விழா
"பூவண்ணா ! பூவண்ணா!"
"டேய் ! பூவண்ணா!" குரல் கேட்டபடி இருந்தது...
__×__
"என்ன மச்சான்... ஒரே தடபுடலா இருக்கு. திருவிழா விருந்தோ?" என்றான் பூவண்ணன்.
"வாப்பா பூவண்ணா! தங்கச்சியும் மச்சானும் வந்திருக்காக, திருவிழாக்கு. அதான் ஒரு சேவ, ஒரு கோழினு." கையில் இருந்த உயிர்க்கோழிகளைத் தூக்கிக் காட்டிய பாலு தொடர்ந்தான்.
"போன தவணை தான் மழையுமில்லை மண்ணுமில்லை. ஒன்னும் பண்ணமுடியாம போச்சு. இந்த வர்சம் கடவுள் கண்ண தொறந்திருக்காப்ல. அதான். அப்ப்ப சந்தோசத்தை அப்பப்ப அடைஞ்சிடனும்டா பூவண்ணா...!"
"ஆமா... இந்த முறை வானம் கொஞ்சம் மனசு இறங்கிருக்கு.. இல்லனா. கஸ்டந்தான் மச்சான்."
"இந்த வர்சம் கொஞ்ச மழைக்கே நல்லா பச்சப் பசேல்னு இருக்கு. அடுத்த முறையும் இதே மாதிரி பேஞ்சா களைகட்டிரும். பூவண்ணா! எல்லா நம்ம நேரந்தாண்டா. மழை வரும். துட்டு வரும். திருவிழாவ ஜெகஜோதியா கொண்டாடுவோம் அடுத்த வர்சமும்."
கையில் இருந்த காசினை எண்ணியபடி வந்த ஊர்த்தலைவரைப் பார்த்த பூவண்ணன், "என்ன தலைவரே... கணக்குபுள்ளயா மாறிட்டீக போல...?" எனக் கூற,
"வாடா பூவண்ணா. உங்களுக்கு என்னடா, ஈசியா எவ்ளோ கணக்காச்சுனு கேட்ருவீக. பதில் சொல்ல வேண்டியது நாம இல்லை. என்னதான் மத்தவங்க சொன்னாலும் நாம ஒரு தடவ பார்த்திடனும்ல..." என்றார்.
அங்கிருந்து ஓடிவந்த ஒருவன், "தலைவரே தேருக்கு கலர் காகிதம் பத்தலையாம். இன்னும் மூனு கட்டு வாங்கனும். காசு கொடுத்தீங்கன்னா நல்லாருக்கும்..."
"அடேய் பூவண்ணா... பாத்தியா? இப்டிதான் திடீர் திடீர்னு கேப்பானுக...?கணக்கு வச்சுக்கணும்ல. பார்த்து செலவு பண்ணுங்கடா..." என்றபடி சில தாள்களை எடுத்துக் கொடுத்தார்.
"இன்னைக்கு நம்ம மண்டகப்படி. கடைசி மண்டகப்படி.. போன முறை முப்பதாயிரம் வந்திருக்கு நம்ம ஊர் சார்பா. இந்தமுறை குறைச்ச தான். 22000 தான் வந்திருக்கு. மத்த ஊர்க்காரனுக புள்ளி காசும் அவங்கவங்களுக்கு ஏத்தாமாதிரி கொடுத்திருகானுக." என்றான் பாலு.
"நிறைஞ்சு கொடுத்திருக்காக. முத்துமாரியம்மன் அருள் எல்லாம். இதே மாதிரி வர்ற காலத்துக்கும் நல்லபடியா மழை வந்து எல்லாரும் செழிப்பா வந்து மகிழ்ச்சியா தேர இழுத்தா போதும்" நெஞ்சில் கை வைத்து, கண் மூடி மேலே பார்த்தபடி கூறினார் தலைவர்.
"ஆமா தலைவரே நமக்கு கொண்டாட்டம் தான். வருசம் பூரா உழைக்கிறோம். அதுக்கான கூலிதான் இது. சொந்தபந்தம் எல்லாம் வந்து ஊரே களைகட்டும்ல. மழை நல்லா வரனும். ஊர் புல்லா செழிக்கணும்..." என்ற பூவண்ணன், நினைவு வந்தவனாக...
"அட கடவுளே... சரி தலைவரே பூசாரி கூப்டாகலாம்... இங்கன நின்னு பேசிட்டிருக்கேன்... நான் போய்ட்டு ஒரு எட்டு பாத்துட்டு வந்துடுறேன். நாடகத்துல பார்ப்போம் தலைவரே..." என்று கடந்தான்.
"முதல் மண்டகப்படி. வரகூரைச் சேர்ந்தது. அவர்கள் ஊர்மக்கள் எல்லாருமா வந்திருந்து பூஜைகளை சிறப்பா நடத்திட்டாக அவங்க முறையை. இராத்திரி வள்ளித் திருமணம் நாடகமும் ஏற்பாடு செஞ்சு மிரட்டிட்டாக..." என பக்கத்து ஊரைப் பாராட்டிய பெருசுகள்...
மீண்டும் தலைவரிடம் திரும்பி வந்த பூவண்ணன், "தலைவரே... இந்தா பாருங்க வரகூர் காரனுங்க பிரிச்சி மேஞ்சிட்டானுக. நாம அவனுகள விட சிறப்பா செய்யனும். காசு எவ்ளோன்னாலும் தர நான் ரெடி. நம்ம மரியாதைய நான் விட்டுத்தரமாட்டேன் தலைவரே..." கையிலிருந்த பணத்தை எடுத்து, தலைவரிடம் கொடுத்தான்.
"சரிப்பா. இங்க பாருங்க. பூவண்ணா 5000 கொடுத்திருக்கான். நம்ம ஊரு சனங்க இன்னிக்கு சாய்ங்காலத்துக்குள்ள காசு கொடுத்திடுங்க. அப்பதான் சரியா இருக்கும் காலைல அவுகளுக்கு கொடுக்க. கூட குறைச்சு குடுங்கப்பா..." என்றார் தலைவர்...
__×__
சுத்துபத்து ஊர்களும் மண்டகப்படி வச்சு ஏழுநாளும் ஒவ்வொரு ஊராக முறைப்படி சாமிக்கு பூஜை அபிசேகம் செஞ்சு மரியாதை செஞ்சு, ஆகா எவ்ளோ பாரக்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
காப்புகட்டி விரதம் இருந்து, வீடு வாசலை சுத்தம் செய்து எங்க பார்த்தாலும் மஞ்சள் மயமாகவே தெரியும் அளவுக்கு பக்தி தழும்புது திருவிழாக்கு.
"ம்ம்... எல்லாம் அந்த மாரியம்மன் தயவுதான்." என்ற படி கடந்த சில பெண்கள்...
"டேய் பாலு... அங்க பார்றா... இந்த பொண்ணுங்க எல்லாம் எங்கண்ணுக்கு தேவதைக மாதிரி தெரியுது...?"
பாலு பூவண்ணனிடம், "நீ அங்கன பாரு... உரண்ட இழுத்துகிட்டுத் திரியுறானுவ...!" என்று காடடிய இடத்தில், "என்னை அவன் திருவிழாக்கு கூப்டல, நான் ஏன்டா அவனோட பேசணும்...?" சில இளைஞர்கள்...
"இந்தாடி... நாளைக்கு வீட்டுக்கு வாடி. சாப்ட்டு வரலாம்"
"அப்பா... பலூன் வாங்கிக் குடுப்பா...!!!"
இப்படி பல குரல்களைக் கடந்தபடி நடந்து கொண்டே, "எல்லாரும் ஏதேதோ பேசிகிட்டு சந்தோசமா... இப்டி இருக்கனும்டா பாலு. எப்பவும் அதான் நம்ம ஆசை... ஒவ்வொரு நாளும் பாட்டும் கச்சேரி சந்தோசம்னு கொண்டாட்டம் தான் இந்த வாரம் முழுசும்..."
தலைவர், சில இளவட்ட பையன்களிடத்தில், "ஏம்ப்பா ராமு, பசங்களா! இளவட்டப் பசங்களாம் கோயிலுக்குப் போய் ஒத்தாசையா இருங்கப்பா. நெறய வேலை கெடக்கு. நீங்க இங்க சும்மா உக்காந்துகிட்டு" எனக் கூற...
"அட போங்க தலைவரே... வர்றோம்.. நீங்க கவலப்படாதீக நம்ம திருவிழா இது..." என்றனர்.
__*__
"அடேய் பூவண்ணா... உன் ஆள்றா..." என்றான் பாலு, கொஞ்சம் சத்தமாகவே.
"டே பாலு, சும்மா இருடா..." என்று பூவண்ணன் முணுமுணுக்க...
"ஏய் இந்தாடி குமுதா! இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க இந்த டிரெஸ்ல." என்றவள், குரலைத் தாழ்த்தி, "ஏய் அங்க பாரேன்... பூவண்ணா உன்னையே முறைச்சு பாத்துகிட்டு இருக்கான்" என்று கூற...
"அடி போங்கடி! நான் போறேன்..." என்று திரும்பிய குமுதா, இடது கண்ணோரத்தில் பூவண்ணனைத் திரும்பிப் பார்த்தாள்...
__*__
"என்ன சின்ராசு மாமா! நல்ல விளைச்சலா இந்த தடவ." குடும்பத்துடன் எதிரில் வந்த சின்ராசுவிடம்...
"இல்லடா பூவண்ணா... பரவாயில்லை..."
"ஏன் மாமா.. அதான் அத்தை கழுத்துல மஞ்ச கலர்ல மின்னுதே!" என்ற பூவண்ணன், "என்ன அத்தை, நல்லா இருக்கியளா...?" என கேட்க, அத்தை சிரித்தபடி தலையாட்டினாள்...
"போடா .. அது பழசு டா."
"சரி மாமா. நா வர்றேன். நெல்லு அரைக்க கொடுத்திருந்தேன்... போய்ட்டு வர்றேன் மில்லுக்கு..."
"சரி டா. நாடகத்துக்கு வா பார்ப்போம்."
"சரி மாமா."
_*_
"பாலு வர்ரியாடா! கோவிலுக்கு. தேருக்கு நேரம் ஆய்டுச்சு டா..."
"பூவண்ணா .. நீ போடா.. நான் வர்றேன்."
"சரி டா."
__*__
"பூ மிதிக்குறது, பால் குடம் தூக்குறது! முளைப்பாரி தூக்குறதுன்னு.. நம்ம ஊரு நம்ம ஊர்தான்."
"என்ன சரவணண்ணே! எங்களை எல்லாம் விருந்துக்கு கூப்டல. ம் இருங்க இருங்க."
"அட வாடா பூவண்ணா. உன்ன கவனிக்காம்லயா."
"இல்லண்ணே...சும்மா கேலிக்கு சொன்னேன்... வீட்டுக்கு வாங்கண்ணே..."
__*__
"யோவ் மைக்கு! தேருக்கு டைம் ஆச்சு. மைக்ல சொல்லு. எல்லாரையும் வர சொல்லு..." என்ற தலைவர்,
"சரிப்பா. பூவண்ணா! கவனிக்காம போறான் பாரு..." இன்னும் குரலை உயர்த்தி, "டேய் பூவண்ணா" என்றார்.
"சொல்லுங்க ! தலைவரே" பூவண்ணன் அருகில வர...
"தேருக்கு டைம் ஆச்சு... பூசாரியா வரசொல்லு. அவர விட்டா இன்னும் மணி ஆட்டிகிட்டே இருப்பாரு..."
"சரி சரி. இதோ போறேன்..."
__*__
"யோவ்... பாத்து போயா.. தடுக்கி விழுந்துடாம... அப்பறம் தேருக்குப் பதிலா உன்னை தூக்கிட்டு போய்டுற நிலம வந்துடாம..." என ஒரு குரல் கேட்கத் திரும்பினான்... கண்ணால் சிரித்தபடி நின்றிருந்தாள் குமுதா...
"குமுதா... சேட்டைடீ உனக்கு..." என்றாள் அவள் அருகில் நின்ற ஜெயா...
"அடி போடி. ஜெயா இதெல்லாம் லவ்ஸ் டி. உனக்கு புரியாது..." என்ற குமுதாவைப் பார்த்து சிரித்தபடி நகர்ந்தான் பூவண்ணன்.
___*__
"என்னம்மா தங்கச்சி... நல்லா இருக்கியா... கல்யாணத்த அப்ப பார்த்தது. மாப்ள நல்லா இருக்கீகளா...?"
"யாரு பூவண்ண மச்சானா... நல்லா இருக்கியா மாப்ள. நீ!"
"நமக்கென்ன! ஆத்தா புண்ணியத்துல/செழிப்பா இருக்கோம்..."
__*__
சின்ன குழந்தைகள் கையில் பலவண்ண பலூன்களை வைத்துக் கொண்டு இங்குமங்குமாக ஓடிக் கொண்டிருந்தார்கள்...
பெரியவங்க சிறியவங்கனு வயசு வேறுபாடில்லாமல் எல்லார் வாயிலும் குச்சி மிட்டாய் படாதபாடு பட்டது.
கோவில் தரிசனம் முடித்துவிட்டு, எல்லோரும் மகிழ்ந்த முகத்தோடு வந்து கொண்டிருந்தனர்.
"டேய்... பூவண்ணா வா டா. சாப்பிடலாம்..." என்றான் பாலு.
"மச்சி நீ போய் சாப்டு. சாப்டு. சொந்தம் எல்லாம் வந்துருக்காக... நான் வீட்டுக்கு போய்ட்டு வந்துடுறேன். நம்ம வீட்லயும் விருந்து தான்..."
__*__
"முருகேசா, ஏன்டா உனக்கு இந்த வேலை. நீ கல்லு மேல விழுந்தா பரவாயில்லை, அது உம்மேல விழுந்துடாம. திருவிழா நடக்கனும்டா..."
"பூவண்ணண்ணே! எங்க நீ தூக்கு..."
"போங்கடா.. சின்னப்பசங்க கிட்ட.. போய்!!"
__*__
"ஏ அய்யா. வாயா சாப்ட்டு போலாம்..." என்று அழைத்தாள் பாட்டி, சுருக்கம் விழுந்த முகத்திலும் சிரித்தபடி...
"இல்ல பாட்டி. இப்பதான் சாப்ட்டு வர்றேன். நீங்க சாப்டுங்க. சுரேசு வந்துட்டான்ல. அப்பறம் என்ன சந்தோசமா இருங்க பேரனை பாத்துகிட்டு..."
__*__
"தேர் இழுக்குறத பார்க்குறதே... ஒரு பரவசம் தான். எல்லாரும் தேரை சிவ கோசம், விஸ்னு கோசம்னு விண்ணைப் பிளக்குற மாதிரி மெதுவாக இழுத்துகிட்டு போறது. அட அட என்ன அழகு... இதுல மாம்பழம், பிஸ்கட், கொய்யா பழம்னு வேண்டுதலுக்கு தூக்கி எறியுறத கேட்ச் புடிச்சு தர்ரதே ஒரு சுகம்தான்..." என்றான் பூவண்ணன்.
"ஆமாண்டா... பூவண்ணா! நான் கூட ஒரு மாம்பழத்தை புடிச்சு கொடுத்தேன் ஆளுக்கு..." என்றான் பாலு.
"என்னடா பாலு..."
"எங்கடா உன் ஆளு! பூவண்ணா."
"அதோ.. அடேய் நாங்களும் லவ் ஸ்டார்ட் பண்ணி பல வர்சமாச்சு. போடா போடா..."
__*__
"டேய் பூவண்ணா! பூவண்ணா! எந்திரிடா... விடிஞ்சு வெயிலு மூஞ்சில அடிக்குது... தூக்கத்துல உளருற... எந்திரிடா..."
"என்னம்மா. நல்ல கனவு... ஊர்த்திருவிழா அவ்ளோ கூட்டமா... சொந்த பந்தமோட எப்டி இருந்தது தெரியுமா...?"
"டேய் போடா! சீக்கிரம்! ரேசன் கடைக்கு. கூட்டம் வந்துட போது..." என்று சொல்லிய அம்மா, வாசல் அருகே அமர்ந்த படி, "ஏன்டா சாப்பாட்டு அரிசிய சாப்ட முடியாம, ரேசன் கடைல வாங்குற அளவுக்கு ஆய்டுச்சு ஒழவுக்காரவுக நிலம... இதுல திருவிழாவாம்... மாரியம்மன் கோவிலுக்கு பூசாரிய புடிங்கடா மொதல்ல. அப்பறம் பார்க்கலாம் திருவிழாவ. 3000 சம்பளம் கூட தரமுடியல பூசாரிக்கு! இதுல திருவிழா வேற....?"
"அம்மா... அப்டி சொல்லாத. இந்த வருசம் திருவிழா நடக்கும். நீ வேணும்னா பாரு..." தூக்கக் கலக்கத்தில் கண்ணைத் துடைத்தபடி கூறினான் பூவண்ண்ன்.
"டேய். மழை இல்லாம நிலம் எல்லாம் காஞ்சு போயி, நமக்கே சாப்பாட்டுக்கே இல்ல. இதுல ஆடு மாடு வளர்க்குறதே பெரும்பாடு... இந்த நிலமையில... பூசாரியே பொறுத்து பொறுத்து பார்த்துதான் ஓடி போய்ட்டாரு. அவருக்கும் நாலு காசு வேணும்டா பூசை செய்ய... மொதல்ல சாமிக்கு தினம் பூஜை செய்ய முடியுதானு பாருங்க..."
"மழை இல்லை. வருமானம் இல்லை. அதான் முடியலம்மா. போன தடவை எவ்ளோ ஜோரா திருவிழா முடிச்சோம். இந்த தடவ ஆத்துல தண்ணி இல்ல. அதான் பூசாரிக்கு வருமானம் கூட கொடுக்க முடியலம்மா..."
"இப்போ புரியுதா மழை வந்தா தான் நமக்கு சோறு. அப்பறந்தான் சாமிக்கே பூசை... பூசைக்கே வழியில்ல. இதுல எங்கடா திருவிழா நடத்துறது...? மழை இல்லனா நமக்கு சோறுமில்லை சாமிக்கு பூசையுமில்லனு அப்பவே வள்ளுவர் சொல்லி இருக்காரு..." என்றாள் அம்மா.
"என்னான்னு..."
"ம்ம்ம்... மழை இல்லனா நமக்கும் சோலி கிடையாது. பூசாரிக்கும் சோலி கிடையாதுனு... சரி... சரி... கதை கேட்டது போதும். கொத்தனார் காலைலயே வேலைக்கு உன்ன வரச்சொல்லிட்டு போனாருடா... அரிசிய வாங்கி வச்சிட்டு போய்ட்டு வந்துடு..." அம்மா சொல்லி முடித்திருக்க, பூவண்ணனின் தூக்கம் மொத்தமும் கலைந்திருந்தது.
__*__
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
பொருள்: இவ்வுலகில் மழை பெய்யாது வறண்டு விடுமானால் தெய்வங்களுக்கு எடுக்கப்படும் விழாவும் நாள்தோறும் செய்யும் பூசையும் நடைபெறா
Great work👍nice👌
ReplyDeleteநன்றி...
Deleteபூவண்ணன், நல்ல பெயர்! திருவிழாவை பார்த்தது போல இருந்தது! கடைசில எதிர்பார்க்காத திருப்பம்! செம👌🏾
ReplyDelete