ஞாநி

சென்னையின் அதிகாலை பரபரப்பில் கதிரவன் மனதில் எந்தவிதமான சலனமுமின்றி, காலை உடற்பயிற்சிக்காக தன் வீட்டின் அருகில் உள்ள பூங்காவிற்கு நடந்து சென்று கொண்டிருந்தான்.

முப்பத்தைந்து வயதை எட்டியிருந்தவன் அவனது கட்டுக்கோப்பான உணவுப்பழக்கங்களால் இருபத்தைந்து இளைஞனாகவே காணப்பட்டான்.

இளங்காலையின் தென்றல்காற்றும், எழத் துடித்துக்கொண்டிருந்த கதிரவனின் இதமான வெப்பமும் அவனை தழுவிக் கொண்டிருந்தது.

கதிரவன் நடைபயிற்சிக்கே உரிய நடையில் சென்று கொண்டிருந்தாலும் தன் கண்களை அங்குமிங்கும் மேயவிட்டான். ஆம், அன்று காலையில் அவன் தினமும் காணும் நண்பர்கள் இன்று காணவில்லை. ஒருவரல்ல இருவரல்ல ஆறு பேர்.

"ஒருத்தர் கூட காணவில்லையே, எங்கே?" என்று சுற்றி சுற்றி பார்த்தவன், தன்னை நோக்கி ஒருவர் வருவதைப் பார்த்தான்.

அவர் தெரிந்த முகமே... கமல் என்று கதிரவன் மனதுக்குள் நினைத்தான்.
ஏனெனில் கதிரவன் அதிக சொற்களை பயன்படுத்துவதில்லை. அவனது முக்கால்வாசி பதில்கள் ஓரிரு சொற்களில் முடிந்துவிடும். அதனாலேயே கதிரவனை நேசிக்கிறவர்கள் பலர் உண்டு.

கதிரவனின் அருகில் வந்த கமல் "சார், நேத்து எல்லாரையும் புடிச்சிகிட்டு போய்டாங்க" என்று இறுக்கமான முகத்தோடு கூறினான்.

கமலின் சொற்கள் கவலையை கதிரவனின் முகத்திலும் சிறிது நேரம் படரச் செய்தது.

பிறகு, தன்னிலை வந்து ஒரு புன்னகையை கமலுக்குப் பரிசளித்துவிட்டு, வழக்கமாக சந்திக்கும் இடத்திற்குச் சென்றான்.

தன் பையில் வைத்திருந்த பிஸ்கெட் பாக்கெட்டுகள், ஆறு தட்டுகள் மற்றும் ஒரு வாட்டர் பாட்டிலையும் பார்த்தவன், அங்கு சிறிது நேரம் அமர்ந்திருந்தான் ஏதோ சிந்தனையில்.

ஆம்... அவன் காண துடித்தது ஆறு தெரு நாய்களை. அவைகளுக்கு பெயர் கூட வைத்திருந்தான். அவ்வளவு அன்பு இவர்களுக்குள். கடந்த இரண்டு வருடங்களாக... ஒவ்வொரு  நாளும்  உணவளித்துவிட்டுச் செல்வான். ஆனால் இப்போது அவைகள் இல்லை.

ஏனெனில், சென்னை மாநகராட்சி தெரு நாய்கள் பற்றிய புகார்கள் வந்ததால் இவைகளையும் பிடித்துக்கொண்டு சென்றிருந்தது.

கொண்டு வந்திருந்த அனைத்தையும் வழக்கம்போல் பிரித்து வைத்துவிட்டு அமைதியாக நடந்து சென்று நெடுஞ்சாலையின் வளைவை கடக்க முற்பட்டவனை விதிகளை மீறி ஒரு வழிச்சாலையில் எதிர்புறம் வந்த காரால் அடித்து, தூக்கிவீசப்பட்டான் கதிரவன்.

தூக்கிவீசப்பட்டதில் தலையின் பின்புறத்தில் குருதி வெள்ளம் போல் வெளிவந்து நனைத்திருந்தது. விபத்தை ஏற்படுத்திய காரோ நொடிப்பொழுதில் மறைந்தது.

டீக்கடையில் இருந்தவர்கள் இதைப் பார்த்ததும் ஓடிவந்து, 108 க்கு அழைத்துவிட்டு அவரைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

"யாரோ எவரோ இப்டி ஆய்டுச்சே" என்று சிலரும், மற்றவர்களோ "இவரு அந்த நாய்களுக்கு சோறு வைக்கிறவர்ப்பா"  என்றும், மேலும் சிலர் "டெய்லி வாக்கிங் வருவார்ப்பா" என்றும் பேசிக் கொண்டிருந்தனர்.

டீக்கடை ஓனர் பாலுவும் "அட கடவுளே! கதிரவன் சார். ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணுங்கப்பா" என்று அழுதுகொண்டே தன் கையில் கொண்டுவந்த நீரையும் முகத்தில் தெளித்து "சார் சார்" என்று எழுப்ப, கதிரவனும் சிறிது கண்கள் மெதுவாக திறந்து பாலுவை பார்த்தவன் ஒரு புன்னகையை பரிசளித்துவிட்டு மறுபடியும் மயக்க மடைந்தான்.

டீக்கடைகாரன் பாலுவோ  "சார் சார்" என்று கண்ணீர் மல்க அழுதான். அந்நேரம் காவலர்களும் வந்து சேர்ந்திருந்தனர்.

காவல் ஆய்வாளரோ உறவினர்களுக்குத் தகவல் தர "மொபைல் இருக்கிறதா" என்று தேடிய போது கிடைத்தது . அவன் உடல் அருகில்.  அதில் தந்தை தாய் அண்ணன் என யாருடைய எண்களாவது இருக்கின்றதா என்று பார்த்த போது அதில் பெயர்களே இல்லை. எண்கள் மட்டுமே இருந்தது. கடைசி அழைப்பை தேடிய போது அதுவும் மூன்று நாட்களுக்கு முன்புதான் வந்திருந்தது. அந்தளவுக்கு யாரிடமும் கதிரவன் அதிகம் பழகவில்லை.

காவல் ஆய்வாளரும் அந்த எண்ணை தொடர்பு கொண்ட போது கதிரவன் யார் என்று தகவல் கிடைத்தது.

தன் காவலரிடம் "இவரு பெரிய ஐடி கம்பெனில CEO வாம். கொஞ்ச வயசுல இவ்ளோ பெரிய போஸ்ட். ஆனா இப்டி ஆய்டுச்சு. ரொம்ப  சாதாரணமா இருக்காப்ல. இந்த மொபைல்கூட கூட ஐயாயிர ரூவா தாண்டாது போல. கழுத்துல கைல ஒன்னுத்தையும் காணோம்" என்று பேசிக்கொண்டிருந்தார் சக காவலரிடம்.

அந்த நேரம் ஆம்புலன்சும் வந்துசேர, விரைவாக கதிரவனை ஸ்டிரெட்சரில் ஏற்றினர். அவர்களுடன் பாலுவும் தன் உதவியாளனிடம் " கடையை சாத்திடு" என்று  சொல்லிவிட்டு, கதிரவனோடு அரசு மருத்துவமனைக்குச் சென்றான்.

போகிற வழியில் கதிரவனின்  நினைவுகளை அசைபோட்டான் கண்ணீர் மல்க.  பூங்காவில் தான் சோகத்தோடு அமர்ந்திருந்ததைப் பார்த்த கதிரவன், என்ன என்று விசாரித்து தனக்கு பண உதவி செய்து, தான் இந்த நிலைமைக்கு வரக்காரணமானவரை  மனதளவில் கடவுளாகவே நினைத்து வணங்கிக் கொண்டான்.

அரசு மருத்துவமனையை அடைந்தபோது அங்கே அவ்வளவு கூட்டம் கதிரவனைப் பார்க்க.

வயதுமுதிர்ந்த ஒருவர் "கதிரவா!" என்று கத்தி,  "நல்லவனுகள இப்படிதான் சோதிக்குமோ இந்த வாழ்க்கை" என்று கதறினார்.

டீக்கடைகாரன் பாலு வாகனத்திலிருந்து இறங்கியதும் கூட்டத்தையும்,  முதியவரையும் பார்த்தவனுக்குக் கண்கள் மேலும் குளமாகியது. கதிரவனை வேக வேகமாக, ICU அறைக்கு எடுத்துச் சென்றனர்.

மருத்துவமனையின் வழக்கமான அனுமதி படிவத்தில் கதிரவனின் உறவினர் என்ற இடத்தில் பெரியவர் கணபதி என்பவர் கார்டியன் முறையில் கையெழுத்திட்டார் நட்புக்காக.

ஆம்... கதிரவன் யாரும் இல்லாதவன் என்றது அரசு தரப்பு ஆவணங்கள். ஆனால், கதிரவனுக்கு உலகமே உறவு.

தகவலறிந்த அனைவரும் வீட்டை மொய்த்திருந்தனர். குழந்தைகள் உற்பட 'கதிரவன் அங்க்கிள்' என்று அழுது கொண்டிருந்தனர்.

பெரியவர் கணபதி, பாலுவைக் கதிரவனின் வீட்டுக்குச் சென்றுவரும்படி கூறினார், சில பொருட்களை எடுத்து வர. தயங்கிய பாலு "ஐயா, அவர் வீட்டுக்கு நான்?" என்று இழுக்க. "அட... போப்பா அவனுக்கு நாம தான் சொந்தமே" என்றார். 

விரைவாக சென்று முகவரியை அடைந்தவன், வீட்டை பார்த்த போது. அதிர்ச்சியுற்றான். பெரிய வீடாக இருக்குமானு நினைத்து வந்தவன் அதிர்ச்சி அடைந்தான். அது சிறிய வீடு 1BHK அவ்வளவே. கதவை திறந்தவன் மேலும் பார்த்தது வெறும் புத்தகங்களே வீட்டினுள். ஒரு டேபிள், ஒரு சேர் ,சில பாத்திரங்கள் , மூலையில் பாய் தலையணை மட்டுமே... டிவி கூட இல்லை. 'இவ்ளோ சிம்பிளா?  இந்த காலத்துலயா? மனுசன்! காசு இருந்தும்' என்று மனதுக்குள் நினைத்தான்.

சில உடைகள், அவனது பேக் என எடுத்துக்கொண்டு விரைந்தான் மருத்துவமனைக்கு பாலு.

பாலுவும், பெரியவர் கணபதியிடம் சென்று கொடுத்துவிட்டு அருகிலேயே நின்று கொண்டான். மற்றவர்களும் கதிரவனைத் தன் சொந்தமாக நினைத்து கடவுளிடம் வேண்டிக் கொண்டனர் மனதினுள்.

அப்போது பாலு, பெரியவர் கணபதியிடம் "ஐயா, கதிரவன் சார்..." என்று இழுக்க...

பெரியவரோ "கதிரவன் ஒரு.... " என்று நா தழுதழுக்க அழுதார் முடிக்காமல்.

மீண்டும் தொடர்ந்த பெரியவர்  "அவ்ளோ பெரிய வேலைல இருந்தும் ஒரு சாதாரணமாத்தான் இருப்பான். டிரஸ் கூட சாதாரணமாத்தான் இருக்கும். வளர்ந்தது எல்லாமே அனாதை ஆசிரமத்திலதான். எவ்ளோ சம்பாரிச்சாலும் அக்கௌண்ட்ல பேலன்ஸ் இருக்காது. ஏனா, இப்போ உள்ளவுங்க  ஆடம்பரத்துக்காக ஏதேதோ வாங்கி EMI கட்டிகிட்டு திரியுறப்போ, இவனோ முடியாதவங்களுக்கு, ஆசிரமத்துக்கு, மருத்துவத்துக்கு, படிப்புக்கு , ஸ்பான்சர்சிப் னு செலவு செஞ்சுகிட்டே இருப்பான்."

"அவன் நல்ல சூ, டிரெஸ் கூட விரும்ப மாட்டான். டிரெஸ்ல என்ன இருக்கு, நம்ம செயல்லதான் இருக்குன்னு சொல்வான்."

"வேலைக்குப் போறதே மத்தவங்களுக்கு  உதவி பண்லாம்னுதான். இவன் டிரெஸ் கோடு பத்தி கம்பெனி கூட கவலைப் படல. வேலைக்கு வந்தா போதும்னு தான் இருந்திருக்கும் போல" என்று சொல்லி முடித்தார்.

கதிரவனின் சக ஊழியர்களும் தங்களுக்குள் அவனை பெருமையாக பேசிக்கொண்டிருந்தனர். 

அதில் டேவிட் என்ற சக ஊழியர் "எந்தவித பார்ட்டிக்குப் போனாலும் டிரிங்ஸ் தொடுறதில்லை. மரியாதைக்கு வந்துட்டு உடனே கிளம்பிடுவான்"  என்றார்.

_*_

சாலினி என்ற பெண் "நான் கதிரவன்ட்ட எவ்ளோ டைம்ஸ் புரபோஸ் பண்ணேன். ஆனா சிரிப்பு மட்டுந்தான் பதிலா வரும். ஏனா, இல்லைனு மறுத்தா சங்கடப்படுவாங்களேன்னு ஒதுங்கி செல்வான். எந்த பொண்ணுங்க கிட்டையும் வழிஞ்சதே கிடையாது. அவன் எல்லார்ட்டையும் சமமாத்தான் பழகுவான்" என்று கண்ணீரைத் துடைத்துக்கொண்டே சொல்லிக் கொண்டிருந்தாள் மற்றவர்களிடம்.

_*_

கதிரவனுக்குச் சமமான பொறுப்பில் இருந்தவர் விவேக் " புரோமோசன் எனக்கு கெடைச்சப்ப , அவன் என்மீது கோபமோ பொறாமையோ படல... ஏனா அது அவனுக்கு கெடைக்க வேண்டியது. அவன் பதவி அதிகாரத்துக்கு ஆசைப்பட்டது கெடையாது " என்றார்.

_*_

மாதவன் என்ற இன்னொரு நண்பர் 
"நண்பர் ஒருவர் கடனால் அவதிப்பட்ட போது, எதிபாராத தொகை கொடுத்து உதவியவர் எந்தவித எதிர்பார்ப்புமின்றி. மாதத்திற்கு ஐம்பது லட்சம் சம்பாதித்தாலும் கதிரவன் வருவது ஸ்பிலென்டர் பைக்கில்தான். அவன் சிம்ப்ளிசிட்டிக்கு யாருமே ஈடு இல்லை " என்றார்.

_*_

கதிரவனிடம் அதிகம் பழகும் அஜய் என்பவர் "அவர் வாங்கின சம்பளத்துக்கு மற்றவர்களாக இருந்தால் வசதியா இருந்திருப்பாங்க

மொபைல்ல கூட , பேசுறதுக்கு இருந்தா போதும் என்றிருந்தார்".

காதல் அவரை அனுகியபோதுகூட "அன்புக்கு ஏங்குகிறவர்கள் அநேகம் உலகில். அவர்களுக்குதான் தேவை" என்றார்.

_*_

சமூக சேவகி காந்தியம்மாளோ "  பசங்க பெத்தவங்களுக்கே செய்ய தயங்குற உதவிய இந்த கிழவிக்கு செய்திருக்கிறார் அவர். ஏனா அவரோட கிட்னியாலதான் இப்போ உங்க முன்னாடி நிக்கிறேன். அவர்தான் தந்ததுனு கூட மறைக்க சொன்னவர். அவருக்கா இப்படி" என்று தலையிலடித்துக் கொண்டார்.

மீண்டும் தொடர்ந்த கணபதி பெரியவர் "அவனோட ஸ்பிலென்டர் பைக் கூட அவன் வாங்கல. அது என் மகனோடது. மகன் இறந்ததுக்குப் பிறகு சும்மா இருக்குனு நான் தான் கொடுத்தேன். அதுவும் சத்தியம் வாங்கி. இல்லனா பஸ்லதான் இப்பவும் வந்திருப்பான்" என்று சில நொடிகள் அமைதியாக இருந்தவர் மேலும் தொடர்ந்தார்.

" அவன் வயசுல காதல் காமம்னு இளைஞர்கள் சுத்த, கதிரவனோ வந்த நல்ல வரன்களை கூட வேண்டாம்னு தவிர்த்தவன். அவன் வீட்டுக் கண்ணாடிய கிரிக்கெட் பால் பல தடவ உடைச்சும் திட்டாம பால எடுத்து கொடுக்கிற  பொறுமைசாலி அவன்".

மேலும் தொடர்ந்தவர் "ஏதோ சொல்வாங்களே... காம குரோத லோப மதமாச்சரியங்கள துறந்தவன் ஞானினு. அது இவன்தான். நாம சொல்ற கடவுள கூட நாம பக்தியால பாராட்டுவோம். அதைக்கூட விரும்பாதவன். அவன் கடவுளுக்கும் மேல. உலகத்துல பிறந்து இறந்தவங்கள கணக்கிட்ரலாம் போல... ஆனா, அவன் வாழ்ந்த வாழ்க்கைய அளவிட்டு சொல்லமுடியாது" என்று கண்ணீர் மல்க கூறிவிட்டு ICU அறையின் வெளியில் காத்திருக்கிறார் இந்த ஞாநிக்காக.


கூடவே நாமும்.....


"துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து 
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று."


(பொழிப்பு: பற்றுகளைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரையில் பிறந்து இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடுவதைப் போன்றது.)

Comments

Post a Comment

Popular posts from this blog

தெரு நாய்

கனகவள்ளி - 3

மனையாள்