கூறிக்கொண்டே ஆவி பறக்க டீ யை கொடுத்தார். அமராவதியோ சுடச்சுட வடைகள எடுத்து ஒவ்வொருவருக்கும் காகிதத்தில் கொடுத்தார்.
பிறகு ரவியும், "அப்போவ் சில்லறை இல்லை. சாயங்காலம் வரும்போது தர்றேன்" என்று அய்யாவுவிடம் கூற
அய்யாவுவும், "அட போப்பா. எப்ப வேணாலும் குடு. இதுல என்ன இருக்கு?" என்றார்.
ரவியும் மற்றவர்களிடம், "சரிங்கப்பா கிளம்புங்க, நேரமாச்சு" என்று கூறிவிட்டு தன் ஸ்பிலென்டர் இரு சக்கர வாகனத்தில் பறந்தான்.
கதிரவனும் தன் பங்குக்கு அய்யாவுவின் கடைக்கு வந்தது போல தன் செந்நிறக் கதிர்களைக் கொட்டகை வழியே ஊடுருவ விட்டது உட்புறம்.
சிறிது நேரத்தில் குடும்பத்தலைவிகளும் மற்றவர்களும் ஒவ்வொருவராக கடைக்கு வந்து பால்பாக்கெட் கேட்க, அவரோ
"பிளாஸ்டிக் தடை வேற. நல்ல விசயம். அதான் பாக்கெட் வேணாம்னுட்டு நாமளே தூக்குவாளிகளை வாங்கி, பால அதுல ஊத்தி தரலாம்னு ஒரு ஐடியா" என்றார் சிரித்துக்கொண்டு.
மேலும் தொடர்ந்தவர், "உங்களுக்கு தொந்தரவு தர வேணாம்னு இப்டி. நீங்க திரும்ப வரும்போது பாத்திரத்தைக் கொண்டுவாங்க" என்றார் முகத்தில் புன்னகை தவழ.
அப்பெண்மணியும், "ரொம்ப நல்ல விசயம். இனிமே நாங்களே பாத்திரத்தைக் கொண்டு வந்துடுறோம்" என்று கூறிவிட்டுச் சென்றார்.
இவ்வாறு நேரம் ஆக ஆக கூட்டமும் அதிகரிக்க, அப்போது அங்கு வந்த பக்கத்து கடைக்காரர் ராசு, தனது கடைக்கு முன் வாகனம் நிறுத்தியிருப்பதைப் பார்த்தவர் கோவமாக, "யோவ் யார்ட்டுயா வண்டி இது. கடைக்கு முன்னாடி. இடைஞ்சலா. கடை திறக்க வேணாமா. எடுங்கயா" என்றவர்,
"வாங்குறது அங்க, வண்டி நிறுத்துறது இங்கயா. டெய்லி இதே பொழப்பா போச்சு. யோவ் பெரிசு இனிமே என் கடைக்கு முன்னாடி வண்டி இருந்துச்சு அவ்ளோதான் உன்னை" என்று பொறாமையில் கத்தினான் அய்யாவுவிடம்.
அமராவதியும் பதிலுக்குப் பேசப்போக, அவளிடம் தன் கண் அசைவில் பதிலளித்தார் 'வேண்டாம்' என்று.
கடையில் இருந்தவர்களும் "அட என்னப்பா ராசு. பெரியவர மட்டு மதிப்பு இல்லாம பேசுற" என்று சொல்ல,
பதிலுக்கு ராசுவும், "யோவ் காலங்காத்தால ஓசி டீ குடிக்க வந்தவனுக நீங்க, எனக்கு அறிவுரை சொல்றீங்களா" என்று எகிறினான் அவர்களிடம்.
இதனால் கோபமடைந்தவர்கள் ராசுவைத் திட்டத் தொடங்க, அய்யாவு அவர்களிடம், "அட என்னப்பா நீங்களும். அவர்தான் அப்டி பேசிட்டார்னா. நாமளும் திருப்பியா பண்றது" என்று கூற, அவர்களோ "இல்லைங்கயா , வண்டி வைக்காதனா முடிஞ்சு போச்சு அதவிட்டுட்டு நாக்கு மேல பல்ல போட்டு பேசிட்டே போனா, தப்பில்ல அதான். உங்களால தப்பிச்சார். இல்லைனா அவ்ளோதான் இன்னைக்கு" என்று கூச்சலிட்டனர்.
'அய்யாவுவின் அன்புக்காக அவர்கள் அமைதியாகினர் இல்லையென்றால், ராசுவின் நிலைமை கடினமே' என்ற சூழ்நிலை நிலவியது அங்கு.
இதற்கிடையே ராசுவும் கோபத்தில்
"ஆளவிட்டு அடிக்க விடுறியா. டேய்! அதனாலதான்டா கெழவா, உனக்கு குழந்தையே பொறக்கல" என்று கூற, இதைக்கேட்ட அய்யாவு சிறிது தடுமாறினாலும், அமராவதி உடைந்து அழுதே விட்டாள்.
அய்யாவுவும் அமராவதியிடம், "விடு விடு அவரும் நம்ம பையன் மாதிரி தான. ஏதோ கோவத்துல திட்டிடாப்ல. அவரு குடும்பத்துல என்னச் சிக்கலோ" என்று தேற்றினார்.
இப்படியே சில நாட்கள் கடக்க, பொன்னமராவதியிலிருந்து ஒரு தம்பதியினர் அய்யாவு கடைக்கு வர, அவர்கள் தேநீர் பருகிக்கொண்டே ராசுவையும் அவரது குடும்பத்தையும் பற்றி விசாரித்தனர்.
அய்யாவுவோ, "ஏன் நீங்க விசாரிக்கிறீங்க. எதுக்கு? " என்று வினவ, அவர்களோ" இல்லை அவர் மகள பொண்ணு கேட்க வந்திருக்கோம்.அதான் கேட்டோம். தப்பா நினைக்காதீக" என்றனர்.
"அப்டியா! ரொம்ப நல்ல விசயம்ங்க. பொண்ணு தங்கமான பொண்ணு. ரொம்ப நல்லவங்க "என்று நல்லவிதமாக அய்யாவு சொல்ல, அவர்களோ " கடன் அதிகமோ? , சொல்லக் கேள்வி அதான்" என்று தயங்கி கேட்டனர்.
அய்யாவுவோ, "இல்லைங்க. அப்டிலாம் இல்லை. நல்ல சம்பந்தம். விட்ராதீக" என்றார் அந்த தம்பதியிடம்.
இதைப்பார்த்த ஊர்க்காரர் ஒருவர் எதார்த்தமாக முன்னால் வந்த ராசுவிடம் "ஏம்ப்பா ராசு, அய்யாவுகிட்ட கார்ல வந்து யாரோ பேசிகிட்டு இருக்காக, யாரா இருக்கும்" என்று கொளுத்திப் போட, ராசுவிற்கும் பொறி தட்டியது
'நம்ப வீட்டுக்கு வந்தவங்கள்ட்டதான் இந்த கெழவன் போட்டுத்தர்றான் போல' என்று மனதுக்குள் நினைக்க, அதே சமயம் அந்த மகிழ்வுந்து அவனைக் கடந்து சென்றது.
மகிழ்வுந்தைப் பார்த்தவன் நேராக வீட்டை நோக்கி நடந்தான், மனதிற்குள் பல குழப்பத்தோடும், அய்யாவுவின் மேல் வன்மத்தோடும். ஏனெனில் ராசுவின் மகளுக்கும் ஏகப்பட்ட வரன்கள் வந்து போன வண்ணமே இருந்ததது. அது தனது நடவடிக்கையால்தான் என்று தெரியாமலே. ஆனாலும் ராசுவுக்கும் ஒரு வித கவலை ஏற்பட்டிருந்தது மகளின் திருமண வாழ்வு தள்ளிப் போகிறதே என்று.
வடுகபட்டியும் மறுபடியும் மழையில் நனையத் தயாராவது போல் இருந்தது அன்றையக் காலநிலையில். குளு குளுக் காற்றும் கரு மேகமும் மரக்கிளைகளின் நடனமும் வடுகபட்டியின் அழகை மேலும் அழகாகக் காட்டியது.
ராசுவின் வீட்டிலிருந்து மகிழ்வுந்து புறப்பட்டுச் செல்வதை அய்யாவு கடைக்கும் போகும் வழியில் பார்த்தபோது, தன் மனதிற்குள் "நல்ல செய்தியாக வரணும் கடவுளே" என்று வேண்டிக்கொண்டார்.
கதிரவனின் கதிர்கள் மழைத்துளிகளுக்கு வழிவிட்டு ஒதுங்க, இறைச்சலுடன் தன் வருகையைப் பதிவு செய்தது அப்போது.
அன்று இரவு ராசுவும் விடாத மழையிலும் குடையைப் பிடித்துக்கொண்டு அய்யாவு கடையை நோக்கி விறுவிறு என்று நடந்துச் சென்று கடையை அடைய, கடையின் உள்ளே ஒரு ராந்தல் மட்டும் மஞ்சள் நிறத்தில் ஒளியைத் தந்துகொண்டிருந்தது அவ்வளவு இரைச்சலில்.
சிறிது நேரம் நின்றவன் "யோவ் கிழவா, நான் என்ன உன்கிட்ட கெஞ்சினனா என் ம..." என்று சொல்வதற்கும் கூரைக்கொட்டகைக் கடையின் மேல் ஆலமரம் விழுவதற்கும் சரியாக இருந்தது.
அந்த மரத்தின் ஒரு கிளையும் இவன் குடையின் மேல் உரசிச்சென்றதில் தடுமாறி விழுந்தான். நிமிர்ந்து பார்த்தவன் "அய்யோ" என்று அலறினான் கடை தரைமட்டமாகக் கிடந்ததைப் பார்த்து.
முதன் முறையாக "ஐயா! ஐயா! அம்மா! அம்மா! " என்று கதறி அழுதுகொண்டே தேடியபோது, கீழே கிடந்த வேட்டியில் இரத்தத்தைப் பார்த்தவன் ஒரு முடிவுக்கு வந்தவனாக "உன்னாலதான்ய இன்னைக்கு நல்ல சேதியே கிடைச்சிருக்கு எனக்கு.என்ன பத்தி நாலு நல்லதைச் சொல்லி, எனக்கொரு வழிய காட்டின உனக்காயா இப்டி நடக்கணும், எப்பவுமே நல்லத பேசுற நீ எங்க, கெட்டத மட்டுமே பேசுற இந்த ஈனப்பிறவி எங்க. அடுத்த பிறவினு ஒன்னு இருந்தா நீங்களாம் ராசாவா பிறக்கணும்யா உங்க நல்ல மனசுக்கு" என்று கூறிக்கொண்டே கதறி அழுதான்.
"ராசு! ராசு! ஏம்ப்பா இப்டி அழுகுற?, என்னாச்சு? என்னாச்சு?" என்ற அய்யாவுவின் பதறிய குரலைக் கேட்டு திரும்பியவன் மகிழ்ச்சியில் அதிர்ந்தான்......
--*-- --*-- --*--
குறள்:
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
அருமை, மிடில்! நெகிழித் தடை வந்துவிட்டாலும் இன்னும் முழுமையாக செயலாக்கப்படவில்லை. அது விரைவில் நடக்க வேண்டும்! கதையில் அதைக் கொண்டு வந்தது அருமை! சிறு வயதில் நானும் பாத்திரத்தில் பால் வாங்கியுள்ளேன்! முடிவில் உள்ள திருப்பமும் செம!
ReplyDelete